RSS

Monthly Archives: November 2020

அருளாளப் பெருமாள் எம்பெருமானார் வைபவம்

ஸ்ரீமதே ராமாநுஜாய நம:

ஸ்ரீ பாலதந்வி குரவே நம:

ஸ்ரீமத் வரவர முநயே நம:

தனியன்

கார்த்திகே பரணி ஜாதம் யதீந்த்ர ஆச்ரித மாச்ரயே

ஜ்ஞான ப்ரமேய ஸாராபி வக்தாரம் வரதம் முநிம்

ராமாநுஜார்ய ஸச்சிஷ்யம் வேத சாஸ்த்ரார்த்த ஸம்பதம்

சதுர்த்த ஆச்ரம ஸம்பந்நம் தேவராஜ முநிம் பஜே

எம்பெருமானாருடைய நல்ல சீடராய் வேத சாஸ்த்ரார்த்தப் பொருளைச் செல்வமாக உடையவராய் ஸந்யாஸ ஆஸ்ரமத்தை உடையவரான தேவராஜ முனிவர் என்னும் அருளாளப் பெருமாள் எம்பெருமானாரை ஆஸ்ரயிக்கிறேன்.

ஸுவர்ணமுகி நதிக்கரையிலுள்ள விஞ்சை(விஞ்சிமூர்) என்னும் நகரத்தில் கார்த்திகை மாதம் பரணி நக்ஷத்ரத்தில் அவதரித்தவர் ஸ்வாமி அருளாளப் பெருமாள் எம்பெருமானார். இயற்பெயர் யஜ்ஞமூர்த்தி. ஏகதண்டி அத்வைத ஸந்யாசியாக வாழ்ந்தவர். எம்பெருமானாருடைய பெருமைகளை அறிந்து கொண்ட இவர், அத்வைதம் தழைக்கவும், எம்பெருமானாரை வாதத்திற்கு அழைத்து வெற்றிகொள்ளவும் தீர்மானித்து, நிறைய க்ரந்தங்களை எழுதி எடுத்துக்கொண்டு வித்யாகர்வத்தோடு தம் சிஷ்யர்களுடன் திருவரங்கம் வந்து சேர்ந்தார்.

ஸ்வாமி எம்பெருமானாரை  நோக்கி “நீர் என்னோடு சாஸ்த்ர தர்க்கம் பண்ண வேணும்” என்று அழைத்தார். யஜ்ஞமூர்த்தி வாதத்தில் தோற்றால் எம்பெருமானாருடைய மதத்தை ஏற்றுக்கொண்டு, எம்பெருமானாருடைய பாதுகையை தன் ஸிரஸில் தாங்கி தன்னுடைய பெயரையும் எம்பெருமானாருடைய திருநாமத்துடன் சேர்த்து வைத்துக்கொள்வதாகவும் தெரிவித்தார். எம்பெருமானாரும் வாதத்தில் தாம் தோற்றால் க்ரந்த ஸந்யாஸம் மேற்கொள்வதாக(க்ரந்தங்களை எழுதாமலும் தொடாமலும் விட்டுவிடுவதாக) அறிவித்தாராம்.

16 நாட்கள் வாதம் நடைபெற்று வெற்றி தோல்வி இல்லாமல்  முடிந்தது. வாதத்தின் 17 ஆம் நாள்  முடிவில் யஜ்ஞமூர்த்தி பக்கமே ஓங்கியிருந்த நிலை ஏற்பட்டது. அன்று இரவு ஸ்வாமி எம்பெருமானார் தன் திருவாராதன பெருமாளான வரதராஜ பெருமாளிடம் “பேரருளாளப் பெருமாளே! நாதயாமுன முனிவர்கள் வளர்த்து அடியேனிடம் வந்த இந்த தரிசனம் அடியேனால் சிதைவு காண வேணுமென உமது திருவுள்ளமோ? இப்படி ஒரு திருவிளையாடலோ? என்று நினைத்துக்கொண்டு சயனிக்க, அவருடைய ஸ்வப்னத்திலே (கனவிலே) பேரருளாளப் பெருமாள் தோன்றி, எம்பெருமானாரே ஒரு பெரிய அறிவாளியை உமக்கு சீடனாக ஆக்குவதற்கே இதை செய்தோம் என்று சொல்லி பரமாசார்யரான ஆளவந்தாருடைய மாயாவாத கண்டணத்தைக் கொண்டு யஜ்ஞமூர்த்தியை வாதத்தில் ஜயிப்பீராக என்று அருளினாராம்.

மறுநாள் காலை மிகுந்த சந்தோஷத்துடனும், மநோபலத்துடனும் மதம் கொண்ட யானையைப் போல வாதத்திற்கு எழுந்தருளிய எம்பெருமானாரைக் கண்ட யஜ்ஞமூர்த்தி, ஸ்வாமியின் முகவொளி கண்டு மேலே வாதிட விரும்பாமல் ஸ்வாமி திருவடிகளில் தண்டம் சமர்ப்பித்து “அடியேன் தோற்றேன், இரங்கி அருளவேணும்” என்று பிரார்த்தித்தார்.

ஸ்வாமி எம்பெருமானார் வாதம் தொடரட்டும் என்று சொல்லி வாதத்தைத் தொடங்கி முறைப்படி வாதத்தில் வென்று வெற்றி கொண்டார். அவரும் தமது அத்வைத கொள்கையைத் த்யஜித்து சிகையும் யக்ஞயோபவீதத்தையும் தரித்து த்ரிதண்டமேந்தி ஸ்ரீவைஷ்ணவ முக்கோல் பகவர் ஆனார். பேரருளாளப் பெருமாளின் அருளால் இவர் தமக்கு சிஷ்யரானபடியாலும்,  எம்பெருமானாரிடம் வாதத்தில் தோற்ற படியாலும் வாத நிபந்தனைப்படி எம்பெருமானாருடைய திருநாமத்தோடு சேர்த்து அருளாளப் பெருமாள் எம்பெருமானார் என்று திருநாமம் சூட்டப்பெற்றார்.

ஆசார்யனான ஸ்வாமி எம்பெருமானாரிடம் ஸகல அர்த்தங்களையும் கற்றறிந்து அதை பின்புள்ளாரும் அறிய வேண்டி, ஸ்வாமியிடம் அனுமதி பெற்று ஞான ஸாரம் மற்றும் ப்ரமேய ஸாரம் ஆகிய இரண்டு தமிழ் ப்ரபந்தங்களை அருளிச்செய்தார்.

ஞானசாரம் 40 பாசுரங்களைக் கொண்டது. நான்கு வேதங்களிலும் சொல்லப்பட்ட அர்த்த விசேஷங்களை சாரமாக எடுத்துரைக்கும் ப்ரபந்தம். அருளாளப் பெருமாள் எம்பெருமானார் தம்முடைய பரம கருணையாலே தத்வம், ஹிதம், புருஷார்த்தம் ஆகியவற்றின் கருத்தை அனைவரும் அறியலாம்படி தமிழில் அருளிச் செய்த ப்ரபந்தம் ஞானசாரம்.

ப்ரமேய ஸாரம் 10 பாசுரங்களைக் கொண்டது. முதல் மூன்று பாசுரங்களால் ப்ரணவத்தின் பொருளையும், அடுத்த நான்கு பாசுரங்களால் திருமந்திரத்தின் இரண்டாவது பதமான நம: என்ற சொல்லின் பொருளையும், எட்டாவது பாசுரத்தால் நாராயணாய என்ற சொல்லின் பொருளையும், ஒன்பதாவது பாசுரத்தில் ஆசார்ய வைபவத்தையும், சரமப் பாசுரமான 10 ஆம் பாசுரத்தில் ஆசார்யன் செய்யும் உபகாரத்தையும் அருளிச்செய்துள்ளார்.

வாழி யதிராசன்

ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

 

ஈயுண்ணி மாதவப் பெருமாள் வைபவம்

ஸ்ரீமதே ராமாநுஜாய நம:

ஸ்ரீ பாலதந்வி குரவே நம:
ஸ்ரீமத் வரவர முநயே நம:

தனியன்கள் மற்றும் அர்த்தம்:

கார்த்திகே பரணி ஜாதம் ஸ்ரீ லோகார்ய பதாஸ்ரிதம்
வேதாந்த த்வய சம்பந்நம் மாதவார்யம் அஹம் பஜே

கார்த்திகையில் பரணியில் அவதரித்தவராய் நம்பிள்ளை திருவடிகளை அடைந்தவராய் உபய வேதாந்தச் செல்வரான மாதவப் பெருமாளை வணங்குகிறேன்.

லோகாசார்ய பதாம்போஜ ஸம்ஸ்ரயம் கருணாம்புதிம்
வேதாந்த த்வய சம்பந்நம் மாதவார்யம் அஹம் பஜே

உலகாரியரான நம்பிள்ளையின் திருவடித்தாமரையைப் பற்றியவராய் கருணைக்கடலாய் உபய வேதாந்தச் செல்வமுடையவரான மாதவாச்சார்யரை ஆஸ்ரயிக்கிறேன்.

இந்த ஸ்வாமியைப் பற்றி மணவாளமாமுனிகள் அருளிச்செய்துள்ள உபதேசரத்தினமாலைப் பாசுரங்கள்

சீரார் வடக்கு திருவீதிப் பிள்ளை* எழு
தேரார் தமிழ்வேதத்து ஈடுதனைத் – தாருமென
வாங்கி முன் நம்பிள்ளை ஈயுண்ணி மாதவர்க்குத்
தான்கொடுத்தார் பின் அதனைத்தான்

ஆங்கு அவர்பால்பெற்ற சிறியாழ்வான் அப்பிள்ளை
தாம் கொடுத்தார் தம்மகனார் தம் கையில்-பாங்குடனே
நாலூர் பிள்ளைக்கு அவர்தாம் நல்ல மகனார்க்கு அவர்தாம்
மேலோர்க்கு ஈந்தார் அவரே மிக்கு.

பாசுரங்களின் அர்த்தம்:
ஸ்வாமி நம்பிள்ளையினுடைய பிரதான சிஷ்யர் ஸ்வாமி வடக்கு திருவீதிப் பிள்ளை. (சீரார் வடக்கு திருவீதிப் பிள்ளை – ஆசார்ய ப்ரஸாதத்தாலே அவர் அருளிச் செய்த அர்த்த விசேஷங்களையெல்லாம் தெரிந்தெழுதி எல்லார்க்கும் உபகரிக்கும்படியான ஜ்ஞானாதிகுணபூர்த்தியை உடையவராயிருக்கை)
ஸ்வாமி வடக்குதிருவீதிப் பிள்ளை, ஸ்வாமி நம்பிள்ளையிடம் காலக்ஷேபத்திலே கேட்டு அறிந்து கொண்ட திருவாய்மொழியின் அர்த்த விசேஷங்களை இரவு நேரத்திலே பட்டோலை கொண்டு ஈடுமுப்பத்துஆறாயிரப்படியாக்கி வைத்தாராம். ஆகிலும் ஸ்வாமி நம்பிள்ளையினுடைய அனுமதி பெறாமலே இவர் எழுதிவைத்தபடியால் அந்த ஸ்ரீகோசத்தை கொடும் என்று கேட்டு தாம் வைத்துக்கொண்டாராம். பெரிய பெருமாள் நியமனமின்றி நம்பிள்ளை இந்த ஸ்ரீகோசத்தை தந்தருளமாட்டார் என்பதை நன்கறிந்த ஈயுண்ணி மாதவப் பெருமாள் என்ற ஸ்வாமி, பெரிய பெருமாளிடம் ப்ரார்திக்க, பெரிய பெருமாளும் திருவுள்ளம் உவந்து இரங்கி நம்பிள்ளைக்கு நியமித்தருள, பின்பு அந்த ஸ்ரீகோசத்தை நம்பிள்ளை ஈயுண்ணி மாதவப் பெருமாளுக்கு தந்தருளினாராம். அப்படியாக ஸ்வாமி நம்பிள்ளையிடம் ஸ்ரீகோசத்தைப் பெற்றுக்கொண்ட சிறியாழ்வான் அப்பிள்ளை(ஈயுண்ணி மாதவப் பெருமாளுடைய மற்றொரு திருநாமம்)
தம்முடைய திருக்குமாரரான பத்மநாபப் பெருமாளிடம் அந்த ஈட்டை ப்ரசாதித்து அருளினார். பத்மநாபப் பெருமாள் தம் சிஷ்யரான நாலூர்ப் பிள்ளைக்கு ப்ரசாதித்து அருளினார். அந்த நாலூர்ப் பிள்ளை தம்முடைய திருக்குமாரரான நாலூராச்சான் பிள்ளைக்கு ப்ரசாதித்து அருளினார். அந்த நாலூராச்சான் பிள்ளையே மேலுள்ளவர்களுக்கு கொடுத்து உபகரித்து அருளினாராம். நாலூராச்சான் ஸ்வாமியின் சிஷ்யர்கள் திருநாராயணபுரத்து ஆயி, ஸ்ரீசைலேசர் என்னும் திருநாமமுடைய திருவாய்மொழிப்பிள்ளை மற்றும் ஈயுண்ணி தேவப்பெருமாள் ஆகியோர் ஆவர்.

இப்படி நம்பிள்ளையுடைய ப்ரஸாதத்தாலே சிறியாழ்வான் அப்பிள்ளையென்று திருநாமத்தை உடையரான ஈயுண்ணி மாதவப் பெருமாளுக்கு ப்ராப்தமான ஈடானது, தம்முடைய ஆசார்யரான திருவாய்மொழிப் பிள்ளையளவும் ஸம்ப்ரதாயமாக நடந்துவந்தபடியை அருளிச்செய்கிறார் ஸ்வாமி மணவாளமாமுனிகள்.

வாழி யதிராசன்
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

 

ஸ்ரீ விளாஞ்சோலைப் பிள்ளை வைபவம்

ஸ்ரீமதே ராமாநுஜாய நம:
ஸ்ரீ பாலதந்வி குரவே நம:
ஸ்ரீமத் வரவர முநயே நம:

திருநக்ஷத்ரம் – ஐப்பசி உத்திரட்டாதி

திருவனந்தபுரத்துக்கு அருகில் உள்ள ஆறநூர் என்னும் கிராமத்தில் அவதரித்தவர்.

ஆசார்யன் – ஸ்ரீ பிள்ளைலோகாசார்யார்

வேறு திருநாமம் – நலந்திகழ் நாராயண தாஸர்

தனியன்

துலாஹிர்புத்ந்ய ஸம்பூதம் ஸ்ரீ லோகார்ய பதாஸ்ரிதம்
ஸப்தகாதா ப்ரவக்தாரம் நாராயணமஹம் பஜே

ஐப்பசி உத்திரட்டாதியில் அவதரித்தவரும் பிள்ளை லோகாசார்யரின் திருவடிகளைப் பற்றியவரும் ஸப்தகாதை அருளிச் செய்தவரும் “நலந்திகழ் நாராயண தாஸர் என்ற விளாஞ்சோலைப் பிள்ளையை வழிபடுகிறேன்.

மற்றொரு தனியன்

ஸ்ரீ லோகார்ய பதாரவிந்த மகிலம் ஸ்ருத்யர்த்த கோசாம் ஸ்ததா
கோஷ்டீஞ்சாபி ததேக லீநமநஸா ஸஞ்சிந்தயந்தம் முதா
ஸ்ரீ நாராயண தாஸமார்யமமலம் சேவே ஸதாம் ஸேவிதம்
ஸ்ரீ வாக்பூஷண கடபாவ விவ்ருதிம் யஸ்ஸப்த காதாம் வ்யதாத்

ஸ்ரீ பிள்ளை லோகாசார்யருடைய பாதாரவிந்தங்களில் மறைப்பொருள் அனைத்தையும் பெற்றவரும் அவருடைய கோஷ்டியை எப்போதும் நினைத்துக்கொண்டு இருப்பவரும், ஸ்ரீ வசனபூஷணத்தின் உட்பொருள்களை ஸப்தகாதை என்ற நூலால் வெளியிட்டவரும் ஸ்ரீ நாராயண தாஸர் என்ற திருநாமமுடையவரான உயர்ந்தவரை எப்போதும் சேவிக்கிறேன்.

ஸ்ரீ பிள்ளை உறங்காவில்லிதாஸர் ஸ்வாமி எம்பெருமானாருக்கு அந்தரங்கராய் இருந்ததுபோல், ஸ்ரீ பிள்ளை லோகாசார்யார் ஸ்வாமியினிடத்திலே, அந்தரங்க சிஷ்யராய் இருந்து ஸகல சாஸ்திர அர்த்தங்களையும் கேட்டவர் ஸ்ரீ விளாஞ்சோலைப்பிள்ளை.

இவர் ஸ்ரீ பிள்ளை லோகாசார்யார் திருவாய்மலர்ந்தருளிய ஸ்ரீ வசனபூஷண திவ்ய சாஸ்த்ரத்தில் ஊன்றினவராயும் அதிலுள்ள அர்த்த விசேஷங்களை அனுபவிப்பதைத் தவிர வேறொன்று அறியாதவராயும் வாழ்ந்து வந்தவர்.

ஸ்ரீமத் பகவத் கீதையில் அமைந்துள்ள ஸ்லோகங்களுள் சரம ஸ்லோகம் சிறப்பெய்தினது போல, ஸ்ரீ வசனபூஷணத்தில் அமைந்துள்ள ப்ரகரணங்களுள் சரம பர்வ நிஷ்டா ப்ரகரணம் சிறப்புற்றது. ஆகையால் இந்த ப்ரகரணத்தில் அருளிச்செய்யப்பட்ட அர்த்த விசேஷங்களை எல்லாம் திரட்டி ஒரு பிரபந்தம் அருளிச்செய்ய திருவுள்ளம் கொண்டு திருவாசிரியம் போலே ஏழு பாசுரம் கொண்ட ஸப்தகாதை என்னும் நூலை அருளிச்செய்தார் ஸ்ரீ விளாஞ்சோலைப்பிள்ளை என்று பெரியோர் பணிப்பர்.

ஸ்ரீ வசனபூஷண ரஹஸ்ய அர்த்தத்தை ஸ்வாமி திருவாய்மொழிப் பிள்ளைக்கு உபதேசித்தார். இவருடைய திருவரசு திருவனந்தபுரம் எம்பெருமானின் கர்பக்ரஹம் (அநந்த பத்மநாப பெருமாள் திருவடி).

வாழி யதிராசன்
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

 

ஸ்ரீ எறும்பியப்பா ஸ்வாமி வைபவம்

ஸ்ரீமதே ராமாநுஜாய நம:

ஸ்ரீ பாலதந்வி குரவே நம:

நம்முடைய ஸ்ரீவைஷ்ணவ ஆசார்ய பரம்பரையில் சரம ஆசார்யராய், ப்ரதமாசார்யரான நம்பெருமாளுக்கும் ஆசார்யராய், யதிராசருடைய புநர் அவதார பூதரான ஸ்ரீ மணவாளமாமுனிகளுக்கு ஞான பக்தி வைராக்கியங்களில் சிறந்து விளங்கிய தலை சிறந்த சிஷ்யர்கள் பலர் உண்டு. அவர்களில் எண்மர் அஷ்ட திக்கஜங்கள் என்று பெயர் பெற்றவர்கள். அஷ்டதிக்கஜங்களாக நியமிக்கப்பட்ட எண்மருள் ஸ்ரீ எறும்பியப்பாவும் ஒருவர். இவர் சோளஸிம்ஹபுரத்துக்கு அருகிலுள்ள எறும்பி என்னும் ஊரில் முடும்பைக்குடியில் ஸ்ரீ பெரியசரண்யாச்சார்யார் என்பவருக்கு திருக்குமாரராக அவதரித்தார். இயற்பெயர் தேவராஜன்.

திருநக்ஷத்ரம் – ஐப்பசி ரேவதி

ஸ்வாமி எம்பெருமானாருக்கு வடுகநம்பியைப் போலே ஸ்ரீ மணவாளமாமுநிகளையொழிய தேவுமற்றறியாதே மாமுநிகளுக்கு அத்யந்த அபிமதராய் இருப்பார் என்று ஸ்ரீ கோயில் கந்தாடை நாயன் அருளிச்செய்த பெரிய திருமுடி அடைவு கூறும்.

ஸ்ரீ மணவாளமாமுனிகள் விஷயமாக இவரருளிச் செய்துள்ள க்ரந்தங்கள்:

வரவரமுநி சதகம், வரவரமுநி காவ்யம், வரவரமுநி சம்பூ, வரவரமுநி நாடகம், பூர்வ தினசர்யா, உத்திர தினசர்யா ஆகியவை ஆகும். மேலும் விலக்ஷண மோக்ஷ அதிகாரி நிர்ணயம் என்கிற நூலையும் அருளிச் செய்துள்ளார்.

ஸ்ரீ மண்வளமாமுனிகளுடைய சிஷ்யர் ஸ்ரீ போரேற்று நாயனார். நவரத்னங்கள் என்று கொண்டாடப்படுபவர்களான ஸ்ரீ மணவாளமாமுனிகள் சிஷ்யர்கள் ஒன்பதின்மரில் இவரும் ஒருவர். ஸ்ரீ போரேற்று நாயனாருடைய சிஷ்யர் ஸ்ரீ சேனாபதியாழ்வான். ஸ்ரீ சேனாபதியாழ்வானுக்கும் ஸ்வாமி எறும்பியப்பாவுக்கும் இடையே நிகழ்ந்த ஸம்ப்ரதாய தொடர்புடையதான வினாக்களுக்கு விடையாக அமைந்துள்ளது விலக்ஷண மோக்ஷ அதிகாரி நிர்ணயம் என்ற நூல்.

தனியன்

துலா ரேவதி ஸம்பூதம் வரயோகி பதாஸ்ரிதம்

ஸர்வ வேதாந்த ஸம்பூர்ணம் அப்பாச்சார்ய மஹம் பஜே

அர்த்தம்

ஐப்பசி ரேவதியில் அவதரித்தவரும் மணவாளமாமுனிகளின் திருவடிகளைப் பற்றியவரும் எல்லா வேதாந்தங்களாலும் நிறைந்தவருமான எறும்பியப்பாவை வழிபடுகிறேன்.

தனியன்

சௌம்யஜா மாத்ரு யோகீந்த்ர சரணாம்புஜ ஷட்பதம் தேவராஜம் குரும் வந்தே திவ்யஜ்ஞாந ப்ரதம் ஸுபம்

அர்த்தம்

அழகிய மண்வளமாமுனிகளின் திருவடித்தாமரைகளில் வண்டு போல் படிந்து ரஸாநுபவம் செய்பவரும், தம்மை அண்டினவர்களுக்கு உயர்ந்த ப்ரஹ்ம ஜ்ஞானத்தை அளிப்பவரும், அறிவினாலும் அநுஷ்டாணத்தாலும் சோபிப்பவருமான தேவராஜகுரு என்னும் எறும்பியப்பாவை வழிபடுகிறேன்.

வாழி யதிராசன்

ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

 

திருநாராயணபுரம் ஆய்ஸ்வாமி வைபவம்

ஸ்ரீமதே ராமாநுஜாய நம:
ஸ்ரீ பாலதந்வி குரவே நம:
ஸ்ரீமத் வரவர முநயே நம:

திருநாராயணபுரம் என்று அழைக்கப்படும் மேலக்கோட்டையில் ஸ்ரீ ஸேனை முதலியார் அவதரித்த நன்னாளில் திருவாவதரித்தார். திருநக்ஷத்ரம் – ஐப்பசி பூராடம்.

மற்ற திருநாமங்கள் – தேவராஜர், தேவப்பெருமாள், ஆஸூரிதேவராயர், திருத்தாழ்வரை தாஸர், ஸ்ரீஸாநுதாசர், மாத்ரு குரு, ஜநந்யாச்சார்யர், ஆயி, தேவராஜ முநீந்த்ரர் ஆகியவை ஆகும்.

ஜநந்யாசார்யருக்கு வேதம், திவ்ய ப்ரபந்தம் கற்பித்து, பஞ்சஸம்ஸ்காரம் செய்தது அவருடைய திருதகப்பனார் லக்ஷ்மணாச்சார்யார் ஆவார்

திருநாடு அலங்கரித்தது திருநாராயணபுரத்திலே.

ஈடு பரம்பரையின் ஆசார்யர் ஸ்வாமி நம்பிள்ளை. அவர் சிஷ்யர் ஈயுண்ணி மாதவர். அவர் குமாரர் ஈயுண்ணி பத்மநாபப்பெருமாள். இவர் சிஷ்யர் நாலூர்ப்பிள்ளை. இவர் சிஷ்யர் நாலூராச்சான்பிள்ளை. இவருடைய சிஷ்யர்கள் திருநாராயணபுரத்து ஆயி, இளம்பிளிசைப் பிள்ளையான திருவாய்மொழி ஆச்சான், ஸ்ரீசைலேசர் என்னும் திருநாமமுடைய திருவாய்மொழிப்பிள்ளை மற்றும் ஈயுண்ணி தேவப்பெருமாள் ஆகியோர் ஆவர்.

எம்பெருமானார் தம் திருக்கைகளாலே திருவாராதநம் ஸமர்ப்பித்த திருநாராயணப் பெருமாளுக்கும், ராமப்ரியனும் யதிராஜ சம்பத்குமாரனுமான செல்வப்பிள்ளைக்கும் பாலமுதும், ஸ்ரீ மாலாகாரர், ஸ்ரீ விஷ்ணுசித்தர் மற்றும் ஆண்டாளைப் போல புஷ்பமும் ஸமர்ப்பித்துக்கொண்டு கைங்கர்ய நிரதராய் ப்ரசித்தி பெற்றவர் திருநாராயணபுரத்து ஆயி ஸ்வாமி.

ஆய் என்ற சொல்லுக்கு தாய் என்று பொருள். இந்த ஸ்வாமி திருநாரணனுக்கு பாலமுது சமர்ப்பிக்கும் கைங்கர்யத்தை தாயன்போடு செய்து வந்தாராம். ஒரு நாள் பாலமுது சமர்பிப்பதற்கு கொஞ்சம் காலம் தாழ்ந்துபோக, திருநாரணன் அது பொறாமல் நம் ஆய் எங்கே (தாய்) இன்னம் காணோமே? என்று அர்ச்சகர் மூலம் வினவினபடியாலே அன்று முதல் இவருக்கு ஆய் என்று திருநாமம் உண்டாயிற்று.

மாமுனிகளுக்கும் இவருக்கும் உள்ள சம்பந்தம்:
மணவாளமாமுனிகள் ஆசார்ய ஹ்ருதய வ்யாக்யானம் அருளிச் செய்தபோது “ஜ்ஞான சதுர்த்திகளின் மேலேயிறே ஆநந்தஷஷ்டிகளுக்கு உதயம்” என்கிற வாக்கியத்திற்கு அர்த்தம் அருளிச்செய்யும் போது சில விளக்கங்கள் தேவைப்பட தமது ஆசார்யரான திருவாய்மொழிப்பிள்ளையின் ஸஹ அத்யாயியாய்(கூடப் படித்தவர்) எழுந்தருளியிருந்த ஆய் ஸ்வாமியினிடத்திலே கேட்கவேணும் என்று திருவுள்ளம்கொண்டு திருநாராயணபுரம் நோக்கி புறப்பட்டாராம் மாமுனிகள். அதே ஸமயம் திருநாரணன் ஆயிஸ்வாமியின் ஸ்வப்னத்திலே மாமுனிகள் அவதாரரஹஸ்யத்தை காட்டியருள ஆய் ஸ்வாமி மாமுனிகளை சேவிப்பதற்காக ஆழ்வார் திருநகரிக்கு புறப்பட்டார். இருவரும் ஆழ்வார் திருநகரி எல்லையில் சந்தித்துக்கொள்ள ஆயியும் தாளும் தடக்கையும் கூப்பி சேவிக்க, இதனைக்கண்ட பெரிய ஜீயர் ஸ்வாமியின் சிஷ்யர்கள் பெரிய நம்பியும் எம்பெருமானாரும் எதிர்பட்டாப்போலாயிற்று என்று உகந்தனராம். மாமுனிகளும் ஆசார்ய ஹ்ருதய காலக்ஷேபம் கேட்டு முடித்த பின்பு ஆய் ஸ்வாமிக்கு ஒரு தனியன் சமர்ப்பிக்க

“ஆசார்ய ஹ்ருதயஸ்யார்த்தா: ஸகலா யேந தர்ஸிதா: ஸ்ரீ ஸாநுதாஸம் அமலம் தேவராஜம் தமாஸ்ரயே”

ஆயி ஸ்வாமியும் மாமுனிகள் விஷயமாக
ஒரு பாசுரம் அருளிச்செய்தாராம்

பூதூரில் வந்துதித்த புண்ணியனோ? பூங்கமழும் தாதாரு மகிழ்மார்பன் தானிவனோ, தூதூர வந்த நெடுமாலோ?
மணவாளமாமுனிவன் எந்தையிவர் மூவரிலும் யார்?

பிறகு ஆய் ஸ்வாமி சிலகாலம் அங்கேயே எழுந்தருளியிருந்தபின்னர் திருநாராயணபுரம் எழுந்தருளினார்.

இவர் அருளிச்செய்தவை திருப்பாவைக்கு ஈராயிரப்படி மற்றும் நாலாயிரப்படி வ்யாக்யானம், ஸ்ரீ வசனபூஷண வ்யாக்யானம், ஆசார்ய ஹ்ருதய வ்யாக்யானம் ஆகியவை ஆகும்

வாழி யதிராசன்
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

 

ஸ்ரீ ஸேனை முதலியார் வைபவம்

ஸ்ரீமதே ராமாநுஜாய நம:
ஸ்ரீ பாலதந்வி குரவே நம:
ஸ்ரீமத் வரவர முநயே நம:

ஐப்பசி மாதம் பூராட நக்ஷத்திரத்தில் திருவவதாரம் பண்ணிய மஹாநுபாவர்கள் இருவர். நம் விக்நங்களை, அதாவது தடைகளை விலக்கிக்கொடுப்பவரான விஷ்வக்ஸேநர் (யஸ்ய த்விரத வக்ராத்யா என்ற ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம இரண்டாவது ஸ்லோகத்தை நினைவு கொள்ள வேணும்)
மற்றும் பெரிய ஜீயர் ஸ்வாமிக்கு ஆசார்ய ஹ்ருதய காலக்ஷேபம் ஸாதித்தருளிய திருநாராயணபுரத்து ஆயி ஜநந்யாசார்ய ஸ்வாமி.

இன்று ஸ்ரீ ஸேனை முதலியார் என்று அழைக்கப்படும் விஷ்வக்ஸேநரின் வைபவத்தை அனுபவிப்போம்.

1 ஓராண் வழி குருபரம்பரையில் பெரிய பெருமாள், பெரிய பிராட்டிக்குப் பிறகு ஆசார்யனாக கொண்டப்படுகிறவர்.

2 பெரிய பிராட்டியாரிடமிருந்து ரஹஸ்யத்ரயத்தை உபதேசமாகப் பெற்றவர்.

3 ஸேனை முதலியாரிடமிருந்து தான் ஆழ்வார்கள் அனைவரும் ரஹஸ்யத்ரய உபதேசத்தைப் பெற்றார்கள்

4 எம்பெருமான் அமுது செய்த மிகுதியை உண்பவர் என்பதாலே சேஷாஸநர் என்று அழைக்கப்பட்டார்.

5 பரமாச்சார்யரான ஸ்ரீ ஆளவந்தார் அருளிச் செய்த ஸ்தோத்ர ரத்னத்தில் பிராட்டியின் பெருமை, பெருமாளின் பெருமை, கருடாழ்வானுடைய பெருமை ஆகியவற்றை அருளிச் செய்த பின்னர் 42வது ஸ்தோத்ரத்தில் ஸேனை முதலியாரின் பெருமையை அருளிச் செய்துள்ளார் ஸ்வாமி ஆளவந்தார்.

ஸ்தோத்திரம் 42

த்வதீய புத்த உஜ்ஜித ஸேஷ போஜிநா
த்வயா நிஸ்ருஷ்டாத்மபரேண யத்யதா
ப்ரியேண ஸேநாபதிநா ந்யவேதி தத்
ததாநுஜாநந்தம் உதாரவீக்ஷணை:

உபயவிபூதி விஷயமான எம்பெருமான் தன்னுடைய ஸர்வ பாரத்தையும் இவன் பக்கலிலே வைத்து இவனிட்ட வழக்காம்படடியிருக்கிற ஸ்ரீ ஸேனாபதியாழ்வானுடைய தாஸ்ய சாம்ராஜ்யத்தை அனுபவிக்கிறார் பரமாச்சாரியார் ஸ்ரீ ஆளவந்தார்.

அர்த்தம் – நீர்(எம்பெருமான்) அமுதுண்ட மிகுதியை உண்பவரும், உம்மாலே வைக்கப்பட்ட உபய விபூதி நிர்வாஹப் பொறுப்புகளை உடையவரும், உமக்கு மிகவும் ப்ரியமானவருமான விஷ்வக்ஸேநரால் எந்தக் காரியம் எந்த முறையில் விண்ணப்பம் செய்யப்பட்டதோ, அந்தக் காரியத்தை அப்படியே செய்தருள வேணும் என்பதை அழகிய திருக்கண் நோக்காலே நியமித்து அருள்பவன் எம்பெருமான் என்பதாக அமைந்துள்ளது இந்த ஸ்தோத்ரம்.

ஸ்வாமி பராசர பட்டர் அருளிய விளக்கம்:

உலகனைத்தையும் நிர்வகிக்கும் பொறுப்பு ஸேனை முதலியாரிடம் இருப்பதால், உலக நிர்வாஹ விஷயங்களைப் பற்றி தெரிவிக்கவேண்டி எம்பெருமான் பிராட்டிமாருடன் எழுந்தருளி இருக்கையில் ஸேனை முதலியாரும் அங்கே வந்து நிற்க, எம்பெருமானும் பிராட்டியும் சேர்ந்திருக்கிற சேர்த்திக்கு தாம் இடையூறு விளைவிக்கக் கூடாது என்ற திருவுள்ளத்தால் தெரிவிக்கவேண்டிய விஷயத்தை மிகச்சுருக்கமாக விண்ணப்பித்தவுடன் எம்பெருமானும் தன் கண் பார்வையினாலேயே ஒப்புதல் வழங்கி விடுவானாம்.

வாழி யதிராசன்
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்