RSS

திருப்பள்ளியெழுச்சி – ஐந்தாம் பாசுரம் முதல் பத்தாம் பாசுரம் வரை

25 Apr

ஸ்ரீ:

ஸ்ரீமதே இராமானுஜாய நம:
ஸ்ரீமத் வரவரமுநயே நம:
ஸ்ரீ பாலதந்வி குரவே நம:

ஐந்தாம் பாசுரம்:

புலம்பின புட்களும் பூம்பொழில்களின் வாய்*
போயிற்றுக் கங்குல் புகுந்தது புலரி*
கலந்தது குணதிசை கனைகடல் அரவம்*
களி வண்டு மிழற்றிய கலம்பகம் புனைந்த*
அலங்கலன் தொடையல் கொண்டு அடியிணை பணிவான்*
அமரர்கள் புகுந்தனர் ஆதலில் அம்மா*
இலங்கையர் கோன் வழிபாடு செய் கோயில்*
எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே*

ஐந்தாம் பாசுர அர்த்தம்:

முன் பாசுரத்தாலே வண்டுகள் உணர்ந்தமை கூறப்பட்டது. இந்த பாசுரத்திலே சோலைகளிலே பொழுது விடிந்தது கூட அறியாமல் மிகவும் சுகமாக உறங்கிக் கொண்டிருந்த பறவைகள் பொழுது விடிந்ததை கண்டு உணர்ந்தமை தெரிவிக்கப் படுகிறது.

(இங்கு பறவைகள் விஷயமாக சொன்னது சம்சாரிகளுக்கு ஒக்கும் என்று பெரியவாச்சான்பிள்ளை பணிப்பர் என்று ஸ்ரீ உ. வே. பிரதிவாதி பயங்கரம் அண்ணா சுவாமியின் உரைகளிலே கண்டு மகிழலாம்)

இரவு பொழுதானது கழிந்து, காலை பொழுது வந்தாயிற்று. கிழக்கு திசையிலே கடலினுடைய ஓசையானது கலந்தது. தேனைப் பருகும் வண்டுகள் சப்தியாநிற்கும் பல வகையான பூக்களாலே தொடுக்கப் பட்ட மாலைகளை தேவரீருடைய திருவடிகளிலே சமர்பிப்பதற்கு தேவர்களும் வந்து நிற்கின்றனர். அதனாலே இலங்கையர் கோன் என்ற விபீஷணன் வழிபாடு செய்த கோயிலிலே கண்வளர்ந்து அருளுகிற சுவாமியே! பள்ளி எழுந்தருளாய் என்று மங்களாசாசனம் பண்ணுகிறார்.

ஆறாம் பாசுரம்:

இரவியர் மணி நெடும் தேரொடும் இவரோ*
இறையவர் பதினொரு விடையரும் இவரோ*
மருவிய மயிலினன் அறுமுகன் இவனோ*
மருதரும் வசுக்களும் வந்து வந்தீண்டி*
புரவியோடு ஆடலும் பாடலும் தேரும்*
குமர தண்டம் புகுந்தீண்டிய வெள்ளம்*
அருவரை அனைய நின் கோயில் முன் இவரோ*
அரங்கத்தம்மா பள்ளி எழுந்தருளாயே*

ஆறாம் பாசுர அர்த்தம்:

பன்னிரண்டு ஆதித்யர்களும், ஏகாதச ருத்ரர்களும், தேவசேனாதிபதியான சுப்ரமணியனும், தேவதைகள் மற்றும் அஷ்ட வசுக்கள் ஆகிய எல்லோரும் தேவரீர் பள்ளி உணர்ந்தருளும் சமயத்தில் முதல் கடாக்ஷம் தம்மதாக இருக்க, மலை போன்று திரண்டு நிற்கிறார்கள், எம்பெருமான் பள்ளிஎழுந்தருளாயே என்று மங்களாசாசனம் பண்ணுகிறார்.

ஏழாம் பாசுரம்:

அந்தரத்தமரர்கள் கூட்டங்கள் இவையோ?*
அருந்தவ முனிவரும் மருதரும் இவரோ?*
இந்திரன் ஆனையும் தானும் வந்திவனோ?*
எம்பெருமான் உன கோயிலின் வாசல்*
சுந்தரர் நெருக்க விச்சாதரர் நூக்க*
இயக்கரும் மயங்கினர் திருவடித் தொழுவான்*
அந்தரம் பாரிடம் இல்லை மற்றிதுவோ*
அரங்கத்தம்மா! பள்ளி எழுந்தருளாயே*

ஏழாம் பாசுர அர்த்தம்:

அடியேனுக்கு ஸ்வாமியான தேவரீர் திருக்கோவிலின் வாயிலிலே தேவேந்திரனும், அவனுடைய வாகனமான ஐராவதமும், தேவர்களும் அவர்களுடைய பரிவாரங்களும், மகரிஷிகளும், யக்ஷர்களும், மற்றும் கந்தர்வர் நெருக்க சாதரர் தள்ளவும், தேவரீருடைய திருவடிகளை சேவிக்க வந்து நிற்கின்றனர், அரங்கத்தம்மா பள்ளிஎழுந்தருளாய் என்று மங்களாசாசனம் பண்ணுகிறார் ஆழ்வார்.

எட்டாம் பாசுரம்:

வம்பவிழ் வானவர் வாயுறை வழங்க*
மாநிதி கபிலை ஒண் கண்ணாடி முதலா*
எம்பெருமான் படிக்கமலம் காண்டற்கு*
ஏற்பன வாயின கொண்டு நன் முனிவர்*
தும்புரு நாரதர் புகுந்தனர் இவரோ*
தோன்றினன் இரவியும் துளங்கொளி பரப்பி*
அம்பர தலத்தில் நின்று அகல்கின்றது இருள் போய்*
அரங்கத்தம்மா! பள்ளி எழுந்தருளாயே*

எட்டாம் பாசுர அர்த்தம்:

தேவரீருக்கு சமர்பிப்பதற்காக சிறந்த மாநிதியான சங்கநிதி மற்றும் பத்மநிதிகளை கையிலே வைத்துக்கொண்டு தேவர்களும், காமதேனுவும், ஒளி பொருந்திய கண்ணாடி மற்றும் தேவரீருக்கு கண்டருள்வதர்க்கு உகக்கும் அனைத்து உபகாரங்களையும் எடுத்துக் கொண்டு மகரிஷிகளும், நாரதரும் வந்து நின்றார்கள். கதிரவனும் தன்னுடைய தேஜஸ்சை எங்கும் பரவச் செய்து உதயமாக, இருளானது ஆகாசத்திலிருந்து நீங்கியது. அரங்கத்தம்மா! பள்ளி எழுந்தருளாய் என்று மங்களாசாசனம் பண்ணுகிறார் இந்த பாசுரத்தில்.

ஒன்பதாம் பாசுரம்:

ஏதமில் தண்ணுமை ஏக்கம் மத்தளி*
யாழ் குழல் முழுவமோடு இசை திசை கெழுமி*
கீதங்கள் பாடினர் கின்னரர் கெருடர்கள்*
கந்தருவர் அவர் கங்குலுள் எல்லாம்*
மாதவர் வானவர் சாரணர் இயக்கர்*
சித்தரும் மயங்கினர் திருவடித் தொழுவான்*
ஆதலில் அவர்க்கு நாளோலக்கம் அருள*
அரங்கத்தம்மா! பள்ளி எழுந்தருளாயே*

ஒன்பதாம் பாசுர அர்த்தம்:

வாத்தியம், மத்தளம், வீணை, புல்லாங்குழல் ஆகியவற்றைக் கொண்டு திக்குகள் எங்கும் இசை கூட்டி பாட்டு பாடக் கூடியவர்களான கின்னரர்களும், கருடர்களும், கந்தர்வர்களும், மகரிஷிகளும், தேவர்களும், யக்ஷர்களும் மற்றும் சித்தர்களும் தேவரீருடைய திருவடித் தாமரைகளை சேவிப்பதற்காக இரவுப் பொழுது முழுவதும் மோஹித்துக் கிடந்தனர். அவர்களுக்கு பகல் ஓலக்கம் அருள எழுந்தருள வேணும் என்று மங்களாசாசனம் பண்ணுகிறார் ஆழ்வார்.

பத்தாம் பாசுரம்:

கடிமலர்க் கமலங்கள் மலர்ந்தன இவையோ?*
கதிரவன் கனைகடல் முளைத்தனன் இவனோ*
துடி இடையார் சுரி குழல் பிழிந்துதறி*
துகில் உடுத்தேறினர் சூழ் புனல் அரங்கா*
தொடை ஒத்த துளவமும் கூடையும் பொலிந்து*
தோன்றியதோள் தொண்டரடிப்பொடி என்னும் அடியனை*
அளியன் என்றருளி உன் அடியார்க்கு ஆட்படுத்தாய்*
பள்ளி எழுந்தருளாயே!

பத்தாம் பாசுர அர்த்தம்:

திருக்காவேரியாலே சூழப் பட்ட திருவரங்கத்திலே கண்வளர்ந்து அருளும் அரங்கனே! பரிமளம் மிக்க தாமரைப் பூக்கள் மலர்ந்துவிட்டன. தாமரையை மலரச் செய்யும் கதிரவனும் தோன்றிவிட்டான். மாதர்கள் தம் குழலைப் பிழிந்து உதறிவிட்டு அவரவர்களுடைய ஆடைகளை அணிந்து கொண்டு கரையேறிவிட்டார்கள். பூக்குடலையும் தோளுமாக வந்து நிற்கும் அடியனை(தாசனை) அங்கீகரித்தருளி அத்தாணிச் சேவகம் பண்ணிக் கொண்டிருக்கும் பாகவதர்களின் திருவடிகளில் ஆளாக்க தேவரீர் எழுந்தருள வேணும் என்று மங்களாசாசனம் பண்ணுகிறார்.

அடியேனது சிற்றறிவுக்கு எட்டின அளவிலே எழுதியுள்ளேன். உரையில் குறை இருக்குமாயின் அடியேனைத் திருத்திப் பணிகொள்ளுமாறு பெரியோர்களைப் பிரார்த்திக்கிறேன்.

தாசானு தாசன்

இராமானுஜ சிஷ்யன்

வாழி யதிராஜன்!

Advertisements
 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

 
%d bloggers like this: