RSS

திருநெடுந்தாண்டகம் – முதல் பாசுரம்:

24 Jan

ஸ்ரீ:
ஸ்ரீமதே இராமானுஜாய நம:
ஸ்ரீமத் வரவர முநயே நம:
ஸ்ரீ பாலதந்வி குரவே நம:

மின்னுருவாய் முன்னுருவில் வேதம் நான்காய்*
விளக்கொளியாய் முளைத்தெழுந்த திங்கள் தானாய்*
பின்னுருவாய் முன்னுருவில் பிணி மூப்பு இல்லாப்*
பிறப்பிலியாய் இறப்பதற்கே எண்ணாது* எண்ணும்
பொன்னுருவாய் மணி உருவில் பூதம் ஐந்தாய்ப்*
புனல் உருவாய் அனல் உருவில் திகழும் சோதி*
தன்னுருவாய் என்னுருவில் நின்ற எந்தை*
தளிர் புரையும் திருவடி என் தலை மேலவே*

முதல் பாசுர அர்த்தம்:

நம் கண்ணின் முன்னே தோன்றும் பொருள்களெல்லாம் நிலை நிற்காதவை என்பதை, “மின்னுருவாய் முன்னுருவில் வேத நான்காய்” என்கிற பாசுர வரிகளிலே தெரிவிக்கிறார். அதாவது ஆத்மாவிற் காட்டிலும் வேறுபட்ட அசேதனப் பொருள்களில் க்ஷனிகத்வ புத்தியைப் பிரப்பித்து – ஆத்ம வஸ்துவின் தன்மையை நன்கு அறிந்து கொள்வதற்கு சாத்திரத்தைக் கொடுத்தவன் எம்பெருமான். வேத நான்காய் என்றது நான்கு வேதங்களையும் உபகரித்து அருளினவன் என்பதை சொல்கிறது.

விளக்கு எப்படி தன்னுடைய பிரகாசத்தின் மூலம் இருளைப் போக்கி பொருட்களை அறிந்துகொள்ள உதவி புரிகிறதோ, அதே போலே எம்பெருமான் தானும் சாஸ்திர ஞானத்தை நமக்கு கொடுத்தருளி நம்முடைய அக இருளைப் போக்கி ஸ்வரூபத்தை நன்கு பிரகாசிப்பிக்கச் செய்கிறானாம் என்பதை விளக்கொளியாய் என்றே இடத்தே தெரிவிக்கிறார் ஆழ்வார். அதாவது எம்பெருமானுடைய அருள் இல்லையாகில் உண்மையான சாஸ்திர ஞானம் ஏற்படுவதற்கு வழியில்லை என்பதை நன்கு உணர்த்துகிறார்.

மலை நுனியிலே தோன்றி ஆகாயத்திலே காணப்படுகிற சந்திரனைப் போலே சந்தோஷகரமான ஞானத்தைக் கொடுத்தவன் எம்பெருமான் என்பதை “முளைத்தெழுந்த திங்கள் தானாய்” என்று ஆழ்வார் தானும் மங்களாசாசனம் பண்ணுகிறார்.

மேலே பாசுர இரண்டாம் வரியிலே இரண்டு வார்த்தைகளாலும் ஒரே அர்த்தமே தெரிவிக்கப் பட்டாலும் விளக்கொளியாய் என்றதனால் ஸ்ராவண ஞானத்தையும்(காதால் கேட்டு உணரும் ஞானம்), முளைத்தெழுந்த திங்கள் தானாய் என்றதனால் மற்ற ஞானங்களையும் தெரிவிக்கிறார் ஆழ்வார்(மனனம் செய்வது, உபாசனம் செய்து உணர்வது மற்றும் நம் கண்களால் கண்டு உணர்வது).

பாசுர மூன்றாம் வரியானது ஜீவாத்மாவுக்கு நியாமகன் எம்பெருமான் என்பதை தெரிவிக்கிறது. ப்ராக்ருத பதார்த்தங்களை முன்னுறு என்று காட்டி அந்தப் பொருள்களுக்கு இருப்பதான பிணி, மூப்பு மற்றும் பிறப்பு ஆகியவை இருபத்து ஐந்தாம் தத்வமான ஜீவாத்மாவை ஸ்பர்சிக்க மாட்டா, ஆகையாலே “முன்னுருவில் பிணிமூப்பில்லாப் பிறப்பிலி” என்றும், ஆய் என்பதாலே ஜீவாத்மாவை நியமிப்பவன் எம்பெருமான் என்பதை தெரிவிக்கிறார். இறப்பதற்கே என்னாது என்பதாலே ச்வரூபானுபந்தியான மரணமான கைவல்ய மோக்ஷத்தை எம்பெருமான் தன்னுடைய அந்தரங்கமான அடியார்களுக்குக் கொடுக்க தம் நெஞ்சாலும் நினைக்காதவன் என்கிறார்.

மேலும் எம்பெருமான் தன்னுடைய ஸ்வரூப ரூப குணங்களை பிரகாசிப்பித்து அருளி உபகரித்த மகா உபகாரம் செய்து அருளினார் என்பதை என்னும் பொன்னுருவாய் என்கிறார்.
அதாவது போக்யதையின் மிகுதியாலே பொன் போல் விரும்பத்தக்கதான திவ்ய ஸ்வரூபத்தை உடையவன் எம்பெருமான் என்கிறார். பாஞ்சராத்ர சாஸ்திரம் கூறியவாரே எம்பெருமானுடைய திருமேனிக்கு பஞ்ச உபநிஷத்துக்கள் உபாதானமாய் இருக்கும் என்பதை மணியுருவில் பூதமைந்தாய் என்று காட்டுகிறார் ஆழ்வார்.

புனலுருவாய் என்றது எம்பெருமானுடைய சொவ்லாப்யத்தைக் காட்டுகிறது. இப்படி எம்பெருமான் எளியனாய் இருக்கிறபடியால் எந்த பொழுதில் என்ன கேடு வருமோ என்று நினையாது இருக்கிறபடி பிரதிகூலருக்கு அக்னியை போலே கிட்டாதவனாய் இருக்கும் தன்மையை அனலுருவில் திகழும் என்கிறார். ஆக அனுகூலர்களுக்கு புனலுருவாய் இருப்பவன், பிரதிகூலர்களுக்கு அனலுருவாய் இருக்கும் தன்மையை காட்டுகிறார்.

இந்த உலகத்திலே சோதிப் பொருள் என்று விளங்குகின்ற அக்னி, சந்திரன் மற்றும் சூரியன் முதலியவர்கட்கும் எம்பெருமான் தன்னுடைய சம்பந்தத்தாலே ஜ்யோதிஸ் உண்டாகும்படி பரந்ஜோதியாய்இருக்கும் தன்மையை சோதி தன்னுருவாய்(ஸ்வயம் ஜ்யோதிஸ்வரூபனாய்) என்று மங்களாசாசனம் பண்ணுகிறார் ஆழ்வார். என்னுருவில் நின்ற என்பதாலே மிகவும் தாழ்மையே என்னுடைய சரீரத்திலே வந்து நின்றான் என்கிறார். இப்படிப்பட்ட(எந்தை – எனக்குத் தந்தை) எம்பெருமானுடைய தளிர் போன்ற திருவடிகள் என் தலைக்கு அலங்காரமாய் இருப்பதைப் பாரீர் என்று கூறி ஆச்சர்யத்துடன் மங்களாசாசனம் பண்ணுகிறார்.
அடியேனின் சிற்றறிவுக்கு எட்டின அளவிலே எம்பெருமான் சங்கல்பத்தாலும் ஆசார்ய கடாக்ஷத்தாலும் இந்தப் பதிப்பை அடியேனால் பதிவு செய்ய முடிந்தது.

குறை இருக்குமாயின் அடியேனைத் திருத்திப் பணிகொள்ள பிரார்த்திக்கிறேன்.

தாசானு தாசன்

இராமானுஜ சிஷ்யன்

Advertisements
 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

 
%d bloggers like this: