RSS

திருநெடுந்தாண்டகம்:

30 May

ஸ்ரீ:
ஸ்ரீமதே இராமானுஜாய நம:
ஸ்ரீமத் வரவர முநயே நம:
ஸ்ரீ பாலதந்வி குரவே நம:

இந்த பிரபந்தமானது இந்த உலகில் இருள் நீங்க திருவவதாரம் பண்ணின பன்னிரு ஆழ்வார்களுள் கடைக்குட்டி ஆழ்வாரான திருமங்கை ஆழ்வாரால் அருளிசெயப்பட்டது ஆகும். இந்த ஆழ்வார் அருளிச் செய்த திவ்யப்ரபந்தங்கள் ஆறு ஆகும். நான்கு வேதங்களையும், செந்தமிழ் வேதமாக தம்முடைய நான்கு பிரபந்தங்களின் மூலம் விவரித்து அருளினார் ஸ்ரீ நம்மாழ்வார் என்று ஸ்ரீ வைஷ்ணவ பெரியோர் பணிப்பர். “மாறன் பணித்த தமிழ் மறைக்கு மங்கையர்கோன் ஆரங்கம் கூற அவதரித்து” என்ற பெரிய ஜீயர் சுவாமியின் ஸ்ரீ சுக்தியின் படிக்கு, ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் அருளிச்செய்த ஆறு திவ்யப்ரபந்தங்களும் ஸ்ரீ நம்மாழ்வார் நான்கு வேதங்களின் சாரமாக அணுக்ருஹித்த பிரபந்தங்களுக்கு அங்கமாக அமைந்தது.

இந்த பிரபந்தம் கடைக்குட்டி ஆழ்வார் அருளிச் செய்த சரமப் பிரபந்தம் ஆகும்(கடைசிப் பிரபந்தம்).

விஷய சுகங்களாலே ஈர்க்கப்பட்டு திரிந்து கொண்டிருந்த திருமங்கை மன்னனை திருத்திப் பணிகொள்ள திருவுள்ளம் கொண்ட எம்பெருமான், இவரை சாஸ்திரம் கொண்டு திருத்த முடியாது என்று தீர்மானித்து, தம் அழகைக் காட்டி, ஆழ்வாரை எம்பெருமானின் அழகிலே ஈடுபடச்செய்து, திருமந்திரத்தையும் உபதேசித்தருளி, சௌசீல்யம் முதலான திருக்கல்யாண குணங்களையும், உகந்து அருளின திவ்யதேசங்களையும் காட்டிக் கொடுக்க ஆழ்வார் தானும் வாடினேன் வாடி வருந்தினேன் மனத்தால் என்று தொடங்கி எம்பெருமான் எழுந்தருளி இருக்கும் இடங்களே பரமப் ப்ராப்யம் என்று நினைத்து மங்களாசாசனம் பண்ணிக் கொண்டு வந்தார்.

ஆழ்வார் தானும் எம்பெருமானின் இயற்கையான இன்னருளால் பற்பல திவ்யதேசங்களை மங்களாசாசனம் பண்ணிக்கொண்டிருக்க, எம்பெருமான் இவரை திருநாட்டுக்கு அழைக்க திருவுள்ளம் கொண்டு, சம்சாரத்தின் உண்மையான தன்மையை ஆழ்வாருக்கு காட்டி கொடுத்தாராம். ஆழ்வாரும் சம்சாரத்தின் தன்மையை அறிந்து அஞ்சி நடுங்கி – “ஆற்றங்கரை வாழ் மரம் போல்” “காற்றத்திடைப்பட்ட கலவர் மனம் போல்” “பாம்போடு ஒரு கூரையில் பயின்றார் போல்” “இருபாடெரி கொள்ளியினுள்ளேரும்பே போல்”
என்று தம் அச்சத்தை பலவாறாக சொல்லி கதறுகின்றார்.

கடைசியாக அந்தோ அடியேற்கு அருளாய் உன் அருளே என்று விண்ணப்பித்த பிறகும், எம்பெருமானும் பசி பசி என்று அழுகிற குழந்தைக்கு சோரிடாத அன்னையைப் போல் இவருக்கு பரமபக்தி பிறக்கும் வரை நம்மைக் காட்டிக் கொடுப்பதில்லை என்று தீர்மானித்தான். ஆழ்வாரும் மிகுந்த தண்ணீர் தாகம் உள்ளவர்கள் தண்ணீரைக் கண்டதும் வாரி இறைத்துக் கொண்டு பருகுமாபோலே, திருமங்கை மன்னனும் திருக்குறுந்தாண்டகத்தில் எம்பெருமானை தலையால் வணங்கியும், வாயினால் மொழிந்தும், நெஞ்சினால் நினைத்தும் மங்களாசாசனம் பண்ணினார்.

ஆழ்வாரும் தம்மை காட்டிகொடுக்காத எம்பெருமான் மீது வருத்தமுற்று நம்முடைய அபேக்ஷிதத்தை பூர்த்திபண்ண முடியாத எம்பெருமான் எதற்கு, அவனுடைய குணங்கள் எதற்கு என்று வினவிக் கொண்டு இருக்கையில் எம்பெருமானும் இனி நாம் இவருக்கு முகம் காட்டாமல் இருந்தால் இந்த ஜகத்தானது ஈஸ்வரனற்றதாய்விடும் என்று திருவுள்ளம் கொண்டு காட்டிக் கொடுக்க அதனால் ஏற்பட்ட சந்தோஷத்தைப் பாசுரமாக மங்களாசாசனம் பண்ணுகிறார் இந்த திருநெடுந்தாண்டகத்திலே.
திருநெடுந்தாண்டக திவ்யப் பிரபந்தம் முப்பது பாசுரங்கள் கொண்டது ஆகும். முதல் பத்து பாசுரம் – ஆழ்வார் தானான தன்மையில் பாடியது, இராண்டாம் பத்து பாசுரங்கள் திருத்தாயாரின் வார்த்தையாக அருளிச் செய்யப்பட்டது, மூன்றாம் பத்து பாசுரங்கள் தலைமகள் பாசுரமாக அருளிச் செய்யப்பட்டது ஆகும். ஓராண் வழி ஆசார்ய குருபரம்பரையில் எழுந்தருளி இருந்த ஸ்ரீ பராசர பட்டர் இந்த திவ்யப்ரபந்தத்திலே மிகவும் ஈடுபாடு கொண்டவர்.
தாண்டகம் என்பது ஒரு வகை பிரபந்தம் என்றும், இஷ்ட தேவதையை இந்த பிரபந்தத்தைக் கொண்டு புகழ்ந்து பாடுவது என்றும், என் சீரில் அமைந்திருக்கும் என்றும், அடிதோறும் இருபத்தாறு எழுத்துக்கள் குறைவின்றி இருக்க வேணும் என்றும் மகாவித்வான் ஸ்ரீ பிரதிவாதி பயங்கரம் அண்ணா சுவாமியின் பாசுர வியாக்யான அவதாரிகையில் விளக்கம் அளித்துள்ளார்.
அடியேனது சிற்றறிவுக்கு எட்டின அளவிலே எம்பெருமானின் சங்கல்பத்தாலும் ஆசார்ய கடாக்ஷத்தாலும் திருநெடுந்தாண்டகம் என்னும் பிரபந்தத்தில் அமைந்த பாசுரங்களின் அர்த்தத்தை எல்லோருக்கும் புரியும் படியாக எழுத ஆரம்பித்துள்ளேன். அடியேனது பதிவுகளில் குறை இருக்குமாயின் இந்த சிறியனை திருத்திப் பணிகொள்ளப் பிரார்த்திக்கிறேன்.

தாசானு தாசன்

இராமானுஜ சிஷ்யன்
வாழி எதிராசன்!

Advertisements
 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

 
%d bloggers like this: