RSS

Monthly Archives: September 2020

ஸ்வாமி பெரியவாச்சான்பிள்ளை வைபவம்

ஸ்ரீமதே ராமாநுஜாய நம:

ஸ்ரீ பாலதந்வி குரவே நம:

ஸ்வாமி பெரியவாச்சான்பிள்ளை வைபவம்

அவதார ஸ்தலம் – திருவெள்ளியங்குடிக்கு அருகிலே உள்ள சங்கநல்லூர் என்னும் சிற்றூர்

திருவவதாரம் – சர்வஜித் வருஷம், ஆவணி மாதம் ரோஹிணி நக்ஷத்ரம் (கண்ணன் எம்பெருமான் திருவவதரித்த நன்னாளிலே அவதரித்தவர் – ஸ்ரீஜயந்தி)

திருதகப்பனார் திருநாமம் – ஸ்ரீ யாமுனதேசிகர்

திருத்தாயார் – நாச்சியாரம்மாள்

பெற்றோர் இட்ட திருநாமம் – க்ருஷ்ணர்

திருவாராதனப் பெருமாள் – க்ருஷ்ண விக்ரஹம்

திருக்குமாரர் – ஸ்ரீ நாயனாராச்சான் பிள்ளை

மற்ற திருநாமங்கள் – அபயப்ரதராஜர், வ்யாக்யான சக்ரவர்த்தி, க்ருஷ்ணஸூரி, பரம காருணிகர், அபார கருணாம்ருத சாகரர் ஆகியவை ஆகும்.

ஆசார்யன் – ஸ்ரீ நம்பிள்ளை

பெரியவாச்சான்பிள்ளை அவதாரச் சிறப்பு :

திருக்கண்ணமங்கையில் எழுந்தருளியுள்ள கண்ணன் எம்பெருமான் திருமங்கை ஆழ்வார் அருளிச்செய்த திவ்ய ப்ரபந்தங்களில் இருக்கக்கூடிய அர்த்தவிசேஷங்களை அறிய திருவுள்ளம் கொண்டதை அறிந்த ஆழ்வாரும் எம்பெருமானே வாரும் கற்றுத்தருகிறேன் என்று விண்ணப்பித்தாராம்.

பெரிய திருமொழி 7-10-10

மெய்மை சொல்லில் வெண்சங்கம் ஒன்று ஏந்திய கண்ணா !

நின்தனக்கும் குறிப்பாகில் கற்கலாம் கவியின் பொருள் தானே !

இதனைத் செவிமடுத்த எம்பெருமான் ஆழ்வாரே நாம் அவஸ்யம் தேவரீரிடம் இருந்து அர்த்த விசேஷங்களை அறிந்து கொள்வோம்! ஆனால் இப்போது அர்ச்சாமூர்த்தியாய் எழுந்தருளியுள்ளபடியால் சாத்தியமில்லை.

பின்னொரு சமயம் தேவரீர் திருக்கலிகன்றி தாசர் என்னும் திருநாமம் கொண்டவராய் இதே கார்த்திகை மாதம் கார்த்திகை நக்ஷத்ர நன்னாளிலே இந்தச் சோழ நாட்டிலே அவதரிப்பீர். தேவரீர் அவதரித்து சில ஆண்டுகள் கழித்து அதே சோழ நாட்டில் யாம் ஆவணி மாதம் ரோஹிணி நக்ஷத்ரத்திலே கிருஷ்ணன் என்ற திருநாமம் கொண்டவராய் அவதரிப்போம்.

அந்த சமயம் தேவரீரை ஆசார்யராகக் கொண்டு ஆழ்வார்கள் அனைவருடைய அருளிச்செயல்களின் பொருளையும் ஸ்ரீ இராமாயண அர்த்தங்களையும் மற்றும் ரஹஸ்யார்த்தங்களையும் தேவரீரிடம் இருந்து கற்றறிந்து உலகோர்கள் எல்லோரும் உய்ய வேண்டி உபதேசிப்போம் என்று தெரிவித்தானாம் எம்பெருமான்.

அதன்படிக்கு அருளிச்செயலின் அர்த்தவிசேஷங்களைக் கற்றுக்கொடுப்பதற்கு கலிகன்றியாகிய திருமங்கை ஆழ்வார் திருக்கலிகன்றி தாசராகவும்(ஸ்வாமி நம்பிள்ளை), கண்ணன் எம்பெருமானே ஆவணி ரோஹிணியிலே க்ருஷ்ணஸூரி என்னும் திருநாமம் கொண்டு ஸ்வாமி பெரியவாச்சான்பிள்ளையாகவும் திருவவதாரம் செய்தனர் என்பது ஸ்ரீவைஷ்ணவ பூர்வாசார்யர்களின் நிர்வாஹம்.

ஸ்வாமி பெரியவாச்சான்பிள்ளையின் ஆசார்யன் – ஸ்வாமி நம்பிள்ளை

ஸ்ரீ வைஷ்ணவ சித்தாந்த விசிஷ்டாத்வைத வேதாந்தப் ப்ரவசனம் செய்த மஹாநுபாவர்களில் தலைவர் ஸ்ரீ பெரியவாச்சான்பிள்ளை. நம்பெருமாள் கோஷ்டியோ அல்லது நம்பிள்ளை கோஷ்டியோ என்று வியந்து போகும் அளவிற்கு எண்ணிலடங்கா சத்சிஷ்யர்களை பெற்றிருந்த பெருமை, லோகாச்சார்யார் என்று ஸ்ரீ கந்தாடை தோழப்பரால் கொண்டாடப்பட்ட நம்பிள்ளை ஸ்வாமிக்கு உண்டு. அதே போன்று நம் பெரியபெருமாளுக்கு இருக்கக்கூடிய ப்ரபாவத்தை நம்மால் பேசி முடித்தாலும், நம் பெரியவாச்சான்பிள்ளை ஸ்வாமியின் பெருமைகளைப் பேசி முடிக்க நம்மால் முடியாது. லோகத்தை ஆளும் சக்ரவர்திகளுக்கு ஸிம்ஹாஸனம் உண்டு என்பதை கேள்விபட்டு இருக்கிறோம் அல்லவா. அது போல வ்யாக்யான சக்ரவர்த்தியான ஸ்வாமி பெரியவாச்சான்பிள்ளைக்கு நான்கு திக்குகளிலும் நான்கு ஸிம்ஹாஸனங்கள் உண்டு என்பது ஸ்ரீவைஷ்ணவ பெரியோர்களின் திருவாக்கு.

முதல் ஸிம்ஹாஸனம் – நாலாயிர திவ்யப்ரபந்த பாசுரங்களுக்கு ஸ்வாமி அருளிச்செய்த திவ்ய வ்யாக்யானங்களே முதலாவதும் முக்கியமானதுமான ஸிம்ஹாஸனம் ஆகும். அவைகள் இல்லாவிடில் ஸ்ரீவைஷ்ணவ உலகமே ஞான சூன்யமாய் இருளடைந்து பாழாகியிருக்கும். ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு திருப்பல்லாண்டு முதலான நாலாயிர திவ்யப்ரபந்தங்களையொழிய பகவானை அறிவதற்கு வேறு வழியில்லை. திவ்யப்ரபந்தங்களிலே இருக்கக்கூடிய ஆழ்ந்த அர்த்தங்களை அறிவதற்கு பூர்வாசார்ய பரம்பரையாகவும், ஆசார்ய நியமனப்படியும், ஸ்வாமி பெரியவாச்சான்பிள்ளையால் அருளிச்செய்யப்பட்ட வ்யாக்யானங்களைத் தவிர வேறு புகல் இல்லை.

இரண்டாவது ஸிம்ஹாஸனம் – இதிஹாஸ ஸ்ரேஷ்டமான ஸ்ரீ இராமாயணத்தில் அமைந்துள்ள மிகச்சிறந்த ஸ்லோகங்கள் பலவற்றில் இருக்கக்கூடிய ரஹஸ்ய அர்த்தங்களை விவரித்து அருளிச்செய்த ஸ்ரீராமாயண தனிஸ்லோகம், ஸ்வாமி பெரியவாச்சான்பிள்ளையின் இரண்டாவது ஸிம்ஹாஸனமாகும்.

மூன்றாவது ஸிம்ஹாஸனம் – ரஹஸ்யத்ரயங்களையும் மற்றும் ஸ்ரீவைஷ்ணவர்கள் அவஸ்யம் தெரிந்து கொள்ள வேண்டிய மற்ற ரஹஸ்யார்த்தங்களையும் விவரித்து ஸ்வாமி அருளிச்செய்த பரந்த ரஹஸ்யம், மாணிக்கமாலை, ஸகலப்ராமண தாத்பர்யம், ரஹஸ்யத்ரய தீபிகை, ரஹஸ்யத்ரய விவரணம் மற்றும் நிகமனப்படி முதலானவை மூன்றாவது ஸிம்ஹாஸனம்.

நான்காவது ஸிம்ஹாஸனம் – பரமாசார்யரான ஸ்ரீ ஆளவந்தாரும் ஜகதாசார்யரான ஸ்வாமி எம்பெருமானாரும் அருளிச்செய்த ஸ்தோத்ரரத்னம், சதுஸ்லோகி, கத்யத்ரயம் முதலான ஸ்தோத்ரங்களுக்கு ஸ்வாமி பெரியவாச்சான்பிள்ளை அருளிச்செய்த திவ்ய வ்யாக்யானங்களும் மற்றும் ஜிதந்தே ஸ்தோத்ர வ்யாக்யானமும், வ்யாக்யான சக்ரவர்த்தியான ஸ்வாமி பெரியவாச்சான்பிள்ளையின் நான்காவது ஸிம்ஹாஸனம் ஆகும்.

ஸ்வாமி பெரியவாச்சான்பிள்ளை ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளிலே ஸகல சாஸ்த்ரார்த்தங்களையும் கேட்டு உணர்ந்துகொண்டு ஆழ்வார்கள் அருளிச்செயல் எல்லாவற்றிற்கும் வ்யாக்யானம் அருளிச்செய்தவர்.

பெரிய முதலியாரான ஸ்ரீமந் நாதமுனிகள் காலம் தொடங்கி நம் ஸம்ப்ரதாய அர்த்தங்கள் அனைத்தும் காலக்ஷேப முறையில் ஆசார்யன் சிஷ்யர்களுக்கு உபதேசித்து வந்தார்கள். ஏடுபடுத்தவில்லை. பரம காருணிகரும், அபாரகருணாசாகரருமான ஸ்வாமி பெரியவாச்சான்பிள்ளை தான், முதன்முதலில் நம்போல்வாருடைய உஜ்ஜீவனம் பொருட்டு திவ்யப்ரபந்த அர்த்தங்கள், ஸ்ரீ இராமாயண அர்த்தங்கள், ரஹஸ்ய அர்த்தங்கள், ஸ்தோத்ர அர்த்தங்கள் ஆகிய அனைத்தையும் தன் பெருங்கருணையாலே பட்டோலை கொண்டு உபகரித்து அருளினார். இதனாலன்றோ க்ருபாமாத்ரப்ரசன்னாசார்யர்களின் கோஷ்டிக்கு தலைவராக விளங்குகிறார் நம் ஸ்வாமி. இப்படி உலகில் உள்ள அனைவரும் நம் ஸம்ப்ரதாய அர்த்தங்களை தெரிந்து கொள்வதற்கு இவ்வாச்சார்யார் பண்ணிய உபகாரம் போன்று வேறு எந்த ஆசார்யரும் செய்ததில்லை.

ஸ்ரீ பெரியவாச்சான்பிள்ளைக்கே உண்டான அசாதாரண பெருமையைப் பற்றி பெரிய ஜீயர் ஸ்வாமி தாம் அருளிச் செய்த உபதேசரத்தினமாலையில் பின்வருமாறு தெரிவிக்கிறார்.

பெரியவாச்சான்பிள்ளை பின்புள்ளவைக்கும் தெரிய* வ்யாக்கியைகள் செய்வால் – அரிய அருளிச்செயற்பொருளை ஆரியர்கட்க்ப்போது* அருளிச்செயலாய்த் தறிந்து*

பாசுர விளக்கம்:

அபயப்ரதராஜரான ஸ்வாமி பெரியவாச்சான்பிள்ளை என்னும் மஹாசார்யர் திருவாய்மொழி தவிர மற்றுமுள்ள திவ்யப்ரபந்தங்களுக்கும் பரமகருணையுடன் வ்யாக்யானங்கள் அருளிச்செய்த படியாலே, பின்புள்ளார்கள் ஆசார்ய பீடத்தில் அமர்ந்து திவ்யப்ரபந்த பாசுர அர்த்தங்களை ப்ரவசனம் பண்ணுவதற்கு பாங்காயிற்று என்று தெரிவிக்கிறார் நம் ஸ்வாமி.

திருவாய்மொழிக்கு பன்னீராயிரப்படி வ்யாக்யானம் அருளிச்செய்தவர் ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் என்பது எல்லோரும் அறிந்ததே.

வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் ஸ்வாமியின் இயற்பெயர் வரதராஜர் என்பதாகும். இந்த ஸ்வாமி ஸ்ரீ பெரியவாச்சான்பிள்ளை ஸ்வாமியின் திருமாளிகை திருமடப்பள்ளி கைங்கர்யம் புரிந்து வந்தார். எழுத்து வாசனையே அல்லாதவராய் இருந்தவர். அந்த சமயம் கற்றறிந்த பெரியோர்கள் சிலர் சாஸ்த்ர விசாரம் பண்ணிக்கொண்டிருப்பதைப் பார்த்த வரதராஜர் அவர்களை அணுகி அவர்களுடைய உரையாடல்களைப் பற்றி வினவினார். வரதராஜருக்கோ எழுதப்படிக்க தெரியாது என்பதை நன்கு தெரிந்திருந்த அந்த பண்டிதர்கள் முஸலகிஸலயம் என்ற நூலைப் பற்றி உரையாடிக்கொண்டு இருக்கிறோம் என்று பதில் உரைத்தனராம் அந்த பண்டிதர்கள். அப்படி ஒரு நூலே கிடையாது. இவர்கள் சொல்வதை உண்மை என்றெண்ணி வரதராஜர் ஸ்ரீ பெரியவாச்சான்பிள்ளையிடம் சென்று இந்த நிகழ்வைப் பற்றி பேசிக்கொண்டு இருந்தார். ஸ்ரீ பெரியவாச்சான்பிள்ளை ஸ்வாமி உண்மையை உணர்ந்துகொண்டு உமக்கு கல்வி அறிவு இல்லாதபடியாலே, இல்லாத ஒரு நூலின் பெயரைச் சொல்லி கேலியாகப் பேசியனுப்பிவிட்டனர் என்று அவரிடம் தெரிவித்தவுடன் வரதராஜர் மிகவும் வெட்கப்பட்டு ஸ்வாமியினுடைய திருவடிகளில் வீழ்ந்து வணங்கி அடியேனுக்கு ஸாஸ்த்ரம் கற்றுத்தரும்படி வேண்டிக்கொள்ள, அபார கருணை உள்ளம் கொண்ட ஸ்வாமியும் அவருக்கு ஸாஸ்த்ரம், காவியம், நாடகம், அலங்காரம், ஸப்தம், தர்க்கம், பூர்வ மீமாம்ஸா மற்றும் உத்தர மீமாம்ஸா முதலான ஸகல ஸாஸ்த்ரங்களையும் மற்றும் ஸம்ப்ரதாய விஷயங்களையும் அவருக்கு உபதேசித்து ஒரு சிறந்த வல்லுனராக்கி வைத்தார். ஆசார்ய அனுக்கிரஹம் பரிபூர்ணமாக அவருக்கு இருந்த படியாலே அனைத்து விதமான ஸாஸ்த்ரங்களையும் கற்றுத் தேர்ந்து முஸலகிஸலயம் என்னும் க்ரந்தத்தையும் இயற்றி இவரைக் கேலியாகப் பேசினவர்களிடத்தே கொண்டு சமர்பித்தாராம், பூர்வாஸ்ரமத்திலே வரதராஜர் என்ற திருநாமம் கொண்ட வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் ஸ்வாமி.

ஆசார்ய அபிமானமே உத்தாரகம்!

ஸ்வாமி பெரியவாச்சான்பிள்ளையின் கோஷ்டியிலே எழுந்தருளியிருந்த சிலர் “எங்களுக்கு தஞ்சமாய் இருபத்தொரு வார்த்தை அருளிச்செய்யவேணும் என்று ப்ரார்திக்க” அதற்கு ஸ்வாமி, கலங்குகிறவனும், கலக்குகிறதும், கலங்கிக்கிடக்கிறவர்களும், தெளிவிக்கிறவனும், தெளிகிறவனும், தெளிந்திருப்பவனுமாயிறே இருப்பது என்று பதிலுரைத்தாராம்

விளக்கம்:

கலங்குகிறவன் – ஜீவாத்மா
கலக்குகிறது – பகவானையும் ஆத்மாவையும் அறியவிடாமல் மறைத்துத் தன் விஷயத்திலே மூளும்படி பண்ணுகிற அசித்து.
கலங்கிக்கிடக்கிறவர்கள் – தேஹமே ஆத்மா என்று கிடக்கும் சம்சாரிகள்
தெளிவிக்கிறவன் – ஆசார்யன்
தெளிகிறவன் – சேதனன்(ஞானவானான ஜீவாத்மா)
தெளிந்திருக்கிறவன் – ஈஸ்வரன்

ஆகையாலே கலங்குகிற தன்னையும், கலக்குகிற ப்ரக்ருதியையும், கலங்கிக்கிடக்கிற சம்சாரிகளையும் தஞ்சம் அன்று என்று கைவிட்டு, தெளிவிக்கிற ஆசார்யனையும், தெளிந்திருக்கும் ஈஸ்வரனையும் பற்றுகையே, ஆசார்யனாலே தெளிந்த இவ்வாத்மாவுக்கு ஸ்வரூபம் என்று அருளினார் ஸ்வாமி பெரியவாச்சான்பிள்ளை.

வாழி யதிராசன்

ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்