RSS

Monthly Archives: May 2021

ஸ்ரீ கோயில் கந்தாடை இளையவில்லி பாலதந்வியாசார்யர் ஸ்வாமியின் திருநக்ஷத்ரம்

ஸ்ரீமதே ராமாநுஜாய நம:

ஸ்ரீ பாலதந்வி குரவே நம:

வைகாசி பூராடம்

ஸ்வாமி ராமானுஜரால் நியமிக்கப்பட்ட 74 ஸிம்ஹாசனாதிபதிகளுள் 72 ஆம் ஸிம்ஹாசனாதிபதியாக நியமிக்கப்பட்ட ஸ்ரீ கோயில் கந்தாடை குமாண்டூர் இளையவில்லியாச்சான் ஸ்வாமி திருவம்சத்தில் அவதரித்து திருமாளிகையின் ஸமாஸ்ரயண குருபரம்பரையின் 20வது ஸ்வாமியாக எழுந்தருளியிருந்த ஸ்ரீ கோயில் கந்தாடை இளையவில்லி பாலதந்வியாசார்யர் ஸ்வாமியின் திருநக்ஷத்ரம்

தனியன்

ஸ்ரீகௌஸிகாந்வய மஹோததி பூர்ணசந்த்ரம்

ஸ்ரீமத் வரப்ரத குரூத்தம புத்ரரத்நம்

ஸ்ரீமத்கநார்ய சரணாம்புஜ ப்ருங்கராஜம்

ஸ்ரீ பாலதந்வி குருவர்யம் அஹம் ப்ரபத்யே

வாழித்திருநாமம்

வைகாசிப் பூராடம் விளங்கவந்தோன் வாழியே

வரதகுரு மனமகிழும் மைந்தனார் வாழியே

துய்யமொழி பூஷணத்தைத் தொகுத்து உரைப்போன் வாழியே

துய்யமதி பூஷணத்தைத் துதிசெய்வோன் வாழியே

கையிலங்கு கனியெனவே கதியருள்வோன் வாழியே

கௌசிகர்கோன் தொட்டையாரியன் கழல் பணிவோன் வாழியே

செய்ய தமிழ் மாறன்மொழி சீருரைப்போன் வாழியே

செய்ய இளையவில்லி திருவடிகள் வாழியே

தேசிகர்கள்வாழத் திருப்பதிகள் தாம்வாழ

வாசியுடன் ஆழ்வார்கள் வாழ – மாசில் புகழ்

வரதகுருமகிழ் இளையவில்லியாரியனே

இன்னுமொரு நூற்றாண்டு இரும்.

வாழி எதிராசன்

ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

 

வைகாசி கேட்டை – ஆழ்வார் திருவரங்கப் பெருமாள் அரையர் திருநக்ஷத்ரம்

ஸ்ரீமதே ராமாநுஜாய நம:

ஸ்ரீ பாலதந்வி குரவே நம:

தனியன்

ஸ்ரீராமமிஸ்ர பதபங்கஜ சஞ்சரீகம்

ஸ்ரீயாமுநார்யவரபுத்ரமஹம் குணாட்யம்|

ஸ்ரீரங்கராஜகருணா பரிணாம தத்தம்

ஸ்ரீபாஷ்யகார சரணம் வரரங்கமீடே ||

தனியன் விளக்கம்

ஸ்ரீராமமிஸ்ரராம் மணக்கால் நம்பியின் திருவடித் தாமரையில் வண்டாய் இருப்பவரும், ஸ்ரீ யாமுநாசார்யாருடைய சிறந்த புத்திரரும், குணத்தில் மிக்கவரும், ஸ்ரீரங்கராஜ கருணையினாலே அளிக்கப்பெற்றவரும், ஸ்ரீபாஷ்யகாரரை சிஷ்யராகக் கொண்டவருமான திருவரங்கப்பெருமாள் அரையரைத் துதிக்கிறேன்.

வாழித்திருநாமம்:

நாதமுனி குலம்திகழ நன்கு உதித்தோன் வாழியே

நற்றமிழின் மறைக்கு இசையை நவின்று உரைப்போன் வாழியே

காதல் அரங்கேசர் இருகழல் பணிவோன் வாழியே

கானவர நயவிசையால் களிப்பிப்போன் வாழியே

ஏதமில் வண்கச்சிப்பயனை ஏத்திசைப்போன் வாழியே

எதிபதியைப் பரிசாக ஏற்று வந்தோன் வாழியே

தீதில் யமுனைத்துறைவன் சேவடியோன் வாழியே

திருவரங்கப் பெருமாள் அரையர் திருவடிகள் வாழியே

வைபவம்:

அவதார ஸ்தலம் – திருவரங்கம்

ஆசார்யன் – மணக்கால்நம்பி

சிஷ்யன் – ஸ்வாமி எம்பெருமானார்

திருநக்ஷத்ரம் – பிங்கள வர்ஷம் வைகாசி கேட்டை

திருத்தாயார் – ஸ்ரீரங்கநாச்சியார்

திருப்பாட்டனார் – ஈஸ்வரமுனிகள்

திருவாராதனம் – அழகிய மணவாளப் பெருமாள்.

அம்சம் – ஸங்கு கர்ணர் என்னும் நித்யசூரியின் அம்ஸம்

இவர் 115 திருநக்ஷத்ரம் எழுந்தருளியிருந்தார் என்று பெரியதிருமுடிஅடைவு மூலம் தெரிந்து கொள்ள முடிகிறது.

இவர் ஆளவந்தாரின் திருக்குமாரர் ஆவார். ஸ்ரீரங்கநாதனின் நியமனத்தாலே காஞ்சியில் தேவப்பெருமாளைத் தம் இசையாலே மயக்கி வரம் பெற்று, யதிராஜரைத் திருவரங்கத்திற்கு அழைத்து வந்தவர். ஸ்ரீரங்கநாதனுக்கு அரையராயிருந்த இவர் எம்பெருமானார்க்கு அருளிச்செயல் சந்தையும், நல்வார்த்தைகளையும் உபதேசித்தவர். தம் தம்பிகளான தெய்வத்துக்கு அரசு நம்பி, பிள்ளை அரசு நம்பி, சொட்டை நம்பி ஆகியவர்களை எம்பெருமானாருக்கு ஸிஷ்யர்களாக்கினார்.

வாழி யதிராசன்

ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஆழ்வார்திருவரங்கப்பெருமாள் அரையர் திருவடிகளே சரணம்

 

ஸ்ரீ பராசரபட்டர் திருநக்ஷத்ரம் – வைகாசி அனுஷம்

ஸ்ரீமதே ராமாநுஜாய நம:

ஸ்ரீ பாலதந்வி குரவே நம:

தனியன்

ஸ்ரீ பராஸரபட்டார்ய: ஸ்ரீரங்கேஸ புரோ ஹித:|

ஸ்ரீவத்ஸாங்கஸுத: ஸ்ரீமாந் ஸ்ரேயஸே மேஸ்து பூயஸே||

தனியன் விளக்கம்:

ஸ்ரீரங்கநாதனுக்குப் புரோஹிதராய், ஸ்ரீவத்ஸாங்கர் என்னும் கூரத்தாழ்வானின் குமாரராய், திருவுடையவரான ஸ்ரீபராஸர பட்டார்யர் எனக்கு மிகுதியான நன்மையின் பொருட்டு ஆகட்டும்.

வைபவம்:

எம்பெருமானாருடைய சிஷ்யர்களில் முதல்வரான கூரத்தாழ்வானும் அவருடைய தேவிகளான ஆண்டாளும், நம்பெருமாளுடைய அரவணை ப்ராசாதத்தை உட்கொண்டதன் பலனாக இவர்களுக்கு இரண்டு திருக்குமாரர்கள் அவதரித்தனர். இவர்களின் திருநாமம் ஸ்ரீ பராசர பட்டர் மற்றும் ஸ்ரீ வேதவ்யாஸ பட்டர்.

குழந்தைக்கு நாமகரணம் செய்வதற்கு உடையவர் எம்பாருடன், ஆழ்வான் திருமாளிகைக்கு எழுந்தருளி, குழந்தையை தூக்கிக்கொண்டு வாரும் என்று உடையவர் எம்பாருக்கு நியமிக்க, அவரும் குழந்தையை தூக்கிக்கொண்டு வரும்போது திரிஷ்டி தோஷாதிகள் ஏற்படாதவாரு இருக்க, ரக்ஷையாக த்வய மந்திரத்தை அனுசந்தித்துக் கொண்டே வந்து எம்பெருமானாரிடம் குழந்தையைக் காட்டினார். குழந்தையைப் பார்த்தவுடன் எம்பெருமானார் தெய்வீகக் குழந்தையின் தேஜோ விசேஷத்தைக் கண்டு வியப்பு கொண்டு எம்பாரே! இக்குழந்தைகளிடம் த்வயம் பரிமளிக்கின்றதே! என் செய்தீர் என்று கேட்க, எம்பாரும் குழந்தைகளுக்கு காப்பாக த்வய அநுசந்தானம் பண்ணிக்கொண்டு வந்தேன் என்று கூறினாராம். எம்பாரே இக்குழந்தைகளுக்கு நீரே ஆசார்யராகக் கடவீர் என்று நியமித்து அருளினாராம் உடையவரும். ஸ்ரீ ஆளவந்தாரின் இரண்டாம் விருப்பத்தை நிறைவேற்றும் பொருட்டு குழந்தைக்கு ஸ்ரீ பராசரபட்டர் என்னும் திருநாமத்தையும் சாற்றியருளினார் எம்பெருமானார்.

பட்டரை இளங்குழந்தை பருவத்திலேயே ஸ்ரீரங்கநாதன் தனது புத்திரனாக அங்கீகரித்துத் தன்னுடைய சந்நிதியிலே திருமணத்ததூணின் அருகே தொட்டிலிட்டு ஸ்ரீரங்கநாச்சியாரும் தானுமாகச் சீராட்டி வளர்க்க,    அங்ஙனம் வளர்கின்ற குழந்தை தவழ்ந்து சென்று பெருமாள் அமுது செய்வதற்கு முன்பே, சமர்ப்பிக்கப்படும் பிரசாதங்களை தமது கைகளால் அள்ளி அளைந்து     துழாவ பெருமாளும் அதுகொண்டு உகந்து இந்த இன்னடிசிலை மிகவும் பிரியமாக அங்கீகரித்து அருள்வாராம்.

எம்பெருமானார் தாமும் கண்டு வியந்த அபரிமிதமான பாண்டித்யம் உடையவர் பட்டர். திவ்ய ப்ரபந்த வ்யாக்யானங்களிலே ஆளவந்தார் முதலான பூர்வாசார்யார்களின் நிர்வாஹங்களைக் காட்டிலும் எம்பெருமானார் நிர்வாஹம் சிறப்புற்று இருக்குமாம். எம்பெருமானார் நிர்வாஹத்தைக் காட்டிலும் பட்டர் நிர்வாஹம் சிறப்புற்று இருக்குமாம். இதை திவ்ய ப்ரபந்த வ்யாக்யாநங்களில் பல இடங்களில் காணமுடியும் என்பது ஸ்ரீவைஷ்ணவ பெரியோர்களின் திருவாக்கு ஆகும்.

எம்பெருமானாராலே தமக்குப் பிறகு தர்ஸன நிர்வாஹகராக நியமிக்கப் பட்டவர் பட்டர். ஸ்ரீரங்கநாதனாலே முதன்முதலில் வேதாந்தாசார்யர் என்னும் விருது கொடுக்கப்பட்டவர். எம்பெருமானார் நியமித்தபடி வேதாந்தி மாதவாச்சாரியர் என்னும் பெயர்கொண்ட அத்வைதியை வாதத்தால் வென்று ஸ்ரீவைஷ்ணவ ஸிகாமணியாக்கினார் பட்டர். அவரே நஞ்சீயர் ஆவார்.

பட்டர் அருளிச்செய்தவை:

பெரிய பெருமாள் விஷயமாக ஸ்ரீரங்கராஜ ஸ்தவம் மற்றும் ஸ்ரீ ரங்கநாத ஸ்தோத்திரம்

ஸ்ரீரங்க நாச்சியார் விஷயமாக ஸ்ரீ குணரத்னகோஸம்

ரஹஸ்யத்ரய விவரணமாக அஷ்டஸ்லோகி

ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம வியாக்யானமான பகவத்குணதர்ப்பணம்

தத்வவிசாரபரமான தத்வ ரத்னாகரத்தையும்

லக்ஷ்மி கல்யாணம் என்னும் காவியம்

க்ரியாதீபம் என்னும் நித்யகிரந்தம்

கைசிக புராணத்திற்கு மணிப்ரவள நடையில் வ்யாக்யானம்

ஆகியவை ஆகும்

ஸ்ரீ கூரத்தாழ்வான் திருவாய்மொழிப் பாசுர அர்த்தங்களை குமாரர்களுக்கு கற்பித்து வரும் போது “எண் பெருக்கு” பாசுரம் வந்தவாரே, இது திருமந்த்ர அர்த்தத்தை தெரிவிக்கும் பாசுரம், ஆகையாலே உங்கள் ஆசார்யரிடம் கேட்டுக்கொள்ளுங்கள் என்றாராம். உடனே மின்னின் நிலையில மன்னுயிர் ஆக்கைகள் என்றபடி நிலைமையை திருவுள்ளம்பற்றி அவர்களை உடனே அழைத்து,  இன்னபோது இன்னார் இருப்பார் இன்னார் போவார் என்று தெரியாது என்பதாலே இருந்து கேளுங்கள் என்று கூறி, திருமந்திரத்தையும் சொல்லி அப்பாசுர அர்த்தத்தையும் விவரித்து, இப்பாசுரத்தை திருமந்திரத்தின் அர்த்தமாக நினைத்து இருங்கள் என்றாராம். திருகுமாரர்களுக்கு ஆழ்வானும் ஒரு ஆசார்யனாக அமைந்தருளினர் என்பது பெரியோர் திருவாக்கு. பட்டரும் தம்முடைய ஸஹஸ்ரநாம பாஷ்யத்தின் முதல் ஸ்லோகத்தில் உபய சம்பந்தமும் தனக்கு உண்டானதற்கு ஏற்ப “வந்தே கோவிந்த தாதௌ” என்றே அருளிச்செய்து இருக்கிறார்.

பட்டருக்கு (மத்யம வயது)  நாற்பது வயது இருக்கும் போது ஒரு கைசிக த்வாதசியன்று கைசிக புராணம் வாசித்து முடிந்த பின்பு நம்பெருமாள் மிகவும் பூரித்து பட்டரே! உமக்கு மேல் வீடு தந்தோம் என்று திருவுள்ளமாக, பட்டரும் மஹாப்ராஸாதம் என்று ஏற்றுக்கொண்டு தம் திருமாளிகைக்கு எழுந்தருளி அவருடைய திருத்தாயாரை சேவித்து நிற்க, அவரும் நலமந்தமில்லதோர் நாடு புகுவீர் என்று ஆசிர்வதிக்க, பட்டரும் அம்மா அடியேன் வேண்டுவது ஈதே என்று உகந்தருளினாராம்.

திருவரங்கத்தில் உள்ளோர் அனைவரும் பெருங்கூட்டமாக திருமாளிகையில் எழுந்தருளியிருக்க

பட்டர் திருநெடுந்தாண்டகப் பாசுரங்களுக்கு அர்த்தம் அருளிச்செய்து கொண்டு வருகையில், “பறவையேறு பரம்புருடா! நீ என்னைக் கைகொண்டபின் பிறவி என்னும் கடலும் வற்றிப் பெரும்பதமாகின்றதால் என்ற பாசுர வரிகளை இரண்டு முறை அனுசந்தித்து அருளி திருமுடியிலே அஞ்சலி செய்துகொண்டு அணையிலே சாய்ந்து நிற்கச் செய்தே ஸிர:கபாலம் வெடித்துத் திருநாட்டுக்கு எழுந்தருளினாராம் பட்டர்.

வாழி எதிராசன்

ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

பராசர பட்டர் திருவடிகளே சரணம்

 

வைகாசி ஸ்வாதி – ஸ்ரீ எம்பாவண்ணன் தொட்டையாசாரியர் ஸ்வாமியின் திருநக்ஷத்ரம்

ஸ்ரீமதே ராமாநுஜாய நம:

ஸ்ரீ பாலதந்வி குரவே நம:

வைகாசி ஸ்வாதி –
ஸ்வாமி ராமானுஜரால் நியமிக்கப்பட்ட 74 ஸிம்ஹாசனாதிபதிகளுள் 72 ஆம் ஸிம்ஹாசனாதிபதியாக நியமிக்கப்பட்ட ஸ்ரீ கோயில் கந்தாடை குமாண்டூர் இளையவில்லியாச்சான் ஸ்வாமி திருவம்சத்தில் அவதரித்து திருமாளிகையின் ஸமாஸ்ரயண குருபரம்பரையின் 13வது ஸ்வாமியாக எழுந்தருளியிருந்த ஸ்ரீ எம்பாவண்ணன் தொட்டையாசாரியர் ஸ்வாமியின் திருநக்ஷத்ரம்

தனியன்
வாத்ஸல்யமுக்ய குணரத்நபய: பயோதிம்
வாக்பூஷணார்த்த விஸதீ கரணப்ரவீணம்|
ஸ்ரீகௌசிகாந்வய வரப்ரத வர்யஸுநும்
ஸ்ரீ வெங்கடேஸ்வர மஹாகுரும் ஆஸ்ரயாம: ||

வாழி திருநாமம்
வைகாசிச் சோதிதனில் வந்துதித்தான் வாழியே
வரதநாராயணன் தாளை வாழ்த்துமவன் வாழியே
துய்யபுகழ் அண்ணன் தன் தொல்மகனார் வாழியே
தொல்புகழ் பாடியத்தைத் தொகுத்து உரைப்போன் வாழியே
செய்ய தமிழ் மாறன் மொழி தெரிந்து உரைப்போன் வாழியே
செய்ய எம்பாவிலண்ணன் சீருரைப்போன் வாழியே
அய்யன் அருள்மாரி கலை ஆய்ந்து உரைப்போன் வாழியே
அன்புடைய தொட்டையாரியன் இணையடிகள் வாழியே

வாழி யதிராஜன்
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

 

வைகாசி விசாகம் – நம்மாழ்வாருடைய திருநக்ஷத்ரம்

ஸ்ரீமதே ராமாநுஜாய நம:

ஸ்ரீ பாலதந்வி குரவே நம:

வைகாசி விசாகம் –

கலி பிறந்து 43வது நாளில் ப்ரமாதி வருஷத்தில் வைகாசி மாதம் விசாக நக்ஷத்ரத்தில் அவதரித்தவரும், மற்ற ஆழ்வார்கள் அனைவரையும் அவயவங்களாகக் கொண்டவரும், ப்ரபன்ன ஜநகூடஸ்தருமான நம்மாழ்வாருடைய திருநக்ஷத்ரம்.

தனியன்

வ்ருஷபே து விஸாகாயாம் குருகாபுரி காரிஜம்

பாண்ட்யதேஸே கலேராதௌ ஸடாரிம் ஸைந்யபம் பஜே||

தனியன் விளக்கம்:

கலியுகத்தின் ஆதியில் வைகாசி விசாகத்தில் பாண்டிய தேசத்தில் உள்ள திருக்குருகூரில் காரி என்பவருக்குக் குமாரராய் ஸேனைமுதலியார் எனப்படும் விஷ்வக்ஸேநரின் அம்சமாய் அவதரித்த ஸடகோபரை உபாசிக்கிறேன்.

நம்மாழ்வார் விஷயமாக ஆளவந்தார் அருளிச்செய்த தனியன்

மாதா பிதா யுவதயஸ் தநயா விபூதிஸ்

ஸர்வம் யதேவ நியமேந மதந்வயாநாம்

ஆத்யஸ்ய ந: குலபதேர் வகுளாபிராமம்

ஸ்ரீமத்ததங்க்ரி யுகளம் ப்ரணமாமி மூர்த்நா|

காரிமாறன், குருகூர்சடகோபன், வகுளாபரணன், மகிழ்மாலைமார்பினன், பராங்குசர், ஸ்ரீ சடாரி மற்றும் ப்ரபந்நஜநகூடஸ்தர் என்று பல திருநாமங்கள் ஆழ்வாருக்கு உண்டு.

ஆழ்வார்களுள் ஐந்தாமவராக தோன்றினரெனினும் வைபவ விசேஷங்களினால் இவரே முதன்மை பெற்றவர். ஒரு காலவிசேஷத்தில் திவ்யப்ரபந்தங்கள் எல்லாம் லோபம் அடைந்து இருக்கையில், ஸ்ரீமந்நாதமுனிகள் நம்மாழ்வார் விஷயமாக ஸ்ரீ மதுரகவிகள் அருளிச் செய்திருந்த கண்ணிநுண்சிறுத்தாம்பு ப்ரபந்தத்தை நியமத்துடன் ஜபித்து யோகதசையில் ஆழ்வாரை ஸாக்ஷாத்கரித்து இவர் முகமாகவே நாலாயிர திவ்யப்ரபந்தங்களை உபதேசமாகப் பெற்றார். இது காரணமாகவே இவருடைய வாழித் திருநாமத்தில் “நாதனுக்கு நாலாயிரம் உரைத்தான் வாழியே என்று அநுஸந்திக்கப் படுகிறது.

ஆழ்வார் அவயவ ப்ராபாவம்:

இவர் ஆழ்வார்களின் தலைவராகவும் மற்றைய ஆழ்வார்களை அவயவங்களாகக் கொண்டவராகவும் நம் ஸ்ரீவைஷ்ணவப் பெரியோர்களால் கொண்டாடப்படுகிறார். இவருக்கு பூதத்தாழ்வார் ஸிரஸ்ஸாகவும், பொய்கையாழ்வார் மற்றும் பேயாழ்வார் திருக்கண்களாகவும், பெரியாழ்வார் திருமுகமாகவும், திருமழிசை ஆழ்வார் கழுத்தாகவும், குலசேகர ஆழ்வார் மற்றும் திருப்பாண ஆழ்வார் கைகளாகவும், திருமங்கை ஆழ்வார் கொட்பூழாகவும், மதுரகவி ஆழ்வாரைத் திருவடிகளாகவும், எம்பெருமானாரை திருவடி நிலைகளாகவும் (பாதுகை) வழங்குவது மரபு.

ஒப்பு உயர்வற்ற இவ்வாழ்வார் எம்பெருமானுடைய திருவடி நிலையாகவே இருப்பதால் பின்னானார் வணங்கும் சோதியாக எம்பெருமான் கோயில் கொண்டு எழுந்தருளியிருக்கும் அனைத்து விஷ்ணு ஆலயங்களிலும் பெருமாளுடைய பாதுகை ஸடாரி என்றும் ஸடகோபன் என்றும் வழங்கப்படுகிறது.

வேதம் தமிழ் செய்த மாறன் சடகோபன் என்று கொண்டாடப்படுபவரான ஸ்வாமி நம்மாழ்வார், உலகை ரக்ஷிக்கும் பொருட்டு நான்கு வேதங்களில் உள்ள ஸாரப்பொருளை எடுத்து, முறையே நான்கு திவ்யப்ரபந்தங்களை அருளிச் செய்துள்ளார். ரிக் வேத ஸாரமாக திருவிருத்தம், யஜுர் வேத ஸாரமாக திருவாசிரியம், அதர்வண வேத ஸாரமாக பெரிய திருவந்தாதி மற்றும் ஸாம வேதத்தின் ஸாரமாக “ஸஹஸ்ரகீதி’ என்னும் திருநாமமுள்ள  திருவாய்மொழி ஆகியவை ஆகும்.

நம்மாழ்வாருடைய பெருமைகளையும், அவர் நூல்களின் பெருமைகளையும், அவற்றுள்ளும் சிறப்பாகத் திருவாய்மொழியின் பெருமைகளையும் அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் அருளிச்செய்த ஆசார்ய ஹ்ருதயம் என்னும் நூல் மிகவும் அழகாக விளக்கிக் கூறுகின்றது.

மேலும் திராவிட வேத உபநிஷத் சங்கதி, திராவிட வேத உபநிஷத் தாத்பர்ய ரத்நாவளி ஆகிய வடமொழி நூல்களைக் கொண்டும், காஞ்சி மஹாவித்வான் ஸ்ரீ அண்ணா ஸ்வாமி அருளிய த்ரமிடோபநிஷத் ப்ரபாவ ஸர்வஸ்வம்  ஆகிய நூலைக் கொண்டும் திருவாய்மொழியின் சிறப்பை அறிந்துகொள்ளலாம்.

திருவாய்மொழிக்கு அமைந்துள்ள வ்யாக்யானங்கள்:

திருவாய்மொழிக்கு பிள்ளான் அருளிச்செய்த ஆறாயிரப்படி, நஞ்சீயர் அருளிச்செய்த ஒன்பதினாயிரப்படி, வாதிகேசரி அழகிய மணவாளச்சீயர் அருளிச் செய்த பன்னீராயிரப்படி, பெரியவாச்சான்பிள்ளை அருளிச்செய்த இருபத்து நாலாயிரப்படி மற்றும் நம்பிள்ளை ஈடு என்று வழங்கப்பெறும் நம்பிள்ளை சாதித்தருளி வடக்குத்திருவீதிப்பிள்ளை பட்டோலை கொண்ட ஈடு முப்பத்து ஆறாயிரப்படி என்னும் ஐந்து வியாக்யானங்களும், அவற்றுள் முப்பத்து ஆறாயிரப்படி வ்யாக்யானத்துக்குச் சீயர் அரும்பதம் மற்றும் அடைய வளைந்தான் அரும்பதம் ஆகிய இரண்டு குறிப்புரைகளும் உள்ளன.

நம்மாழ்வாரின் பெருமையைக் கூறும் நூல்கள் – மதுரகவிகள் அருளிச்செய்த கண்ணிநுண்சிறுத்தாம்பு மற்றும் கம்பநாட்டு ஆழ்வார் (கவிச்சக்ரவர்த்தி கம்பர்) அருளிச்செய்த நூறு பாக்களைக் கொண்ட சடகோபர் அந்தாதி ஆகியவை ஆகும்.

திருவாய்மொழியில் விளக்கப்பட்ட ஐந்து அர்த்தங்கள்:

ப்ராப்பயமான (அடையப்படும்) ப்ரஹ்மத்தின் ஸ்வரூபம்

ப்ராப்தாவான (அடைபவனான)

ஜீவாத்மாவின் ஸ்வரூபம்

அடைவதற்கு உபாயம்

அடைந்து பெறும் பலன் மற்றும்

அடைவதற்குத் தடை

ஆகிய ஐந்து விஷயங்கள் திருவாய்மொழியில் நன்கு விளக்கப்பட்டன.

வாழி எதிராசன்

ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

 

வைகாசி விசாகம் – ஸ்வாமி மணவாளமாமுனிகளின் ஆசார்யரான திருவாய்மொழிப் பிள்ளையின் திருநக்ஷத்ரம்

ஸ்ரீமதே ராமாநுஜாய நம:

ஸ்ரீ பாலதந்வி குரவே நம:

தனியன்

நம: ஸ்ரீசைலநாதாய குந்தீநகர ஜந்மநே|

ப்ராஸலப்த பரமப்ராப்ய கைங்கர்ய ஸாலிநே||

தனியன் விளக்கம்:

குந்தீ நகரத்தில் உதித்தவராய், ஆசார்யன் அருளாலே அடையப்பெற்ற பரமப்ராப்யமான கைங்கர்யத்தை உடையயவரான திருமலையாழ்வாருக்கு வணக்கம்.

தனியன்:

ஸ்ரீசைலேஸ குரும் லோக தேசிகாங்க்ரி ஸமாஸ்ரிதம்

வ்ருஷே விசாக ஸம்பூதம் வந்தே வரகுணாகரம்

தனியன் விளக்கம்:

வைகாசி விசாகத்தில் அவதரித்தவரும் பிள்ளைலோகாசார்யாரை ஆஸ்ரயித்தவரும் உயர்ந்த குணங்களுக்கு இருப்பிடமானவருமான திருமலையாழ்வார் ஆகிற திருவாய்மொழிப்பிள்ளையை வணங்குகிறேன்

வாழித்திருநாமம்:

வையகம் எண் சடகோபன் மறைவளர்த்தோன் வாழியே

வைகாசி விசாகத்தில் வந்துதித்தான் வாழியே

ஐயன்அருள்மாரிகலை ஆய்ந்து உரைப்போன் வாழியே

அழகாரும் எதிராசர் அடிபணிந்தோன் வாழியே

துய்யஉலகாரியன் தன்துணைப் பதத்தோன் வாழியே

தொல் குருகாபுரி அதனைத் துலக்கினான் வாழியே

தெய்வநகர் குந்தி தன்னில் சிறக்க வந்தோன் வாழியே

திருவாய்மொழிப்பிள்ளை திருவடிகள் வாழியே

வைபவம்:

மதுரைக்கு அருகில் உள்ள குந்தீ நகரத்தில் (கொந்தகை) அவதரித்தவர்.  வடமொழியில் ஸ்ரீசைலேசர் என்றும் தமிழில் திருமலையாழ்வார் என்றும் திருவாய்மொழியில் ஏற்பட்ட ஈடுபாடு காரணமாகத் திருவாய்மொழிப்பிள்ளை என்றும் வழங்கப் பெற்றார். வைகாசி விசாகத்தில் அவதரித்தமையால் ஸடகோபதாஸர் என்னும் திருநாமத்தையும் பெற்றார். பிள்ளைலோகாசார்யர் திருநாடு அலங்கரித்த செய்தியைக் கேட்ட திருவாய்மொழிப்பிள்ளையின் திருத்தாயார் ஸாத்விகை அம்மையார், விஸ்லேஷம் பொறுக்கமாட்டாமல் தாமும் பரமபதித்தபடியால் அவருடைய சிறிய தாயார் போஷித்துப் போந்தார்.

பிள்ளைலோகாசார்யரின் சிஷ்யரான ஸ்ரீ கூரகுலோத்தமதாஸர், ஆசார்யாருடைய நியமனம் கொண்டு, ராஜகாரியத்தில் ஈடுபட்டிருந்த திருவாய்மொழிப் பிள்ளையைத் தாமே வலியச் சென்று திருத்திப் பணிகொண்டு தர்ஸன ப்ரவர்த்தகர் ஆக்கினார்.

ஸ்ரீ கூரகுலோத்தமதாசரின் நியமனப்படி ஸ்ரீ திருக்கண்ணங்குடிப்பிள்ளையிடம் திருவாய்மொழியின் அர்த்தவிசேஷங்களை காலக்ஷேபம் கேட்டார். இன்னொரு முறை திருவாய்மொழியின் ஈடு முப்பத்து ஆறாயிரப்படியை ஐயந் திரிபு இல்லாதவாறு நாலூராச்சான் பிள்ளையிடம் காலக்ஷேபம் கேட்டார். பிள்ளைலோகாசார்யரின் மற்றொரு சிஷ்யரான ஸ்ரீ விளாஞ்சோலைப் பிள்ளையிடம் ஸ்ரீவசனபூஷண காலக்ஷேபம் கேட்டார்.

ஸ்வாமி நாலூராச்சான் பிள்ளையிடம் இருந்து நாலாயிர திவ்யப்ரபந்த வ்யாக்யானங்களையும், இனவாயர் தலைவன் என்னும் திருவாராதனப் பெருமாளையும் பெற்ற திருமலையாழ்வார், ஆழ்வாரைத் திருவடிதொழ ஆசைகொண்டு திருக்கணாம்பிக்குச் சென்று ஆழ்வாரை சேவித்து, அவரை திருநகரிக்கு எழுந்தருளப்பண்ண திருவுள்ளம் கொண்டு காடு போல் இருந்த இடத்தை காடு வெட்டி நாடாக்கி பொலிந்து நின்ற பிரான் திருக்கோயிலையும், உறங்காப்புளியான திருப்பூளியாழ்வாரையும் கண்டுபிடித்து கோயிலைச் செப்பன்னிட்டு பல நல்லோர்களையும் குடியமர்த்தி ஸந்நிதியை ஜீர்ணோத்தாரணம் பண்ணி ஆழ்வாரைத் திருப்புளியடியிலே எழுந்தருளப் பண்ணிவைத்தார்.

இந்த வைபவத்தைை திருவல்லிக்கேணிப்பெண்பிள்ளை தாம் அருளிச்செய்த வார்த்தைகளில் 41ஆம் வார்த்தையாக “காடுவெட்டிக் கண்டேனோ திருமலையாழ்வார் போலே என்று அருளிச் செய்துள்ளார். ராமாநுஜருக்கு தனி சந்நிதி அமைத்தார்.

வாழி எதிராசன்

ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

திருவாய்மொழிப்பிள்ளை திருவடிகளே சரணம்

 

சித்திரை ஸ்வாதி – ஸ்வாமி பெரியதிருமலைநம்பி வைபவம்

ஸ்ரீமதே ராமாநுஜாய நம:

ஸ்ரீ பாலதந்வி குரவே நம:

தனியன்

பிதாமஹஸ்யாபி பிதாமஹாய

  ப்ராசேதஸாதேஸபலப்ரதாய|

ஸ்ரீபாஷ்யகார உத்தம தேஸிகாய

  ஸ்ரீசைல பூர்ணாய நமோ நமஸ்தாத்||

தனியன் விளக்கம்:

(புத்தூர் ஸ்வாமி சாதித்து அருளியபடி)

பிரமன்னுக்குத் தந்தையான திருவேங்கடமுடையானாலே அப்பா என்று கூப்பிடப் பெருகையாலே உலகிற்குப் பாட்டனான பிரமனுக்கும் பாட்டனாராய், ஸ்ரீபாஷ்யகாரருக்குச் சிறந்த ஆசார்யராய் அவருக்கு வால்மீகியின் வாக்காகிற ஸ்ரீராமாயணத்தின் பொருளை உபதேசித்தவரான பெரிய திருமலைநம்பிக்குப் பலகால் வணக்கம்.

தனியன்

ஸ்ரீமல் லக்ஷ்மண யோகீந்த்ர ஸ்ரீராமாயண தேஸிகம்

ஸ்ரீசைலபூர்ணம் வ்ருஷப ஸ்வாதி ஸஞ்ஜா தமாச்ரயே

தனியன் விளக்கம்

எம்பெருமானாருக்கு ஸ்ரீராமாயணத்தை உபதேசித்த ஆசாரியரும் வைகாசி ஸ்வாதியில் திருவவதரித்தவருமான திருமலை நம்பியை அஸ்ரயிக்கிறேன்.

வாழித்திருநாமம்-

வைகாசிச் சோதிநாள் வந்து உதித்தான் வாழியே

வண் திருவேங்கடமுடையான் வரபுத்திரன் வாழியே

அய்யன் ஸ்ரீ ஆளவந்தார் அடிதொழுவோன் வாழியே

அனவரதம் மலைகுனியர்க்கு அடிமை செய்வோன் வாழியே

மெய்யன் இராமாநுசாரியன் விரும்புமவன் வாழியே

மிக்க திருமலையார்க்கு எல்லாம் மேலாவான் வாழியே

செய்யதமிழ் வேதத்தின் சிறப்பு அறிந்தோன் வாழியே

திருமலைநம்பிகள் உபயதிருவடிகள் வாழியே

வைபவம்

ஸுமுகர் என்னும் நித்யசூரியின் அம்ஸமாகச் சித்திரை ஸ்வாதியில் திருமலையில் அவதரித்தவர். எம்பெருமானாருக்கு மாதுலர்(தாய்மாமா). இவர் ஸ்வாமி எம்பெருமானாருக்குக் கீழ்த்திருப்பதியில் ஒருவருஷகாலம் ஸ்ரீராமாயணத்தைக் காலக்ஷேபம் சாதித்தார்.  உள்ளங்கைகொணர்ந்த நாயனார் என்னும் திருநாமாத்துடன் சைவராக மாறி காளஹஸ்தியில் வாழ்ந்து கொண்டிருந்த தமது மருமகனான கோவிந்தரை மறுபடியும் ஸ்ரீவைஷ்ணவராகத் திருத்திப்பணிகொண்டார். தமது குமாரர்கள் பிள்ளை திருமலை நம்பியையும், பிள்ளானையும் மற்றும் இருகுமாரத்திகளையும் உத்தாரகரான எம்பெருமானார் திருவடிகளில் ஆஸ்ரயிக்கச்செய்தார்.

மற்றொரு திருநாமம் – ஸ்ரீசைலபூர்ணர்

ஆசார்யன் – ஸ்ரீ ஆளவந்தார்

திருவாராதனம் – மலைகுனியநின்ற பெருமாள்/வெண்ணைக்காடும் பிள்ளை

அமலனாதிபிரான் தனியன் பெரிய திருமலை நம்பி அருளியது.

இவரைப் பற்றிய வைபவங்கள் ஸ்வாமி வடுகநம்பி அருளிச்செய்த யதிராஜ வைபவம் என்னும் கிரந்தத்தில் மிகவும் விரிவாக குறிப்பிட்டுள்ளார்.

ஸ்வாமி எம்பெருமானார் திருமலைக்கு எழுந்தருளிய போது, பெரிய திருமலை நம்பி திருவேங்கடமுடையானுடைய தீர்த்த ப்ரசாதங்களையும் கொண்டு வந்து ஸ்ரீ ராமாநுஜரை எதிர்கொண்டு அழைத்தாராம். யதிராஜரும் பக்தியோடு பெரியதிருமலைநம்பியின் திருவடிகளை வணங்கி, தீர்த்தப்ராசாதங்களை உடனே ஏற்றுக்கொண்டு, “ஸ்வாமி அடியேனுக்கு ப்ரசாதம் கொண்டுவருவதற்கு தேவரீரே எழுந்தருளவேண்டுமோ? சிறியார் எவரையாவது அனுப்பியிருக்கக் கூடாதா என்று கேட்டாராம் எம்பெருமானார். உடனே நம்பி ஸ்வாமி   திருவேங்கடமலையில் எல்லா வீதிகளிலும் தேடிப் பார்த்தும், எங்கும் என்னைவிடச் சிறியாரைக் காணவில்லை என்று யதிராஜரிடம் கூறினாராம்.

வாழி யதிராஜன்

ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

 

ஸ்ரீ கோயில் கந்தாடை இளையவில்லி பாலதந்வி வரதாச்சார்யார் ஸ்வாமியின் திருநக்ஷத்ரம்

ஸ்ரீமதே ராமாநுஜாய நம:

ஸ்ரீ பாலதந்வி குரவே நம:

ஸ்ரீமத் வரவர முநயே நம:

சித்திரை ரோஹிணி –

ஸ்வாமி ராமானுஜரால் நியமிக்கப்பட்ட 74 சிம்மாசனாதிபதிகளுள் 72 ஆம் ஸிம்ஹாசனாதிபதியாக நியமிக்கப்பட்ட ஸ்ரீ கோயில் கந்தாடை குமாண்டூர் இளையவில்லியாச்சான் ஸ்வாமி திருவம்சத்தில் அவதரித்து திருமாளிகையின் ஸமாஸ்ரயண குருபரம்பரையின் வர்த்தமான ஸ்வாமியாக எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ கோயில் கந்தாடை இளையவில்லி பாலதந்வி வரதாச்சார்யார் ஸ்வாமியின் திருநக்ஷத்ரம்.

தனியன்

ஸ்ரீமத் கௌஸிக வார்தீந்தும் ஸீலாதி குணஸாகரம்|

ஸ்ரீமத்கநார்ய ஸத்புத்ரம் வரதார்யம் அஹம் பஜே||

வாழித்திருநாமம்

வாழி இளையவில்லி ஆச்சான்

மாதகவால் வாழும் பாலதந்வி வரதாசிரியன்

வாழியவன் ஸரணாகதி மொழிப்பொருளை

சிச்சனவன் உய்யும்படி உரைக்கும் சீர்

கௌசிகர் தம் குலத்து உதித்த குணக்கடலோன் வாழியே

தொல் புகழ் சீர் தொட்டையாரியன் தனயனவன் வாழியே

சித்திரையில் உரோகிணி நாள் உதித்த செல்வன் வாழியே

திருவரங்கன் பெரிய கோயில் போற்றுமவன் வாழியே

திருகடிகைத் தக்கானைத் தினம் தொழுவோன் வாழியே

காரேய் கருணையிராமாநுசன் கழல் பணிவோன் வாழியே

பதின்மர் தம் பாசுரத்தில் பற்றுடையோன் வாழியே

நம் பாலதந்வி வரதாரியன் பொற்பதங்கள் வாழியே

சீராரும் இளையவில்லி இணையடிகள் வாழியே

பன்னிருசீர் திருநாமம் அணிந்த எழில் வாழியே

பன்னிருவர் பாடல்கள் பயில் பவளம் வாழியே

திருமலைமால் திருக்கோஷ்டித் தழைக்க வந்தான் வாழியே

திருமுகமும் கருணைமிகுக் கண்ணிணைகள் வாழியே

திருமுடியிற் திகழ்வழகுக் குழலொழுங்கும் வாழியே

தாள் பணிவோர் ஆருரைப் பேணுமவன் வாழியே

கௌஸிகர் தம் குலமகனார் வாழி என்றும் வாழியே

மாலடியார்வாழ மாநகர் அரங்கம் வாழ* பெரும்பூதூர்

மாமுனி தன் மன்னுபுகழ் வாழ* ஆழிசூழ்

அனைத்துலகும் தாம் வாழ* நன்னெறி சேர் ஆத்திகர் புகழ்

இளையவில்லி வரதாரியனே இன்னுமொரு நூற்றாண்டு இரும்.

ஞானம் அனுட்டானம் இவை நன்றாகவே உடையனான* குருவை அடைந்தக்கால் – மாநிலத்தீர் தேனார் கமலத் திருமாமகள் கொழுநன்*

தானே வைகுந்தம் தரும்.

பாசுர அர்த்தம்:

ஜ்ஞான அனுஷ்டாந ஸம்பந்நனான ஆசார்யானைப் பணிந்தாலன்றிப் பேறு பெற முடியாது என்பது இந்தப் பாசுரத்தின் அர்த்தம்.

ஸ்ரீ உ. வே காஞ்சி மஹாவித்வான் ப்ரதிவாதி பயங்கரம் அண்ணா ஸ்வாமி அருளிச் செய்த பதவுரை:

இந்த நில உலகத்தவர்களே! ஜ்ஞானமும் அனுஷ்டானமும் ஆகிற இரண்டும் குறையற நிரம்பப்பெற்ற ஆசார்யானை ஆஸ்ரயித்தால் (அப்படிப்பட்ட ஸதாசார்ய ஸமாஸ்ரயணம் உள்ளவர்களுக்கு) தேன் நிரம்பிய தாமரை மலரில் தோன்றிய ஸ்ரீ மஹாலக்ஷ்மிக்கு வல்லபனான ஸர்வேஸ்வரன் தானாகவே ஸ்ரீவைகுண்டத்தை உபகரித்து அருள்வான்.

வாழி எதிராசன்

ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

 

சித்திரை ரோஹிணி – ஸ்வாமி எங்களாழ்வான் திருநக்ஷத்ரம்

ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீ பாலதந்வி குரவே நம:
ஸ்ரீமத் வரவர முநயே நம:

தனியன்

ஸ்ரீ விஷ்ணுசித்த பதபங்கஜ ஸங்கமாய
சேதோ மம ஸ்ப்ருஹயதே கிமத: பரேண|
நோசேந் மமாபி யதிஸேகரபாரதீநாம்
பாவ: கதம் பவிதுமர்ஹதி வாக்விதேய: ||

வைபவம்:
திருவெள்ளறையில் பூர்வசிக ஸ்ரீவைஷ்ணவ ப்ராஹ்மண குலத்தில் ஸ்ரீ விஷ்ணுசித்தர் என்னும் திருநாமாத்துடன் சித்திரை மாதம் ரோஹிணி நக்ஷத்ரத்தில் அவதரித்தவர். ஸ்ரீ கூரத்தாழ்வான் ஸ்வாமி தம் கண்களை இழந்துவிட்ட காரணத்தினால், மேல் நாட்டிலிருந்து திரும்பிய யதிராஜர் ஸ்ரீ பாஷ்யத்தில் எஞ்சிய பகுதியைக் கூரத்தாழ்வானுக்கு பதிலாக இவரை உசாத்துணையாகக் கொண்டு எழுதுவித்தார் என்றும், அப்படி எழுதும் போது, ஆழ்வானுக்குத் துல்யமாயிருந்த இவருடைய மேதா விலாசத்தைக்கண்டு “எங்கள் ஆழ்வானோ” என்று எம்பெருமானார் அபிமானித்தாரம். அன்று முதல் இவர் எங்களாழ்வான் என்றே அழைக்கப்படுகிறார்.

சிஷ்யர் – ஸ்ரீபாஷ்ய ஸிம்ஹாஸநாதிபதிகளில் ஒருவரான ஸ்ரீ நடாதூராழ்வானின் பேரரான “வாத்ஸ்யவராதாச்சார்யார்” என்னும் ஸ்ரீ நடாதூரம்மாள்.

பிதாமஹர் ஸ்ரீ நடாதூராழ்வான் நியமித்தபடி திருவெள்ளறையில் எழுந்தருளியிருந்த எங்களாழ்வான் ஸ்வாமியிடம் ஸ்ரீ பாஷ்யார்த்தம் அனைத்தையும் கசடறக் கற்றார் ஸ்ரீ நடாதூர் அம்மாள். இப்படி அம்மாளுக்கு ஆசார்யரானமையாலே “அம்மாள் ஆசார்யர்” என்று அழைக்கப் பெற்றார் எங்களாழ்வான்.

அருளிச்செய்தவை:

74 ஸிம்ஹாஸநாதிபதிகளில் ஒருவரான இவர் ஸ்ரீ விஷ்ணு புராணத்திற்கு ஸ்ரீ விஷ்ணு சித்தீயம் என்னும் வ்யாக்யானத்தையும், ஸித்தாந்த ப்ரமேயங்களைச் சுருக்கி
“ப்ரமேயஸங்க்ரஹம்” என்னும் க்ரந்தத்தையும், ப்ரஹ்மஸுத்ரத்தின் அதிகரணங்களின் சங்கதியை விளக்கி “ஸங்கதிமாலா” என்னும் க்ரந்தத்தையும், கத்ய வ்யாக்யானம் மற்றும் “ஸாரார்த்த சதுஷ்டயம்” ஆகிய க்ரந்தங்களை அருளிச்செய்துள்ளார்.

வாழித்திருநாமம்:
சீராரும் வெள்ளறையில் சிறந்துதித்தோன் வாழியே
சித்திரை உரோகிணி நாள் சிறக்க வந்தோன் வாழியே
பார்புகழும் எதிராசன் பதம் பணிந்தோன் வாழியே
பங்கயச் செல்வியின் பதங்கள் பரவுமவன் வாழியே
திருக்குருகைப் பிரான் பிள்ளான் திருவருளோன் வாழியே
தீதிலா பாடியத்தைத் தேர்ந்துரைப்போன் வாழியே
தாரணியில் விண்டுமதம் தழைக்க வந்தோன் வாழியே
தண்ணளியோன் எங்களாழ்வான் தாளிணைகள் வாழியே

வாழி எதிராசன்
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

 

சித்திரை கார்த்திகை – திருவெள்ளறையில் அவதரித்தவரும் ஸ்வாமி நாதமுனிகளின் திருவடிகளை ஆஸ்ரயித்து ஸ்வாமி நாதமுனிகளுக்குப் பிறகு ஓராண் வாழி குருபரம்பரையில் ஆசார்யனாக எழுந்தருளியிருந்தவரும் புண்டரீகாக்ஷர் என்னும் திருநாமமுடையவருமான ஸ்ரீ உய்யக்கொண்டாரின் திருநக்ஷத்ரம்.

ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீ பாலதந்வி குரவே நம:
ஸ்ரீமத் வரவர முநயே நம:

தனியன் –
மேஷமாஸே ஸரோஜாக்ஷம் க்ருத்திகா ஜாதமாஸ்ரயே
நாதயோகி பதாம்போஜ த்வந்த்வ ப்ரணவ மாநஸம்
நம: பங்கஜ நேத்ராய நாத ஸ்ரீபாத பங்கஜே
ந்யஸ்த ஸர்வபராயாஸ்மத் குலநாதாய தீமதே

நமஸ்யாம்யரவிந்தாக்ஷம் நாத பாவே வ்யவஸ்த்திதம்
சுத்த ஸத்வ மயம் சௌரே: அவதாரம் இவாபரம்

வாழி திருநாமம்
வாலவெய்யோன் தனை வென்ற வடிவழகன் வாழியே
மால் மணக்கால் நம்பி தொழும் மலர்ப்பதத்தோன் வாழியே
சீலமிகு நாதமுனி சீருரைப்போன் வாழியே
சித்திரையில் கார்த்திகை நாள் சிறக்க வந்தோன் வாழியே
நாவிரண்டும் ஐயைந்தும் நமக்குரைத்தான் வாழியே
நாலெட்டின் உப்பொருளை நடத்தினான் வாழியே
மாலரங்க மணவாளர் வளமுரைப்போன் வாழியே
வையம் உய்யக்கொண்டவர் தாள் வையகத்தில் வாழியே

வைபவம்:

நாதமுனிகள் அவதரித்து 63 வருடங்கள் கழித்து பராபவ வருடத்தில் (கிபி 886) சித்திரை மாதம் கார்த்திகை நக்ஷத்ரம் அன்று ஜயத்ஸேநர் என்னும் நித்யஸுரியின் அம்சமாக திருவெள்ளறை என்னும் திவ்யதேசத்திலே பூர்வஸிக ஸ்ரீவைஷ்ணவ ப்ராஹ்மண குலத்திலே அவதரித்தார்.

மற்ற திருநாமங்கள் – புண்டரீகாக்ஷர், பத்மாக்ஷர் மற்றும் அரவிந்தாக்ஷர்.
ஆசார்யன் – ஸ்ரீமந் நாதமுனிகள்.
சிஷ்யர்கள் – மணக்கால் நம்பி, திருவல்லிக்கேணிப் பாண் பெருமாள் அரையர், சேட்டலூர் செண்டலங்கார தாஸர், ஸ்ரீ புண்டரீக தாசர், கோமடம் திருவிண்ணகர் அப்பன் மற்றும் உலகப் பெருமாள் நங்கை ஆகியோர் ஆவர். இவர் நூற்று ஐந்து திருநக்ஷத்ரங்கள் (105 வயது) எழுந்தருளியிருந்தார் என்பது பெரிய திருமுடி அடைவு என்கிற கிரந்தம் கொண்டு அறிந்து கொள்ள முடிகிறது.

புண்டரீகாக்ஷர் உய்யக்கொண்டார் ஆனது பற்றி தெரிந்து கொள்வோம்.

ஸ்ரீமந் நாதமுனிகளிடம் இரண்டு நிதிகள் இருந்தன. பக்தியோகம் ஒன்று, நாலாயிர திவ்யப்ரபந்தம் மற்றொன்று. முதல் நிதியைக் கொண்டு சேதனன் தான் ஒருவனே மோக்ஷம் அடைய முடியும். இரண்டாவது நிதியான நாலாயிர திவ்ய பிரபந்ததைக் கொண்டு உலகையே உய்விக்க முடியும். இவற்றில் எது உமக்கு வேணும் என்று நாதமுனிகள் குருகைகாவலப்பனிடம் கேட்க, பக்தியோகத்தைப் பெற்று உய்ந்து போகிறேன் என்று சொல்லி, அப்படியே உபதேசம் பெற்று உஜ்ஜுவனம் அடைந்ததாராம்.

நாதமுனிகள் புண்டரீகாக்ஷரிடமும், நீரும் யோகத்தைப் பெற்றுப் போகிறீரா என்று வினவ, பிணங்கிடக்க மணம் புணர்வருண்டோ? என்று பதிலுரைத்தாராம். அதாவது உலகமே ஆத்ம நாசம் அடைந்து பிணக்காடாய் இருக்கும் போது அடியேன் ஒருத்தனுடைய நன்மைக்காக யோக சாஸ்திரம் பயின்று மோக்ஷம் அடைவது சரியாகுமா? அடியேன் எப்படியானாலும் பரவாயில்லை, உலகம் உய்யும் படி திவ்ய பிரபந்தங்களை உபதேசிக்கவேணும் என்று ஆசார்யனான ஸ்ரீமந் நாதமுனிகளிடம் ப்ரார்தித்தார். இதைக் கேட்ட ஸ்ரீந்நாதமுனிகள் அவரை வாரியணைத்து, புண்டரீகாக்ஷரே! நீரே உலகையும், உலகை உடையவனான நாராயணனையும், அவனைச் சொல்லும் அருளிச்செயல்களையும், அதைப் பெற்ற என்னையும் உய்யக்கொண்டவர். உம்மாலேயே தான் அரும்பாடுபட்டுப்பெற்ற அத்தமிழ் மறைகள் உலகெங்கும் பரவி அனைவரையும் உய்விக்கப்போகின்றன. இன்று முதல் நீர் உய்யக்கொண்டார் என்னும் திருநாமத்தாலே ப்ரசித்திப்பெற்று விளங்கக்கடவீர் என்று அருளிச்செய்து திவ்யப்ரபந்தங்களை உய்யக்கொண்டாருக்கு உபதேசித்து அருளினாராம் ஸ்ரீமந் நாதமுனிகள்.

ப்ரமாணம் – ஆறாயிராப்படி குருபரம்பரா ப்ரபாவம், பெரிய திருமுடி அடைவு மற்றும் ஆசார்ய வைபவ மஞ்சரி மற்றும் குருபரம்பரா ஸாரம்

வாழி யதிராசன்
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்