RSS

ஸ்ரீ வைஷ்ணவன்

11 Jul

ஸ்ரீவைஷ்ணவ சம்ப்ரதாயம் ஒரு அறிமுகம்:

யாவரும் ஸ்ரீ வைஷ்ணவனாகப் பிறப்பதில்லை. இந்த உலகில் பிறந்த ஒவ்வொருவரும் ஸ்ரீ வைஷ்ணவன் ஆகலாம். ஸ்ரீவைஷ்ணவ மதம் என்பது ஒரு கடல் போன்றது ஆகும். பல இடங்களில் பெய்த மழையானது ஓடை, நதி ஆகியவை வழியாக கடலை வந்து அடைவதைப் போல இவ்வுலகத்தில் பிறந்த எல்லோரும் எந்த வேறுபாடும் இன்றி ஸ்ரீ வைஷ்ணவனாக ஆகலாம். இதற்க்கு நாம் செய்ய வேண்டியது எல்லாம் ஒரு சதாசார்யனை அண்டி சரணாகதி செய்து பஞ்சசம்ச்காரங்களைப் பெற்றுக்கொள்ளவேணும்.

ஆசார்ய சம்பந்தத்தின் அவச்யம்:

ஒரு குழந்தையிடம் தன் தகப்பனாரைக் காட்டி இது யார் என்று சொல்லு என்னால் அது உடனே என் அப்பா என்று சொல்லும், அதே அனைத்து சரீர உறவு முறைகளை அக்குழந்தையானது அறிந்திருக்கும். ஆனால் எம்பெருமானைக் காட்டி இது யார் என்று கேட்டால் அக்குழந்தை பகவான் என்று சொல்லும், ஆனால் பகவான் யார், பகவானுக்கும் நமக்கும் உள்ள உறவு முறை யாது ஆகியவை அக்குழந்தைக்குத் தெரியாது. இதை உணர்த்துபவர் ஆசார்யன் ஆவார்.

ஆசார்யன் என்பவர் யார்:

பவசாகரமான இந்த சம்சார வாழ்க்கையில் சிக்கித் தவிக்கும் நம் போன்ற ஜீவாத்மாக்களுக்கு ஹிதோபதேசம் பண்ணி திருத்திப் பணிகொண்டு எம்பெருமானிடம் நம்மைச் சேர்ப்பவரே ஆசார்யன் ஆவார். ” கடகக்ருத்யம் பண்ணுபவர்” . எம்பெருமானுக்கும் நமக்கும் உள்ள அறுக்க முடியாதஉறவைப் பற்றி சிஷ்யர்களுக்கு எடுத்துச் சொல்லி, அதாவது எம்பெருமானுக்கு ஜீவாத்மா அடிமை என்பதை உணர்த்தி அவனுக்கு கைங்கர்யம் செய்வதே பரம புருஷார்த்தம் என்பதை நன்கு உணரவைப்பார்.

ஆசார்யன் செய்வது என்ன:

ஆசார்யனிடம் இருந்து பஞ்சசம்ஸ்காரங்களைப் பெற்றுக்கொள்ளவேனும். ஐந்து விதமான செயல்கள் அடங்கியுள்ள சம்ஸ்காரம் என்பதால் இதைப் பஞ்சசம்ஸ்காரம் என்று சொல்லுவர்.

விளக்கம்:

தாப சம்ஸ்காரம்: ஆசார்யன் சுவாமி  அக்னியில் ஹோமம் செய்து அதில் சங்கு மற்றும் சக்கரம் ஆகியவற்றை காய்ச்சி, சிஷ்யனின் இரண்டு தோள்களிலும் பொரிப்பார். சுவாமி நம்முடைய உடலும் உள்ளமும் அவனுடைய உடைமைகள் என்பதை உணர்த்துவார். ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு இது முதல் அடையாளம் ஆகும். சுமங்கலிகளின் திருமாங்கல்யம் போலே இந்த சம்ஸ்காரம் ஆகும். சுமங்கலிகள் திருமாங்கல்யம் ஏற்றுக்கொண்ட பிறகு, தன்னுடைய பர்த்தாவைத் தவிர வேறு ஒருவனை நினையாதவளாய் இருப்பது போல, ஒவ்வொரு ஸ்ரிவைஷ்ணவரும் (எம்பெருமானே கதி என்றிருத்தல்)  மறந்தும் புறந்தொழா மாந்தாரக இருத்தல் அவச்யம் ஆகும். சுருக்கமாகச் சொன்னால் நாம் பார்யையைப் போன்று(ஜீவாத்மா), எம்பெருமானே பர்த்தா ஆவான் என்பதை உணர்த்துவதர்க்கே இந்த சம்ஸ்காரம் ஆகும்.

புண்ட்ர ஸம்ஸ்காரம்:

பன்னிரு திருமண்காப்புகளை, அதாவது உபவ்யுஹ எம்பெருமான்களின் திருநாமங்களைக் கொண்டு நம் திருமேனியில் எங்கு எப்படி திருமண்காப்புகளைச் சாற்றிக்கொள்ளவேண்டும் என்பதை விவரிப்பார். திருமண்காப்பு என்பதற்கு ஊர்த்வ புண்ட்ரம் என்ற திருநாமமும் உண்டு. அன்று தொடக்கமாக தினமும் ஆசார்யன் சுவாமி அநுக்ரஹித்த க்ரமத்திலே திருமண்காப்புகளைத் தரிப்பது என்பது மிகவும் அவச்யமாகும். முடியாமல் போனால் விசேஷ தினங்கள் மற்றும் விடுமுறை நாட்களிலாவது தரித்தல் மிகவும் நன்று. இந்த பன்னிரு திருமன்காப்புகளுக்குப பெயர் த்வாதச ஊர்த்வபுண்ட்ரம்.

 நாம சம்ஸ்காரம்:

பஞ்ச சம்ஸ்காரம் பண்ணிக்கொண்ட சிஷ்யனுக்கு ஆசார்யன் சுவாமி ஒரு தாஸ்ய நாமத்தை ப்ரசாதித்து அருளுவார். அது முதல் நீ யார் என்று யாராவது கேட்டாலோ  அல்லது தன்னைப் பிறரிடம் அறிமுகப் படுத்திக் கொள்வதற்கோ ஒருவர் அடியேன் ராமானுஜ தாசன் என்றே சொல்ல வேண்டும். 

மந்த்ர சம்ஸ்காரம்:

ஆசார்யன் சுவாமி மூன்று ரஹஸ்ய மந்த்ரங்களை உபதேசிப்பார். அதாவது மூல மந்த்ரமான திருமந்திரம். இதற்க்கு மந்திர ராஜம் என்ற பெயருண்டு. இந்த மந்திரத்தை அனுஷ்டிக்க வேண்டிய கிரமத்தோடு ச்ரியப்பதி  பதரிகாச்ரமத்தில் தானே ஆசார்யனாகவும் சிஷ்யனாகவும் இருந்து கொண்டு உபதேசித்து அருளினான்.

இதன் பொருள் சர்வ சேஷியான எம்பெருமானுக்கே எல்லா அடிமைகளையும் செய்யக்கடவேன் என்பதே ஆகும். அடுத்தது த்வய மந்திரம். இந்த மந்திரத்தை பெருமான் திருவைகுண்டத்தில் பிராட்டிக்கு உபதேசித்து அருளினான். இதன் பொருள் லக்ஷ்மிநாதனான எம்பெருமானின் திருவடியே உபாயமாகப் பற்றி அவனுக்கு பிராட்டியின் சேர்த்தியிலே கைங்கர்யம் புரிய வேணும் என்பதே ஆகும். அடுத்தது சரமச்லோகம், ஸ்ரீ கீதாசார்யன் கண்ணன் எம்பெருமானால் குருக்ஷேத்ரப் போர்க்களத்தில் உபதேசிக்கப் பட்டது. இதன் பொருள் “நீ செய்யும் தர்மங்களே மோக்ஷ உபாயம் என்பதைக் கைவிட்டு, என் ஒருவனையே சித்தோபாயமாகப் பற்றிக்கொள், நான் உன்னை அனைத்து பாபங்களில் இருந்து விடுவிக்கிறேன்” என்பதாகும்.

இந்த மூன்று மந்திரங்களையும் உபதேசித்து நம் ஆழ்வார்கள் மற்றும் பூருவர்கள் அநுக்ரஹித்த சரணாகதி நெறியினை சிஷ்யனுக்கு உபதேசித்து அருளி அவனை சரணாகதனாக மாற்றி அவனிடத்தில் கைங்கர்ய ருசியை பிறப்பிப்பார்கள்.

யாக சம்ஸ்காரம்: பகவத் ஆராதனம் பண்ணினால் தான் ஒருவன் பாகவதன் ஆக முடியும், அதனால் பகவானுக்கு எப்படி திருவாராதனம்  கண்டருளப்பண்ணவேணும் என்பதை கற்றுக் கொடுப்பார், இதற்குப் பெயர் யாக சம்ஸ்காரம் ஆகும்.

சரணாகதி :

எம்பெருமானை அடைவதற்கு சிறந்த வழியாக நம் ஸ்ரீவைஷ்ணவ சம்ப்ரதாயத்தில் கொண்டாடப் படுவது சரணாகதி என்கிற பிரபத்தி நெறியே ஆகும். ஆழ்வார்களும் இந்நெறியைப் பற்றி தம் பாசுரங்களில் அறிவிலிகளான நமக்கு நன்கு புரியும் படி எடுத்துக் காட்டியுள்ளனர். இந்தச் சரணாகதி நெறியைக் கற்றவர், கல்லாதவர், உயர்ந்தவர், தாழ்ந்தவர் என்ற வேறுபாடு இன்றி அனுஷ்டிக்கலாம். இதற்க்கு கால நியமமோ, பிரகார நியமமோ, அதிகாரி நியமமோ, பல நியமமோ கிடையாது. விஷய நியமம் மட்டுமே உண்டு என்பது நம் பூருவர்கள் கண்ட உண்மை.

ஆச்சார்ய அபிமானம்:

பக்தியில் அசக்தனுக்கு பிரபத்தி, ப்ரபத்தியிலும் அசக்தனுக்கு இது என்று சுவாமி பிள்ளை உலகாரியனின் திருவாக்கு. அதாவது பக்தி செய்யும் ஆற்றல் இல்லாதவர்களுக்கு சரணாகதியே உரிய நெறி என்றும், அதிலும் ஆற்றல் இல்லாதவருக்கு ஒரே வழி ஆச்சார்ய அபிமானம் என்ற பரம ரஹஸ்யத்தை நமக்கு தெளிய வைக்கிறார்.

ஆசார்யனின் ஏற்றம்:

பேறொன்று மற்றில்லை நின் சரணன்றி அப்பேரளித்தர்க்கு

ஆறொன்றுமில்லை மற்றச் சரண் அன்றி என்பது திருவரங்கத்து அமுதனார் திருவாக்கு ஆகும். அதாவாது ஆசார்யனைப்  பற்றுதல் எம்பெருமானின் காலைப் பிடித்து காரியம் சாதித்துக் கொள்ளுதல் போலும், எம்பெருமானைப் பற்றுதலோ எம்பெருமானின் கையைப் பிடித்து காரியம் சாதித்துத் கொள்ளல் போன்றதாகும். ஆக காலைப் பிடிப்பதாலே எம்பெருமானின் காருண்யம் மேலோங்கி காரியம் எளிதில் கைகூடும். எம்பெருமானுக்கு ஆன்மாவைத் தந்தும், ஆன்மாவிற்கு எம்பெருமானைக் காட்டியும் பெரிய உபகாரமான கடக க்ருத்யம் செய்வதால் ஆசார்யனே பரம்பொருள், சிறந்த செல்வம், சிறந்த புகலிடம் (அடைந்தவர்க்கெல்லாம் அன்பன்) உயர்ந்த கல்வி என்று நம் பூருவர்கள் கொண்டாடினார்கள்.

அடியேனுடைய சிற்றறிவுக்கு எட்டின அளவிலே எழுதியுள்ளேன். குறை இருக்குமாயின் அடியேனைத் திருத்திப் பணிகொள்ளப் பிரார்த்திக்கிறேன்.

 அடியேன் ராமானுஜ தாசன்

Advertisements
 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

 
%d bloggers like this: