RSS

Monthly Archives: June 2021

ஸ்ரீமந் நாதமுனிகள் திருநக்ஷத்ரம்

ஸ்ரீமதே ராமாநுஜாய நம:

ஸ்ரீ பாலதந்வி குரவே நம:

தனியன்

ஜ்யேஷ்டாமாஸே த்வநூராதே ஜாதம் நாதமுநிம் பஜே|

ய: ஸ்ரீஸடாரே: ஸ்ருதவாந் ப்ரபந்த மகிலம் குரோ:

அர்த்தம்

ஆனி அனுஷத்தில் அவதரித்தவராய், ஆசார்யரான நம்மாழ்வாரிடமிருந்து எல்லா திவ்யப்ரபந்தங்களையும் கேட்டவரான நாதாமுனிகளிடம் பக்தி செய்கிறேன்.

வைபவம்:

ஆழ்வார்கள் காலத்திற்குப் பிறகு நெடுநாள் வரையில் தர்சன நிர்வாஹகர்களான ஆசார்யர்கள் ஒருவரும் இல்லாமல் இவ்வுலகம் இருள்மூடியே இருந்ததனால் பேரருட்கடலான எம்பெருமான் இவ்விருளை நீக்கி ஞானவொளியை வளர்க்கத் திருவுள்ளம்பற்றி ஸ்ரீமந் நாதமுனிகள் முதலான ஸதாசார்யர்களை அவத்தரிக்கச்செய்து அவர்களின் உபதேசங்களாலும் அநுஷ்டாநங்களாலும் ஜகத்தை வாழ்வித்து அருளினான்.

ஆசாரியர்களில் முதல்வரான ஸ்ரீமந்நாதமுனிகள் ஸேனைமுதலியாருடைய முக்கியமான படைத்தலைவரான கஜாநநர் என்னும் யானை முகமுடைய நித்யஸுரியினுடைய அம்ஸமாய், சோழ தேசத்தில் உள்ள வீரநாராயணபுரம் என்னும் காட்டுமன்னார்கோவிலில் கிபி 823 ஆம் ஆண்டு ஆனி மாதம் 7ஆம் தேதி புதன்கிழமை பௌர்ணமி திதி அநுராதா நக்ஷத்ரத்தில் அவதரித்தார். ஸ்ரீரங்கநாதன் என்பது அவர் திருநாமம். அவர் யோகத்திலே வல்லவராய் இருந்தபடியால் முனி என்கிற சப்தம் சேர்ந்து ஸ்ரீரங்கநாதமுனி என்று வழங்கப்பட்டார்.

ஒரு சமயம் வீரநாராயணபுரத்து எம்பெருமானை சேவிக்க வந்த ஸ்ரீவைஷ்ணவ சேவார்த்திகள் “ஆராவமுதே” என்று தொடங்கும் திருவாய்மொழியை மன்னனார் திருமுன்பே அநுஸந்தித்தருள, அதைக் கேட்ட நாதமுனிகள் மிகவும் உகந்து, இத்திருவாய்மொழியின் சாற்றுப்பாசுரத்திலே, “ஓராயிரத்துள் இப்பத்தும்” என்று அருளிச்செய்யப்பட்டு இருக்கிறதே, ஆயிரம் பாசுரங்களும் உங்களுக்குத் தெரியுமா? என்று அவர்களிடம் வினவினார். அவர்களும் இப்பத்து பாசுரங்களைத் தவிர மற்றவை கிடைக்கவில்லை என்று கூறிவிட்டார்கள். பாசுரத்தில் “குருகூர் சடகோபன்” என்று இருப்பதால் நாதமுனிகள் திருக்குருகூருக்குச் சென்று ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவம்சத்தில் அவதரித்த ஸ்ரீ பராங்குசதாசரை விசாரித்தார். அவரும் திருவாய்மொழியும் மற்ற திவ்யப்ரபந்தங்களும் நீண்ட காலத்துக்கு முன்பே மறைந்து விட்டன. ஆனால் நம்மாழ்வாரைப் பற்றி எங்கள் குலகூடஸ்தர் ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் அருளிச்செய்த “கண்ணிநுண்சிறுத்தாம்பு” என்ற திவ்யப்ரபந்தத்தை எங்களிடம் அளித்து இதை ஒரு முகமாக ஆழ்வார் திருமுன்பே இருந்து அவருடைய திருவடிகளைத் தியானித்துக் கொண்டு நியமத்துடன் பன்னீராயிரம் முறை அநுசந்தித்தால் ஆழ்வார் ப்ரத்யக்ஷமாவார் என்று அருளிச்செய்ததாக ஸ்ரீமந் நாதமுனிகளிடம் தெரிவித்தார்.

நாதமுனிகளும் கண்ணிநுண்சிறுத்தாம்பை அவரிடம் ப்ரார்த்தித்து உபதேசமாகப் பெற்று ஆழ்வார் திருமுன்பே பன்னீராயிரம் முறை நியமத்துடன் அநுசந்தித்தார். நம்மாழ்வார் அவருக்கு ப்ரத்யக்ஷமாகி உமக்கு என்ன வேணும் என்று கேட்க, திருவாய்மொழி முதலான திவ்யப்ரபந்தங்களை அடியேனுக்கு இரங்கி அருளவேணும் என்று நாதமுனிகள் விண்ணப்பம் செய்ய, பரமகாருணிகரான நம்மாழ்வார் திருவாய்மொழி முதலான திவ்யப்ரபந்தங்களையும், அவற்றின் பொருளையும், அஷ்டாங்க யோகரஹஸ்யத்தையும், ரஹஸ்யத்ரயம் முதலான ஸகல சாஸ்திரங்களையும் சேர்த்தே அநுக்ரஹித்து அருளினார்.

மிகவும் ப்ரயாஸப்பட்டு திவ்யப்ரபந்தங்களைப்பெற்று தம் மருமக்களான மேலையகத்தாழ்வான் கீழையகத்தாழ்வான் இருவருக்கும் இசையோடு கற்பித்து எம்பெருமான் சந்நிதிகளில் பாடுவித்தார். நாதமுனிகள் மற்றும் இந்த இருவருமே நாம் இப்போது சேவித்துக் கொண்டிருக்கும் அரையர் என்று திவ்யப்ரபந்தம் விண்ணப்பம் செய்வாருடைய மூலபுருஷர்கள் ஆவர்.

திவ்யப்ரபந்தங்களின் ஸேவாக்ரமம் இவர் ஏற்படுத்தியதே. திருமங்கை ஆழ்வார் நடத்தி, பின்பு நின்றிருந்த திருவாய்மொழித் திருநாள் என்னும் திரு அத்யயன உத்ஸவத்தையும் மறுபடி நடக்கும் படி ஏற்படுத்தியதும் ஸ்ரீமந்நாதமுனிகளே.

வடமொழி வேதத்துக்கு வேதவியாச பகவான் போலே தமிழ் மறைக்கு ஸ்ரீமந் நாதமுனிகள். ஆழ்வார்களின் அருளிச்செயல்களை முதலாயிரம், பெரிய திருமொழி, திருவாய்மொழி மற்றும் இயற்பா என நான்காக வகுத்து, முதல் மூன்றையும் இசையாகக் கானம் செய்தும் நான்காமதை இயலாக ஓதியும் வந்தார். திருமங்கை மன்னன் திருவாய்மொழிக்குப் பெற்றது போல் நாதமுனிகள் அரங்கநாதனை வேண்டி திருமொழிக்கும் வேத சாம்யம் பெற்றார். நாதமுனிகள் காலந்தொட்டு திருவரங்கத்தில் இந்த ஒப்புயர்வற்ற அத்யயன உத்ஸவம் இருபத்தொரு நாள் விழாவாக நடைபெற்று வரலாயிற்று. திவ்யப்ரபந்தங்கள் நமக்குக் கிடைப்பதற்கு மூல காரணமாய் இருந்த ஸ்ரீமந் நாதமுனிகளுக்கு வைணவ உலகம் பட்டிருக்கும் கடன் அளவிடமுடியாது.

இவருடைய திருவடிகளில் ஆஸ்ரயித்த சிஷ்யர்கள் எண்மர்.

உய்யக்கொண்டார், குருகைக்காவலப்பன்,

நம்பி கருணாகர தாஸர்,

ஏறுதிருவுடையார்,

திருக்கண்ணமங்கையாண்டான்,

வானமாமலைத்தேவியாண்டான்,

உருப்பட்டூர் ஆச்சான்பிள்ளை மற்றும்

சோகத்தூர் ஆழ்வான் ஆகியோர் ஆவர்.

ஸ்ரீமந் நாதமுனிகள் மூலம் அனாதியான ஸ்ரீவைஷ்ணவ ஸம்ப்ரதாயம் இவ்வுலகில் நம்மாழ்வார் அருளால் ப்ரஸித்தமாயிற்று.

அருளிச்செய்த நூல் – நியாய தத்வம், யோக ரஹஸ்யம்

இப்படி இருக்கையில் ஒருநாள் சோழராஜன் ஸபரிவாரனாய் வேட்டையாட வந்து திரும்பிப்போகையில், இவருடைய பெண்பிள்ளைகள் வந்து “நம் அகத்திலே ஒரு குரங்கும் இரண்டு வில்லிகளும் ஒரு பெண்பிள்ளையுமாக வந்து நாதமுனிகள் எங்கே என்று தேடிப்போனார்கள்” என்று தெரிவிக்க, அது கேட்ட நாதமுனிகள் பெருமாளும், பிராட்டியும், இளையபெருமாளும் சிறியதிருவடியுமாக இந்நால்வர் வந்திருக்கக் கூடும் என்று எண்ணி, அவர்களை பின் தொடர்ந்து சென்ற நாதாமுனிகள் எதிரே வந்தவர்களிடம் இப்படி யாரையேனும் பார்த்தீர்களா என்று கேட்டுக்கொண்டே கங்கைகொண்டசோழபுரத்திற்கு முன்பு அமைந்துள்ள செம்போடை என்னும் சொர்க்கப்பள்ளம் என்ற சிற்றூர் வரை சென்று அங்கு இருந்தவர்களிடம் விசாரிக்க, அவர்கள் நாங்கள் பார்க்கவில்லை என்று தெரிவித்தார்கள். நாதமுனிகளும் ஏங்கி விழுந்து மோஹித்து அங்கேயே திருநாடு அலங்கரித்தார். இதுவே நாதமுனிகளின் திருவரசு அமைந்துள்ள இடம் ஆகும்.

வாழித்திருநாமம்

ஆனிதனில் அனுட்டத்தில் அவதரித்தான் வாழியே

ஆளவந்தாருக்கு உபதேசம் அருளிவைத்தான் வாழியே

பானுதெற்கிற் கண்டவன் சொல் பல உரைத்தோன் வாழியே

பராங்குசனார் சொற்பிரபந்தம் பரிந்து கற்றான் வாழியே

கானமுறத்தாளத்திற் கண்டு இசைத்தான் வாழியே

கருணையினால் உபதேசக் கதியளித்தான் வாழியே

நானிலத்திற் குருவரையை நாட்டினான் வாழியே

நலந்திகழ் நாதமுனி நற்பதங்கள் வாழியே

வாழி எதிராசன்

ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

 

பெரியாழ்வார் திருநக்ஷத்ரம்

ஸ்ரீமதே ராமாநுஜாய நம:

ஸ்ரீ பாலதந்வி குரவே நம:

தனியன்

மிதுநே ஸ்வாதிஜம் விஷ்ணோ ரதாம்ஸம் தந்விந: புரே|

ப்ரபத்யே ஸ்வஸுரம் விஷ்ணோ: விஷ்ணுசித்தம் புரஸ்ஸிகம்||

அர்த்தம்

ஆனி மாதம் ஸ்வாதி நக்ஷத்திரத்தில், ஸ்ரீவில்லிபுத்தூரில், விஷ்ணுவின் வாஹனமான கருடனின் அம்சமாய், பூர்வஸிக ஸ்ரீ வைஷ்ணவ ப்ராஹ்மண குலத்தில் அவதரித்தவராய், ரங்கநாதனுக்கு மாமனாரான விஷ்ணு சித்தர் என்னும் பெரியாழ்வாரை ஸரணடைகிறேன்.

இவர் குரோதந வருடத்தில் ஆனி மாதம் ஸுக்லபக்ஷ ஏகாதசியில், ஸ்வாதி நக்ஷத்ரத்தோடு கூடிய ஞாயிற்றுகிழமையன்று, ஸ்ரீவில்லிபுத்தூரிலே பூர்வஸிக ஸ்ரீவைஷ்ணவ குலதிலகராய், வேதப் பொருள் வல்லவரான முகுந்த பட்டருக்கும் பத்மா என்னும் பதிவ்ரதாஸிரோமணிக்கும் ஐந்தாவது புத்திரராக வேதஸ்வரூபனான கருடனின் அம்ஸமாக அவதரித்தவர் ஸ்ரீ பெரியாழ்வார்.

பெரியாழ்வாருடைய இயற்பெயர் விஷ்ணு சித்தர். வடபெருங்கோயிலுடையானுடைய நிர்ஹேதுக கடாக்ஷத்தாலே எம்பெருமான் திருவுள்ளத்துக்கு எந்த கைங்கர்யம் உகப்போ, அதுவே நாம் செய்யத்தக்கது என்று உறுதி கொண்டு திருநந்தவனம் அமைத்து வடபெருங்கோயிலுடையானுக்கு திருமாலை கட்டிச் சாத்தி வந்தார்.

அந்தக் காலத்தில் மதுரையை ஆண்டு வந்த வல்லபதேவன், நற்கதி அடைய வழியைச் சிந்தித்து தம்முடைய புரோஹிதரான செல்வநம்பியின் உபதேசத்தினால் பல வித்வான்களை ஒன்று திரட்டிப் பரதத்வ நிர்ணயம் பண்ணவேண்டி அனைத்து பண்டிதர்களுக்கும் அழைப்பு விடுத்தான். ஸ்ரீவில்லிபுத்தூர் எம்பெருமான் விஷ்ணுசித்தரைக் கொண்டு பரதத்வ நிர்ணயம் செய்ய திருவுள்ளம் கொண்டு, அவருடைய கனவிலே இவருக்கு நியமித்து, ஸர்வஜ்ஞராம்படியான விசேஷ கடாக்ஷமும் செய்தருளி வித்வத் சபைக்கு எழுந்தருளச் செய்தார்.

விஷ்ணுசித்தரும் அங்கு எழுந்தருளி ஸ்ரீமந் நாராயணனே பரமபுருஷன் என்பதை ஸ்ருதி, ஸ்மிருதி, இதிஹாஸ புராணாதிகளைக்கொண்டு பலவாறாக உபந்யசித்து பரதத்வ ஸ்தாபநம் பண்ணினவளவிலே, வல்லபதேவனும் செல்வநம்பியும் அவருடைய ஞான வைபவத்தைக் கண்டு கொண்டாடி ஸாஷ்டாங்கமாக விழுந்து சேவித்தனர். அரசனால் ஒரு கம்பத்தின் உச்சியில் கட்டப்பட்டிருந்த பொற்கிழி தானாகவே ஆழ்வார் முன்னே தாழ வர, பகவத் க்ருபை என்று ஆழ்வாரும் உவந்து அதை அறுத்துக் கொண்டருளினார்.

பரதத்வ நிர்ணயம் செய்தருளின ஆழ்வாரை ஸ்ரீ வல்லபதேவன் தன் பட்டத்து யானையின் மேலேற்றி மஹோத்சவம் செய்விக்க, தனயனின் சிறப்பைக் காணவந்த தந்தையைப் போலே பரமபதனான எம்பெருமான் கருடாரூடனாய், ஸங்க சக்ர தரனாய், ஸ்ரீ பூமி ஸமேதனாய் வேதாந்த விழுப்பொருளின் மேலிருந்த விளக்கான ஸ்ரீமந் நாராயணன் இப்பூமியில் உள்ள அனைவரும் காணும்படி ஆகாயத்தில் தோன்றினான். ஆழ்வாரும் எம்பெருமானை சேவித்து வியந்து யானைமணிகளைத் தாளமாகக் கொண்டு எம்பெருமானுக்கு திருப்பல்லாண்டு பாடினார்.

பின்னர் ஸ்ரீவில்லிபுத்தூருக்கு எழுந்தருளி கிழியிற் கிடைத்த பொருள்களை எல்லாம் வடபெருங்கோயிலுடைய பெருமாள் திருமுன்பே வைத்துத் தெண்டன் ஸமர்ப்பித்து, பழையபடி நந்தவன கைங்கர்யத்தில் ஈடுபட்டு வருகையில், க்ருஷ்ண அவதாரத்திலே மிகவும் ஈடுபட்டு அனுபவித்து இருக்கையில், அந்த அனுபவத்தால் உண்டான ஆனந்தம் உள்ளடங்காமல் பெருகவே கிருஷ்ண அவதாரம் தொடங்கி பால்யலீலைகளை ஒன்றும் விடாமல் அனுபவிக்கும்படி பெரியாழ்வார் திருமொழியை அருளிச்செய்தார்.

திருப்பல்லாண்டுக்கு பெரியவாச்சான் பிள்ளை அருளிச்செய்த வ்யாக்யானத்தின் மூலமாகவும், பெரியாழ்வார் திருமொழிக்குப் பெரியவாச்சான் பிள்ளையும், அவருடைய வ்யாக்யானத்தில் லோபம் அடைந்த முதல் நானூறு பாசுரங்களுக்கு மணவாளமாமுனிகள் அருளிச்செய்த வ்யாக்யானத்தின் மூலமாகவும், பெரியாழ்வார் திருமொழிக்கு திருவாய்மொழிப்பிள்ளை அருளிச்செய்த ஸ்வாபதேஸ வ்யாக்யானத்தின் மூலமாகவும் பெரியாழ்வார் உலகுய்ய அருளிச்செய்த இப்பிரபந்தங்களின் பொருளை நாம் உணரலாம்.

வாழித்திருநாமம்

நல்லதிருப் பல்லாண்டு நான் மூன்றோன் வாழியே

நானூற்று அறுபத்தொன்றும் நமக்குரைத்தான் வாழியே

சொல்லரிய வானிதனில் சோதிவந்தான் வாழியே

தொடைசூடிக்கொடுத்தவள் தன் தொழுந்தமப்பன் வாழியே

செல்வநம்பி தன்னைப்போல் சிறப்புற்றான் வாழியே

சென்று கிழியறுத்து மால் தெய்வமென்றான் வாழியே

வில்லிபுத்தூர் நகரத்தை விளக்கினான் வாழியே

வேதியர்கோன் பட்டர்பிரான் மேதினியில் வாழியே

வாழி எதிராசன்

ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

 

வாதிகேஸரி அழகிய மணவாள ஜீயர் ஸ்வாமி திருநக்ஷத்ரம்

ஸ்ரீமதே ராமாநுஜாய நம:

ஸ்ரீ பாலதந்வி குரவே நம:

தனியன்

ஸுந்தரஜாமாத்ருமுநே: ப்ரபத்யே சரணாம்புஜம்|

ஸம்ஸாரார்ணவ ஸம்மக்ந ஜந்து சந்தாரபோதகம்||

அர்த்தம்

ஸம்ஸாரக்கடலில் அமிழ்ந்த ஜந்துக்களைத் தாண்டுவிக்கும் ஓடம் போன்றதான (வாதிகேஸரி) அழகியமணவாள ஜீயரின் திருவடித் தாமரையை ஸரணடைகிறேன்.

இவர் அருளிய நூல்களில் ஒன்றான “தத்வ நிரூபணம்” என்னும் க்ரந்தத்தின் முதல் ஸ்லோகம் மற்றும் அர்த்தம்:

ஸ்லோகம்

அபயப்ரதநாமாநாம் அஸ்மத் குரும் அஹம் பஜே|

யத்கடாக்ஷாதயம் ஜந்து: அபுநர்ஜந்மதாம் கத: ||

அர்த்தம்

ஒன்றும் அறியாத விலங்கு போல் இருந்த அடியேன், எவருடைய கடாக்ஷத்தால் பிறவாமை பெற்றேனோ, அத்தகைய பெருமை பெற்ற அபயப்ரதர் என்னும் திருநாமமுடைய நம் ஆசார்யரை அடியேன் வணங்குகிறேன்.

பெரியவாச்சான் பிள்ளைக்கும், நாயனாராச்சான் பிள்ளைக்கும் சிஷ்யரான வாதிகேஸரி அழகியமணவாளச்சீயர் திருவாய்மொழிக்குப் பதவுரையாகப் பன்னீராயிரம் க்ரந்தங்கள் கொண்டதாக அருளிச்செய்த உரை பன்னீராயிரப்படி என்று பெயர் பெற்று விளங்குகிறது.

மேலும் இவர் அருளிய க்ரந்தங்கள்:

1. திருவிருத்தம் ஸ்வாபதேஸ உரை

2. திருவாய்மொழிகளுக்கு ஒன்றோடு ஒன்று தொடர்பைச் சொல்லும் ஸம்ஸ்க்ருதபத்ய க்ரந்தமான த்ரமிடோபநிஷத் ஸங்கதி

3 தத்வங்களை விளக்கும் ஸம்ஸ்க்ருதகத்ய க்ரந்தமான தத்வ தீபம்

4 தத்வ தீபம் என்ற நூலுக்கு விளக்கமாக மணிப்ரவாளநடையில் அருளிச்செய்த வ்யாக்யானமான தீபப்ரகாஸம்

5. தீபஸங்க்ரஹம்

6 தத்வ நிரூபணம்

7 ரஹஸ்யத்ரய காரிகாவளி

8 பகவத்கீதை வெண்பா

ஆகியவை ஆகும்.

இவருடைய சிஷ்யர் – திருமாலையாண்டான் திருவம்சத்தில் அவதரித்த யாமுனாச்சார்யர்

பூர்வாஸ்ரம திருநாமம் – வரதராஜர்

உத்தம ஆஸ்ரமத்தில் இவருடைய திருநாமம் – ஸுந்தரஜாமாத்ருமுனி(அழகிய மணவாளச்சீயர்)

பல வாதிகளை ஜெயித்த காரணத்தினால் “வாதிகேஸரி” என்னும் பட்டப் பெயரையும் பெற்றார்.

வாழி எதிராசன்

ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

 

வள்ளல் வடக்கு திருவீதிப்பிள்ளை திருநக்ஷத்ரம்

ஸ்ரீமதே ராமாநுஜாய நம:

ஸ்ரீ பாலதந்வி குரவே நம:

தனியன்

மிதுநே ஸ்வாதிஸம்பூதம் கலிவைரிபதாஸ்ரீதம்|

உதக்ப்ரதோளீ நிலயம் க்ருஷ்ணபாதம் அஹம் பஜே||

அர்த்தம்:

ஆனி ஸ்வாதியில் அவதரித்தவராய் நம்பிள்ளையின் திருவடிகளை ஆஸ்ரயித்தவரான வடக்குத் திருவீதிப்பிள்ளையை வணங்குகிறேன்.

தனியன்

ஸ்ரீ க்ருஷ்ணபாத பாதாப்ஜே நமாமி ஸிரஸா ஸதா |

யத்ப்ரஸாதப்ரபாவேந ஸர்வஸித்திரபூந்மம||

அர்த்தம்

எவருடைய அருளின் பெருமையால் எனக்கு ஜ்ஞான பக்தி வைராக்யங்களாகிற எல்லா ஸித்திகளும் கிடைத்தனவோ, அத்தகைய ஸ்ரீக்ருஷ்ணர் என்னும் வடக்குத்திருவீதிப்பிள்ளையின் திருவடித் தாமரைகளைத் தலையால் எப்போதும் வணங்குகிறேன்.

வைபவம்

ஆனி மாதத்தில் பெரியாழ்வாருடைய திருவவதார நன்னாளாகிய ஸ்வாதி நக்ஷத்ரத்தில், முடும்பைக் குடியில் ஸ்ரீவத்ஸ கோத்ரத்தில் யஜுஸ்ஸாகை ஆபஸ்தம்பஸுத்ரத்தில் ஸ்ரீக்ருஷ்ணபாதர் என்னும் வடக்குத்திருவீதிப்பிள்ளை அவதரித்தார்.

அஷ்டாதச ரஹஸ்யங்களை அருளிச்செய்த பிள்ளைலோகாசாரியர்க்கும், ஆசார்ய ஹ்ருதயம் அருளிச்செய்த அழகிய மணவாளப்பெருமாள் நாயனாருக்கும் திருத்தந்தையார் இவர்.

இவருடைய இயற்பெயர் ஸ்ரீகிருஷ்ண மஹாகுரு.

இவருடைய ஆசார்யன் – நம்பிள்ளை

நம்பிள்ளையின் அந்தரங்க சிஷ்யரான வடக்குத்திருவீதிப்பிள்ளை, நம்பிள்ளை அருளிச்செய்த திருவாய்மொழியின் அர்த்த உபந்யாசத்தைப் பகலெல்லாம் கேட்டு தரித்து நின்று, ஓரெழுத்தும் விடாமலும், மாற்றாமலும் இரவெல்லாம் எழுதி வ்யாக்யானம் முடிந்தவுடன் அதை நம்பிள்ளையின் திருமுன்பே சமர்ப்பித்தார்.

நம்பிள்ளையும் ஸ்ரீகோஸத்தைக் கடாக்ஷித்து மிகச் சுருக்கமும் மிக விரிவுமில்லாமல், ஸ்ருதப்ரகாசிகைப் போலே முப்பத்து ஆறாயிரம் க்ரந்தங்கள் கொண்டு அமைந்திருப்பதைக் கண்டு மிகவும் உகந்தாராம். ஆனாலும் தன்னுடைய அனுமதியில்லாமல் பட்டோலை கொண்டபடியால் அதை வாங்கி உள்ளே வைத்துக்கொண்டாராம். இந்த வ்யாக்யான க்ரந்தமே “ஈடு முப்பத்து ஆறாயிரப்படி” என்று புகழ்பெற்று விளங்குகிறது.

வாழித்திருநாமம்

ஆனிதனில் சோதி நாள் அவதரித்தான் வாழியே

ஆழ்வார்கள் கலைப்பொருளை ஆய்ந்து உரைப்போன் வாழியே

தான் உகந்த நம்பிள்ளை தாள் தொழுவோன் வாழியே

சடகோபன் தமிழ்க்கு ஈடு சாற்றினான் வாழியே

நானிலத்தில் பாடியத்தை நடத்தினான் வாழியே

நல்ல உலகாரியனை நமக்கு அளித்தான் வாழியே

ஈனமற எமையாளும் இறைவனார் வாழியே

எங்கள் வடவீதிப்பிள்ளை இணையடிகள் வாழியே

வாழி எதிராசன்

ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

 

ஸ்ரீ திருக்கோட்டியூர் நம்பி திருநக்ஷத்ரம்

ஸ்ரீமதே ராமாநுஜாய நம:

ஸ்ரீ பாலதந்வி குரவே நம:

வைகாசி ரோஹிணி

ஸ்ரீ பெரியாழ்வாருக்குப் பரம ஆப்தரான செல்வ நம்பியின் வம்சத்திலே ஸ்ரீ புண்டரீகர் என்னும் நித்யஸுரியின் அம்ஸமாய், பூர்வஸிக ஸ்ரீவைஷ்ணவ ப்ராஹ்மண குலத்திலே அவதரித்த ஸ்ரீ திருக்கோட்டியூர் நம்பியின் திருநக்ஷத்ரம்.

தனியன்

வைஸாக ரோஹிண்யுதிதம் கோஷ்டீ பூர்ணம் ஸமாஸ்ரயே|

சரமஸ்லோக தாத்பர்யம் யதிராஜாய யோவதத்||

ஸ்ரீ வல்லப பதாம்போஜ தீபக்த்யம்ருத ஸாகரம் |

ஸ்ரீமத் கோஷ்டீபுரீ பூர்ணம் தேஸிகேந்த்ரம் பஜாமஹே ||

அர்த்தம்:

ஸ்ரீய:பதியின் திருவடித் தாமரையில் ஞானமும் பக்தியுமாகிற அமுதங்களுக்குக் கடல் போன்றவரும், திருக்கோட்டியூர் நம்பியென்னும் பெயருடையவருமான ஆசார்ய உத்தமரை ஆஸ்ரயிக்கிறோம்.

பரமாசார்யரான ஆளவந்தார் அவதரித்தப் பதினோரு வருடங்கள் கழிந்த பின் ஸர்வஜித் வருடம், வைகாசி மாதம் ரோஹிணி நக்ஷத்ரம் காஸ்யப கோத்ரத்தில் பெரியாழ்வாருக்கு பரம ஆப்தரான செல்வநம்பியின் திருவம்சத்தில் ஸ்ரீ புண்டரீகர் என்னும் நித்யசூரியின் அம்ஸமாய் பூர்வஸிக ஸ்ரீவைஷ்ணவ ப்ராஹ்மண குலத்திலே குருகேசர் (திருக்குருகைப்பிரான்) என்னும் திருநாமம் உடையவராய் அவதரித்தவர் ஸ்ரீ திருக்கோட்டியூர் நம்பி.

நாதமுனிகளிடமிருந்து உய்யக்கொண்டார் மணக்கால்நம்பி மூலம் கிடைத்த பவிஷ்யத் ஆசார்ய விக்ரஹத்தை ஆளவந்தார் தம் சரமதஸையிலே இவரிடம் ப்ரஸாதித்து, அது வந்த வழியையும் அருளிச்செய்து, ரஹஸ்ய அர்த்தங்கள் அனைத்தையும் ஸ்ரீ ராமாநுஜருக்கு உபதேசிக்கும்படியும் நம் தரிசனத்தை அவர் திருநாமத்தாலே விளங்கவைக்கும்படியும் நியமித்துச் சென்றார்.

ஸ்ரீ ராமாநுஜருக்கு திருமந்திரம் மற்றும் சரம ஸ்லோகத்தின் அர்த்தத்தை உபதேசித்தார்.

கருணைக்கடலான ஸ்ரீ ராமாநுஜருக்கு எம்பெருமானார் என்று திருநாமம் சாற்றியாருளியவர் ஸ்ரீ திருக்கோட்டியூர் நம்பி.

ஸ்வாமி திருமாலையாண்டானிடம் திருவாய்மொழிக்கு அர்த்தம் கேளுமென்று ஸ்ரீ ராமானுஜருக்கு நியமித்தார்.

ஸ்ரீ ராமாநுஜருக்கு தளிகை பண்ணி ப்ராஸாதிக்கும் படி கிடாம்பியாச்சானை நியமித்தவர் ஸ்ரீ திருக்கோட்டியூர் நம்பி.

இவருடைய வைபவம் பற்றி ஆறாயிரப்படி குருபரம்பரா ப்ரபாவம், சரமோபாய நிர்ணயம், வார்த்தாமாலை மற்றும் ஆசார்ய வைபவ மஞ்சரி ஆகிய க்ரந்தங்களைக் கொண்டு தெரிந்து கொள்ளலாம்.

வாழித்திருநாமம்

மன்னியசீர் ஆளவந்தார் மலர்ப்பதத்தோன் வாழியே

வைகாசி ரோஹிணி நாள் வந்துதித்தோன் வாழியே

இன்னிள வஞ்சிக்கு இனிதுரைத்தான் வாழியே

எம்பெருமானார் எனும் பேர் இயம்புமவன் வாழியே

தென்னணியாம் காசிப கோத்திரத்து உதித்தான் வாழியே

திருக்குருகைப்பிரான் எனும் பேர் திகழ வந்தோன் வாழியே

முன்னர் அரும் பெரும்பூதூர் முனிக்கு உரைத்தோன் வாழியே

மொழிந்த திருக்கோட்டிநம்பி மூதுலகில் வாழியே

காசிபன் தன் கோத்திரத்தைக் கருதிவந்தோன் வாழியே

கலை அனைத்தால் முன்னவர்க்குக் கதியளித்தோன் வாழியே

மாசற மெய்ப்பொருள் எதிக்கு வழங்குமவன் வாழியே

வையகம் உன் தரிசனத்தால் வாழும் என்றான் வாழியே

ஏசறவே உகந்து எதியை எடுத்து அணைத்தான் வாழியே

எம்பெருமானார் எனும் பேர் இயம்புமவன் வாழியே

தேசுபுகழ்ச்செல்வன் மொழி தேர்ந்து உரைப்போன் வாழியே

திருக்கோட்டியூர் நம்பி சகதலத்தில் வாழியே

ஈரேழு மூன்று ஒன்றில் இதம் உரைத்தான் வாழியே

ஏற்றமாம் ஆளவந்தார் இணையடியோன் வாழியே

ஈர் எழுவருக்கும் பதம் ஈயுமவன் வாழியே

எம்பெருமானார் எனும் பேர் இயம்புமவன் வாழியே

நாலேழில் நாலாநாள் நாடி வந்தோன் வாழியே

நம் மதுரகவி நிலையை நண்ணினான் வாழியே

நாலேழுநாலெழுத்தை நன்குரைத்தான் வாழியே

நங்கள் திருக்கோட்டியூர் நம்பி நற்பதங்கள் வாழியே

அல்பகலும் ஆளவந்தார் அடிநினைவோன் வாழியே

அனவரதம் தெர்க்காழ்வார்க்கு ஆட்செய்வோன் வாழியே

வெல்பொருள் வெளியிட எதியை வெறுத்துகந்தான் வாழியே

மேதிநியோர் உய்வரென்று மெச்சினான் வாழியே

உள் மந்திரம் எதிராசர்க்கு ஒளித்து உரைத்தான் வாழியே

உந்துமதத்தெதியை உகந்தணைத்தான் வாழியே

செல்வநம்பிகுலம் தழைக்க செகத்து உதித்தான் வாழியே

திருக்கோட்டியூர் நம்பி சகதலத்தில் வாழியே

வாழி எதிராசன்

ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

 

ஸ்ரீ காரிமாறபட்டர் தோழப்பர் ஸ்வாமியின் திருநக்ஷத்ரம்

ஸ்ரீமதே ராமாநுஜாய நம:

ஸ்ரீ பாலதந்வி குரவே நம:

வைகாசி அஸ்வினி –

ஸ்வாமி ராமானுஜரால் நியமிக்கப்பட்ட 74 ஸிம்ஹாசனாதிபதிகளுள் 72 ஆம் ஸிம்ஹாசனாதிபதியாக நியமிக்கப்பட்ட ஸ்ரீ கோயில் கந்தாடை குமாண்டூர் இளையவில்லியாச்சான் ஸ்வாமி திருவம்சத்தில் அவதரித்து திருமாளிகையின் ஸமாஸ்ரயண குருபரம்பரையின் 4வது ஸ்வாமியாக எழுந்தருளியிருந்த ஸ்ரீ காரிமாறபட்டர் தோழப்பர் ஸ்வாமியின் திருநக்ஷத்ரம்

தனியன்

கௌசிகாந்வய வார்த்தீந்தும் வேதாந்தத்வயஸாகரம்

ராமாநுஜகுரும் வந்தே வாத்ஸல்யாதி விபூஷிதம்

வாழி எதிராசன்

ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்