RSS

Monthly Archives: September 2010

பெரிய திருமொழி ஒண்ணாம் பத்து எட்டாம் திருமொழி

ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீமத் வர வர முநயே நம:
ஸ்ரீ பாலதந்வி குரவே நம:

இந்த பதிகமானது திருவேங்கடத்து எம்பெருமானுக்கு மங்களாசாசனம் பண்ணப்பட்டது ஆகும்.

திருவேங்கடமுடையானின் பிரம்மோத்சவ சிறப்பு பதிவு: நம்மால் நேரில் சென்று சேவிக்க முடியவில்லை என்றாலும் ஆழ்வார்களின் திவ்யப் பிரபந்த பாசுரங்களைக் கொண்டு – மார்வம் என்பதோர் கோவில் அமைத்து மாதவன் என்னும் தெய்வத்தை நாட்டி – மனத்தினால் சிந்தித்து எம்பெருமானுக்கு பல்லாண்டு பாடுவோம்.

முதல் பாசுரம்:

கொங்கலர்ந்த மலர் குருந்தம் ஒசித்த
கோவலன் எம்பிரான்*
சங்கு தங்கு தடங்கடல்
துயில் கொண்ட தாமரைக் கண்ணினன்*
பொங்கு புள்ளினை வாய்ப் பிளந்த
புராணர் தம்மிடம்*
பொங்கு நீர் செங்கயல் திளைக்கும் சுனைத்
திருவேங்கடம் அடை நெஞ்சமே*

விளக்கம்:

நறுமலர்கள் நிறைந்த குருந்த மரத்தை அழித்த கோபாலனும், சங்குகள் உறையும் கடலில் திருக்கண் வளரும் தாமரைக் கண்ணனும், பகாசுரனை அழித்தவனுமான எம்பெருமான் எழுந்தருளி இருக்கும் இடம், செங்கயல் மீன்கள் களித்து மகிழும் சுனைகள் நிறைந்த திருவேங்கடம் ஆகும். அத்திருவேங்கடத்தை நெஞ்சே நீ அடைந்திடு என்று சொல்லும் படியாக அமைந்த பாசுரம் ஆகும்.

இரண்டாம் பாசுரம்:

பள்ளியாவது பாற்கடல் அரங்கம்
இறங்கவன் பேய்முலை*
பிள்ளையாய் உயிருண்ட எந்தை
பிரான் அவன் பெருகுமிடம்*
வெள்ளியான் கரியான்
மணிநிற வண்ணன் என்று எண்ணி*
நாள்தொறும் தெள்ளியார் வணங்கும் மலைத்
திருவேங்கடம் அடை நெஞ்சமே*

விளக்கம்:

பூதனையின் முலைப் பாலைச் சுவைத்து அவள் உயிரை உண்டவனான கண்ணன் எம்பெருமான் பள்ளி கொண்டிருக்கும் இடங்கள் திருப்பாற்கடலும், திருவரங்கமும் ஆகும். அந்த எம்பெருமான் வளருமிடம் திருவேங்கடம் ஆகும். தெளிந்த ஞானம் படைத்தவர்கள் வெள்ளியான், கரியான், மணிநிறவண்ணன் என்று போற்றி வணங்கும் எம்பெருமான் திருமலையில் எழுந்தருளி உள்ளன். அவன் எழுந்தருளி இருக்கும் அந்த திவேங்க்ட மலையை நெஞ்சே நீ அடைவாயாக என்று மங்களாசாசனம் பண்ணுகிறார்.

மூன்றாம் பாசுரம்:

நின்ற மாமருது இற்று வீழ
நடந்த நின்மலன் நேமியான்*
என்றும் வானவர் கைதொழும்
இணைத் தாமரை அடி எம்பிரான்*
கன்றி மாறி பொழிந்திடக்
கடிதா நிறைக்கு இடர் நீக்குவான்*
சென்று குன்றம் எடுத்தவன்
திருவேங்கடம் அடை நெஞ்சமே*

விளக்கம்:

வானளவு உயர்ந்து வளர்ந்து இருக்கும் மருத மரங்களும் முறிந்து விழும் படி நடந்தவனும, எப்போதும் திருச்சக்ரத்தாழ்வானை திருக்கையில் ஏந்தியவனும், நித்யசூரிகள் மற்றும் தேவர்களால் வணங்கப் படுபவனும், இந்திரன் பெய்வித்த பெருமழையால் பசுக்கூட்டங்களுக்கு வந்த ஆபத்தை கோவர்த்தன மலையைத் தூக்கி குடையாகக் கையில் ஏந்தி அந்த ஆபத்தைப் போக்கி ரக்ஷித்தவனுமான எம்பெருமான் எழுந்தருளி உள்ள திருவேங்கட மலையை நெஞ்சே நீ சென்றடை என்று மங்களாசாசனம் பண்ணுகிறார்.

நான்காம் பாசுரம்:

பார்த்தர்க்காய் அன்று பாரதம் கை செய்திட்டு
வென்ற பரஞ்சுடர்*
கொத்து அங்கு ஆயர் தம் பாடியில்
குரவை பிணைந்த எம் கோவலன்*
ஏத்துவார் தம் மனத்துள்ளான்
இடவெந்தை மேவிய எம்பிரான்*
தீர்த்த நீர் தடம் சோலை சூழ்
திருவேங்கடம் அடை நெஞ்சமே*

விளக்கம்:

பார்த்தனுக்கு சாரதியாக இருந்து பார்த்தசாரதி என்ற திருநாமம் கொண்டு பாண்டவர்களுக்காக பாரத யுத்தத்தை நடத்தி வெற்றி பெற்றவனும், ஆயர்பாடியில் இடைச்சியர்களுடன் குரவைக் கூத்து ஆடியவனும், தம்மை நினைப்பவர்கள் நெஞ்சில் நீங்காது நிறைந்து காணப்படுபவனும், திருவிடவெந்தையில் எழுந்தருளி இருப்பவனுமான எம்பெருமான் எழுந்தருளி இருக்கும் இடம் புண்ய தீர்த்தங்களும், சோலைகளும் நிறைந்த திருவேங்கட மலையை நெஞ்சே நீ சென்றடை என்று சொல்லும் படியாக அமைந்த பாசுரம் ஆகும்.

ஐந்தாம் பாசுரம்:

வன்கையான் அவுணர்க்கு நாயகன்
வேள்வியில் சென்று மாணியாய்*
மண் கையால் இறந்தான்
மராமரம் ஏழும் எய்த வலத்தினான்*
எண் கையான் இமயத்துள்ளான்
இருஞ்சோலை மேவிய எம்பிரான்*
திண் கைம்மா துயர் தீர்த்தவன்
திருவேங்கடம் அடை நெஞ்சமே*

விளக்கம்:

மகாபலி சக்கரவர்த்தியிடம் ப்ரஹ்மச்சாரியைப் போல் சென்று தன் திருக்கையால் உலகத்தை மூன்றே அடியில் அளந்து யாசகமாகப் பெற்றவனும், ராமனாக திரு அவதாரம் பண்ணி ஏழு மராமரங்களை துளைத்தவனும், திருப்ப்ரிதி மற்றும் திருமாலிரும்சோலைமலை போன்ற திவ்யதேசங்களில் எழுந்தருளி இருப்பவனும் கஜேந்திர ஆழ்வானின் துயர் தீர்த்தவனுமாகிய எம்பெருமான் எழுந்தருளி இருக்கும் இடமான திருவேங்கடத்தை நெஞ்சே நீ அடை என்று மங்களாசாசனம் பண்ணுகிறார்.

ஆறாம் பாசுரம்:

எண் திசைகளும் ஏழுலகமும் வாங்கிப்
பொன் வயிற்றில் பெய்து*
பண்டு ஓர் ஆலிலைப் பள்ளிகொண்டவன்
பால்மதிக்கு இடர் தீர்த்தவன்*
ஒண்திறல் அவுணன் உரத்து உகிர் வைத்தவன்
ஒள் எயிற்றோடு*
திண்திறல் அறி ஆயவன்
திருவேங்கடம் அடை நெஞ்சமே*

விளக்கம்:

எட்டு திசைகள் மற்றும் ஏழு உலகங்கள் ஆகியவற்றை பிரளயம் அழிக்காதபடி தன் வயிற்றில் வைத்து காத்தவனும், ஓர் ஆலிலையின் மேல் பள்ளி கொண்டவனும், சந்திரனுக்கு ஏற்பட்ட துன்பத்தை நீக்கியவனும், ந்ருசிம்மனாகத் தோன்றி இரணியனின் மார்பைப் பிளந்தவனுமான எம்பெருமான் எழுந்தருளி இருக்கும் இடமான திருவேங்கடத்தை நெஞ்சே நீ அடைந்திடு என்று மங்களாசாசனம் பண்ணுகிறார்.

ஏழாம் பாசுரம்:

பாரும் நீர் எரி காற்றினோடு
ஆகாசமும் இவை ஆயினான்*
பேரும் ஆயிரம் பேச நின்ற
பிறப்பிலி பெருகுமிடம்*
காரும் வார்பனி நீள் விசும்பிடை
சோறு மாமுகில் தோய் தர*
சேரும் வார்பொழில் சூழ்
எழில் திருவேங்கடம் அடை நெஞ்சமே*

விளக்கம்:

நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம் ஆகியும், ஆயிரம் பேர்களைக் கொண்டவனும், கருமம் அடியாகப் பிறப்பிறப்பு அற்றவனுமான எம்பெருமான் எழுந்தருளி உள்ள இடமான, ஆகாயத்தில் இருந்து பனித்துளிகள் விழும் இடமும், மேகக் கூட்டங்கள் இளைப்பாறுவதற்கு ஏற்றவாறு ஓங்கி உயர்ந்து நிற்பதும், சோலைகள் சூழ்ந்து இருப்பதுமான திருவேங்கட மலையை நெஞ்சே நீ அடைந்திடு என்று மங்களாசாசனம் பண்ணுகிறார்

எட்டாம் பாசுரம்:

அம்பரம் அனல் கால் நிலம்
சலமாகி நின்ற அமரர் கோன்*
வம்புலாம் அலர் மேல்
மலிமட மங்கை தன் கொழுநன் அவன்*
கொம்பின் அன்ன இடை மடக் குறமாதர்
நீளிதணந்தொரும்*
செம்புனம் அவை காவல் கொள்
திருவேங்கடம் அடை நெஞ்சமே*

விளக்கம்:

பஞ்ச பூதங்களாக இருப்பவனும், அமரர்க்கு அதிபதியும், பெரிய பிராட்டியின் நாயகனுமான எம்பெருமான் எழுந்தருளி இருக்கும் இடமானது, குறத்தியர் உயர்ந்த பரண் மேல் இருந்து கொண்டு காவல் புரியும் வயல்களைக் கொண்டதுமான திருவேங்கடத்தை நெஞ்சே நீ அடைவாயாக என்று மங்களாசாசனம் பண்ணும் படி அமைந்த பாசுரம் ஆகும்

ஒன்பதாம் பாசுரம்:

பேசுமின் திருநாமம் எட்டெழுத்தும்
சொல்லி நின்று பின்னரும்*
பேசுவார் தமை உய்ய வாங்கிப்
பிறப்பறுக்கும் பிரானிடம்*
வாசமாமலர் நாறுவார் பொழில்
சூழ் தரும் உலகுக்கெல்லாம்*
தேசமாய்த் திகழும் மலை
திருவேங்கடம் அடை நெஞ்சமே*

விளக்கம்:

அஷ்டாக்ஷர மகாமந்திரத்தை சொல்லுபவர்களைக் காப்பாற்றி அவர்களுடைய பிறப்பிறப்புகளை நீக்குபவனான எம்பெருமான் எழுந்தருளி உள்ள இடம், பரிமளம் மிக்க மலர்களால் சூழப்பட்டு மற்ற எல்லா உலகங்களுக்கும் திலகமாய் இருப்பதுமான திருவேங்கடத்தை நெஞ்சே நீ அடைவாயாக என்று மங்களாசாசனம் பண்ணுகிறார்.

பத்தாம் பாசுரம்:

செங்கயல் திளைக்கும் சுனைத்
திருவேங்கடத்து உறை செல்வனை*
மங்கையர் தலைவன் கலிகன்றி
வண்தமிழ் செஞ்சொல் மாலைகள்*
சங்கை இன்றித் தரித்துரைக்க வல்லார்கள்
தஞ்சமதாகவே*
வங்கமாகடல் வையம் காவலராகி
வானுலகு ஆள்வரே*

விளக்கம்:

கயல் மீன்கள் துள்ளி விளையாடும் சுனைகள் சூழ்ந்த திருவேங்கட மலையில் எழுந்தருளி இருக்கும் எம்பெருமானைக் குறித்துத் திருமங்கை மன்னன் அருளிச்செய்த இந்த செஞ்சொல் மாலையான பாசுரங்களைப் பலனை எதிர்பார்க்காமல் அனுசந்திப்பவர்கள் கடல் சூழ்ந்த இந்த உலகை ஆண்ட பிறகு பரமபதமும் கிடைக்கப் பெறுவார்களாம்.

அடியேன் ராமானுஜ தாசன்

உரையில் குறை இருந்தால் அடியேனை திருத்திப் பண்ணி கொள்ள பிரார்த்திக்கிறேன்.