RSS

அமலனாதிபிரான் (ஆறாம் பாசுரம் முதல் பத்தாம் பாசுரம் வரை)

09 May

ஆறாம் பாசுரம்:

துண்டவெண் பிறையன்* துயர் தீர்த்தவன்*
வண்டு வாழ் பொழில் சூழ்* அரங்க நகர் மேய அப்பன்*
அண்டரண்ட பகிரண்டத்து* ஒரு மாநிலம் எழுமால் வரை*
முற்றும் உண்ட கண்டம் கண்டீர்* அடியேனை உய்யக் கொண்டதே*

ஆறாம் பாசுர விளக்கம்:

ஆறாம் பாசுரத்திலே கண்டம் என்று சொல்லக்கூடிய திருக்கழுத்துப் பகுதியை அனுபவிக்கிறார். வெண்பிறையன் துயர் தீர்த்த, வண்டுவாழ் சோலைகளால் சூழப்பட்ட திருவரங்கத்திலே எழுந்தருளி இருக்கும் திருவரங்கனாதனின் கழுத்தானது ஏழு உலகங்களையும் பிரளய காலத்திலே அடக்கிக் கொண்டது. அந்த கண்டமானது தனக்கும் உய்வு உபாயமாக இருந்தது என்று மங்களாசாசனம் பண்ணுகிறார் ஆழ்வார்.

ஏழாம் பாசுரம்:

கையினார்* சுரி சங்கு அனல் ஆழியர்*
நீள்வரை போல் மெய்யனார் துளப விரையார் கமழ் நீள் முடி எம் அய்யனார்*
அணி அரங்கனார்* அரவின் அணை மிசை மேய மாயனார்*
செய்ய வாய் ஐயோ* என்னைச் சிந்தை கவர்ந்ததுவே*

ஏழாம் பாசுர விளக்கம்:

திருக்கையில் சங்கு சக்கரங்களை ஏந்தியவராய், பெரிய மலை போன்ற திருமேனியை உடையவராய், துளசி மணம் கமழும் நீள்முடி உடையவராய், எமக்குத் தலைவராய், அணியரங்கனாய் அரவில் பள்ளிகொண்டிருக்கும் எம்பெருமானுடைய திருவாயானது தம் நெஞ்சை கொள்ளை கொண்டது என்று மங்களாசாசனம் பண்ணுகிறார் ஆழ்வார்.

எட்டாம் பாசுரம்:

பரியனாகி வந்த* அவுணனுடல் கீண்ட*
அமரர்க்கரிய ஆதிப்பிரான்* அரங்கத்தமலன் முகத்து*
கரியவாகிப் புடை பரந்து* மிளிர்ந்து செவ்வரியோடி*
நீண்ட அப்பெரியவாய கண்கள்* என்னைப் பேதைமை செய்தனவே*

எட்டாம் பாசுர விளக்கம்:

கொடிய அசுரனை சம்ஹரித்தவனும், அமரருக்கும் அறியமுடியாத ஆதிப்பிரானான அரங்கநாத எம்பெருமானுடைய திருக்கண்கள் கருத்த நிறமாகவும், விசாலமாகவும், ஒளி பெற்று சிவந்து நீண்டதாகவும் இருக்கும். அத்திருக்கண்கள் ஆனது தம்மை பேதைமை செய்தது என்று மங்களாசாசனம் பண்ணுகிறார்.

ஒன்பதாம் பாசுரம்:

ஆலமாமரத்தின் இலைமேல்* ஒரு பாலகனாய்*
ஞாலம் ஏழும் உண்டான்* அரங்கத்து அரவினணையான்*
கோலமா மணியாரமும்* முத்துத்தாமமும் முடிவில்லதோர் எழில்*
நீல மேனி ஐயோ* நிறை கொண்டது என் நெஞ்சினையே*

ஒன்பதாம் பாசுர விளக்கம்:

பிரளய காலத்தில் ஏழு உலகங்களையும் உண்டவனும் , பிரளய காலத்தில் நீரில் ஆலிலையில் துயில் கொண்டவனும், திருவரங்கத்திலே திருவனந்தாழ்வான் மேல் சயனித்து இருப்பவனும், கௌஸ்துப மணியை அணிந்தவனுமான இந்த எம்பெருமானின் திருமேனி அழகு என் நெஞ்சினை நிறை கொண்டது என்று மங்களாசாசனம் பண்ணுகிறார். அதை (எம்பெருமானின் அழகினை)
வெளிக்கொணரவே “ஐயோ” என்று சொல்லும் அளவிற்கு அழகானது என்கிறார்.

பத்தாம் பாசுரம்:

கொண்டால் வண்ணனை* கோவலனை வெண்ணை உண்ட வாயன்*
என் உள்ளம் கவர்ந்தானை*
அண்டர் கொண் அணியரங்கன்*
என் அமுதினைக் கண்ட கண்கள்* மற்றொன்றினைக் காணாவே*

பத்தாம் பாசுர விளக்கம்:

அப்படிப்பட்ட அழகுடையவன், கண்ணனாக அவதரித்து, ஆய்ச்சியர்கள் வைத்திருந்த வெண்ணையைத் திருடியுண்டவனும், என் உள்ளத்தைக் கொள்ளைக் கொண்டவனும், வானவர்க்குத் தலைவனும், அரங்க நகருக்கு அதிபதியான திருவரங்கனின் திருமேனியைக் கண்ட என் கண்களானது இனி மற்றொன்றையும் காணாது என்று மங்களாசாசனம் பண்ணுகிறார்.

அடியேனது சிற்றறிவுக்கு எட்டின அளவிலே, அடியேனுக்கு ஸ்வாமி எம்பெருமானார் அனுக்ரஹித்த அளவிலே இந்தபதிப்பு அமைந்திருக்கும். குறை இருக்குமாயின் அடியேனைத் திருத்திப் பணிகொள்ள பிரார்த்திக்கிறேன்.
அடியேன் இராமானுஜ தாசானு தாசன்

 

One response to “அமலனாதிபிரான் (ஆறாம் பாசுரம் முதல் பத்தாம் பாசுரம் வரை)

  1. ஜெனகராஜன், ஸ்ரீவிலிபுத்தூர்

    June 1, 2016 at 9:34 am

    அருமை

     

Leave a comment