RSS

அமலனாதிபிரான் பாசுர விளக்கம் (முதல் ஐந்து பாசுரங்கள் மட்டும்)

20 Apr

தனியன்கள்:
ஆபாத சூட மநுபூய ஹரிம் ஷயானம் நம்
மத்யே கவேரதுஹிதுர் முதிதாந்தராத்மா
அத்ரஷ்ட்ருதாம் நயநயோர் விஷயாந்தரானாம்
யோ நிஷ்சிகாய மநவை முநிவாஹனம் தம்

காட்டவே கண்ட பாத கமலம் நல்லாடை உந்தி*
தேட்டரும் உத்தர பந்தம் திருமார்பு கண்டம் செவ்வாய்*
வாட்டமில் கண்கள் மேனி முனியேறித் தனி புகுந்து*
பாட்டினால் கண்டு வாழும் பாணர் தாள் பரவினோமே*

விளக்கம்:

காவிரிக்கரையின் நடுவில் திருக்கண்வளர்ந்தருளுகிற அழகிய மணவாளப் பெருமானைத் திருமுடி முதல் திருவடி வரை கண்டு அனுபவித்து, அவருடைய திருக்கண்கள் ஆனது அவ்வெம்பெருமானைத் தவிர இனி மற்றொன்றினையும் காணாது என்று அருதியிட்டவரும், ஸ்ரீ லோகசாரங்க முனியை வாகனமாகக் கொண்டவருமான ஸ்ரீ திருப்பாணாழ்வாரை மனதில் நினைக்கக் கடவேன்.

ஸ்ரீ லோக சாரங்கர் தோளில் ஏற்றிக்கொண்டு திருக்கோவிலுக்கு உள்ளே சென்று ஆழ்வாரை நிறுத்த, அவரும் தம்மை மறந்து எம்பெருமானின் திருமேனியைக் கண்ணாரக்கண்டு அனுபவித்து அமலனாதிபிரான் என்று தொடங்கி அரங்கன் காட்டி அருளினபடி பாசுரமாக பாடிய ஸ்ரீ திருப்பாணாழ்வார் உடைய திருவடிகளை துதிக்கப் பெற்றோம்

அமலனாதிபிரான்:

முதல் பாசுரம்:

அமலனாதிபிரான்* அடியாருக்கு என்னை ஆட்படுத்த விமலன்*
விண்ணவர் கோன்* விரையார் பொழில் வேங்கடவன்*
நிமலன் நின்மலன் நீதிவானவன்* நீள் மதில் அரங்கத்தம்மான்*
திருக்கமலபாதம் வந்து* என் கண்ணினுள்ளன ஒக்கின்றதே*

முதல் பாசுர விளக்கம்:

இந்த பாசுரத்திலே வரும் அமலன், விமலன், நிமலன் மற்றும் நின்மலன் ஆகிய வார்த்தைகளின் பொருள் ஒன்றே ஆகும், ஆனால் தாத்பர்ய பேதம் மட்டுமே கொள்ள வேணும்.

எம்பெருமான் பரிசுத்தன் ஆகையாலே, தாழ்ந்தவரான தாம் அரங்கன் சந்நிதிக்குள் நுழைந்தால் எம்பெருமானுக்கு குறைவு வந்து விடும் என்று நினைத்தாராம், ஆனால் எம்பெருமானுக்கோ எந்தவித குறையும் ஏற்படவில்லை என்பதை உணர்ந்தவரான ஆழ்வார் அமலன் என்று மங்களாசாசனம் பண்ணுகிறார்.

தன் சிறுமையைப் பாராமல், தன்னை அடியாருக்கு ஆட்படுத்திய பேரொளியைக் கண்டு அனுபவித்து விமலன் என்று மங்களாசாசனம் பண்ணுகிறார்.

பிரமன், சிவன் முதலியவர்களும் அஞ்சி அணுகவேண்டிய ஐஸ்வர்யம் மிகுந்திருந்தும், அடியாருக்கு எளியவனாய் இருக்கும் தன்மையை அறிந்து நிமலன் என்று மங்களாசாசனம் பண்ணுகிறார்.

அடியாருடைய குற்றங்களைக் கண்டு அவற்றை போக்யமாகக் கொள்ளும் எம்பெருமானை நின்மலன் என்கிறார்.

தூய்மையுடையவனாய், ஜகத்காரண பூதனாய், உபகாரகனாய், தாழ்ந்தவனான என்னை அடியாருக்கு ஆட்படுத்தியவனாய், திவ்ய தேஜசை உடையவனாய், நித்யசூரிகளுக்கு தலைவனாய், பரிமளம் மிக்க சோலைகளையுடைய திருவேங்கடமலைமீது தங்கியவனாய், ஆஸ்ரித பாரதந்த்ரனாய், அடியாருடைய குற்றங்களைக் காணாதவனாய், பரமபதத்துக்கு நிர்வாஹனாய், உயர்ந்த மதிள்களையுடைய கோயிலிலே கண்வளர்ந்தருளும் அழகிய மணவாளனுடைய திருவடித்தாமரைகள், தானே வந்து அடியேனுடைய கண்களில் புகுந்தது போலே இருக்கின்றன என்று மங்களாசாசனம் பண்ணுகிறார்.

இரண்டாம் பாசுரம்:

உவந்த உள்ளத்தனாய்* உலகம் அளந்து அண்டமுற*
நிவந்த நீள் முடியன்* அன்று நேர்ந்த நிசாசரரை*
கவர்ந்த வெங்கணைக் காகுத்தன்* கடியார் பொழில் அரங்கத்தம்மான்*
அரைச் சிவந்த ஆடையின் மேல்* சென்றதாம் என சிந்தனையே*

இரண்டாம் பாசுர விளக்கம்:

சிறப்புப் பொருள்: எம்பெருமான் மீது ருசி கண்டமையை உணர்த்தும் பாசுரம்:

எம்பெருமான் த்ரிவிக்ரம அவதாரம் எடுத்த பொது அடியார் அடியாரல்லாதார் என்ற வேறுபாடு இன்றி எல்லோர் தலையிலும் தம் திருவடியை வைத்து அருளி, மூன்று உலகங்களையும் அளந்து, அண்டங்கள் அளவும் சென்று முட்டும் படியான பெரிய திருமுடியை உடையவனாய், முன்னொரு காலத்தில் எதிர்த்து வந்த இராக்ஷஷர்களைக் கொன்ற கொடிய அம்புகளை உடைய இராமபிரானாய் மணம் வீசும் சோலைகளையுடைய திருவரங்கத்தில் எழுந்தருளி இருக்கும் எம்பெருமானின் இடுப்பில் சாற்றிய திவ்ய பீதாம்பரத்தின் மேல் என்னுடைய நினைவானது பதிந்தது.

மூன்றாம் பாசுரம்:

மந்திபாய்* வட வேங்கட மாமலை*
வானவர்கள் சாந்தி செய்ய நின்றான்* அரங்கத்து அரவினணையான்*
அந்திபோல் நிறத்தாடையும்* அதன் மேல் அயனைப் படைத்ததோர் எழில்*
உந்தி மேல் அதன்றோ* அடியேன் உள்ளத்து இன்னுயிரே*

மூன்றாம் பாசுர விளக்கம்:

குரங்குகள் தாவும் திருவேங்கட மலைமேல், வானவர்கள் என்று சொல்லப்படும் நித்ய சூரிகள் பூக்களைக் கொண்டு ஆராதிக்கும்படி நிற்பவனாய், திருவரங்கத்திலே ஆதிசேஷன் எனும் போக்யமான திருப்படுக்கையை உடையவனான அழகிய மணவாளனின் செவ்வானம் போன்ற நிறத்தையுடைய பீதாம்பரம் மற்றும் பிரமனைப் படைத்த ஒப்பற்ற அழகுடைய திருநாபிக் கமலம் ஆகியவற்றின் மீது என் ஆத்மாவானது படிந்தது என்று மங்களாசாசனம் பண்ணுகிறார்.

நான்காம் பாசுரம்:

சதுரமா மதிள் சூழ் இலங்கைக்கு இறைவன்* தலை பத்து உதிர ஓட்டி*
ஓர் வெங்கணை உய்த்தவன்* ஓதவண்ணன்*
மதுரமா வண்டு பாட* மாமயில் ஆடரங்கத்தம்மான்*
திருவயிற்று உதரபந்தம்* என் உள்ளத்துள் நின்று உலாகின்றதே*

நான்காம் பாசுர விளக்கம்:

நான்காம் பாசுரத்திலே உதரபந்தனத்தை சேவிக்கிறார். நான்கு பக்கத்திலும் மதில்களால் சூழப்பட்ட இலங்கையின் தலைவனான இராவணனின் பத்து தலைகளையும் அருந்துவிழச் செய்து, போரில் தோற்று ஓடச் செய்தவனும், வண்டுகள் இசைபாட, மயில்கள் ஆடும்படியதான அழகிய சோலையை உடைய அரங்கத்தம்மானாகிய இராமபிரானுடைய உதரபந்தனம்(யசோதையால் கட்டப்பட்ட கயிற்றின் அடையாளம்) என் நெஞ்சில் உலாவுகின்றது.

ஐந்தாம் பாசுரம்:

பாரமாய* பழ வினை பற்றறுத்து*
என்னைத் தன் வாரமாக்கி வைத்தான்* வைத்ததன்றி என்னுள் புகுந்தான்*
கோரமா தவம் செய்தனன் கொல் அறியேன்* அரங்கத்தம்மான்*
திருவாரமார்பதன்றோ* அடியேனை ஆட்கொண்டதே*

ஐந்தாம் பாசுர விளக்கம்:

இந்த பாசுரத்திலே திருமார்பின் அழகைக் கண்டு ஆனந்திக்கிறார். அவனுடைய திருமார்பானது ஆழ்வாரை எப்படி ஆட்படுத்திக் கொண்டது என்பதை உணர்த்தும் பாசுரமாக அமைந்த பாசுரம் ஆகும். “என்னுடைய பழைய வினைகளை எல்லாம் ஒரு நொடிப்பொழுதில் தொலைத்ததோடு மட்டும் அல்லாமல் என்னை அவனுக்கு ஆட்படுத்தியும், என்னுள் புகுந்து தங்கியும் விட்டான் என்று மங்களாசாசனம் பண்ணுகிறார்”.

உரையில் குறை இருப்பின் அடியேனைத் திருத்திப்பணிகொள்ளப் பிரார்த்திக்கிறேன்.

அடியேன் இராமானுஜ தாசானு தாசன்

Advertisements
 
 

One response to “அமலனாதிபிரான் பாசுர விளக்கம் (முதல் ஐந்து பாசுரங்கள் மட்டும்)

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

 
%d bloggers like this: