RSS

பெரிய திருமொழி முதல் பத்து ஏழாம் திருமொழி

21 Feb

ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீமத் வர வர முநயே நம:
ஸ்ரீ பாலதந்வி மஹாகுரவே நம:

இந்த பகுதியில் நாம் அனுபவிக்கப் போகும் திவ்யதேசம் அஹோபிலம் என்று வழங்கப் பெரும் திருச்சிங்கவேள்குன்றம் ஆகும். இத்திருத்தலம் ஆந்திர மாநிலத்தில் உள்ளது. இங்கு எழுந்தருளி இருக்கும் எம்பெருமான் ஸ்ரீ ந்ருசிம்மப்பெருமான். பக்தனுக்காகத் திருவவதாரம் பண்ணிய, சர்வலோக சரண்யன் ஆவான்.

முதல் பாசுரம்:
அங்கண் ஞாலமஞ்ச அங்கோர் ஆளரியாய்* அவுணன்
பொங்க ஆகம் வள்ளுகிரால் போழ்ந்த புனிதனிடம்*
பைங்கணானைக் கொம்பு கொண்டு பத்திமையால்* அடிக்கீழ்
செங்கணால் இட்டிறைஞ்சும் சிங்கவேள்குன்றமே*

விளக்கம்:
பூமியில் உள்ள அனைவரும் நடுங்கும் படி ந்ருசிம்மப் பெருமானாய்த் தோன்றி இரணியனின் உடம்பை கூர்மையான நகங்களைக் கொண்டு இரு பிளவாகப் பிளந்த புனிதன் எழுந்தருளி இருக்கும் இடம், சிவந்த கண்களையுடைய சிங்கங்கள் யானைகளின் தந்தங்களை பெருமானுடைய திருவடிகளில் சமர்ப்பித்து வணங்கும் திவ்யதேசமான சிங்கவேள்குன்றமாகும்.

இரண்டாம் பாசுரம்:
அழைத்த பேழ்வாய் வாள் எயிற்றோர் கோளரியாய்* அவுணன்
கொலைக் கையாளன் நெஞ்சிடந்த கூருகிராளனிடம்*
மலைத்த செல் சாத்தெறிந்தபூசல் வந்துடிவாய் கடுப்ப*
சிலைக்கை வேடர் தெழிப்பெறாத சிங்கவேள்குன்றமே*

விளக்கம்:
மிகுந்த சீற்றத்தால் கடைவாயை நாக்கால் ஏற்றிக்கொண்டு பெரிய வாயாலும், ஒளி பொருந்திய பற்களையும் கொண்டு ந்ருசிம்மனாகி இரணியனைக் கொன்ற எம்பெருமான் எழுந்தருளி இருக்கும் இடம் வேடர்களின் வில் ஒலியும் பறை ஒலியும் நிறைந்திருக்கும் சிங்கவேள்குன்றம் ஆகும்.

மூன்றாம் பாசுரம்:
ஏய்ந்த பேழ்வாய் வாள் எயிற்றோர் கோளரியாய்* அவுணன்
வாய்ந்த வாகம் வள்ளுகிரால் வகிர்ந்த அம்மானதிடம்*
ஓய்ந்த மாவும் உடைந்த குன்றும் அன்றியும் நின்றழலால்*
தேய்ந்த வேயும் அல்லதில்லாச் சிங்கவேள்குன்றமே*

விளக்கம்:
பெரிய வாயையும் வாள் போன்று கூர்மையான பற்களைக் கொண்டு ந்ருசிம்மனாகி இரணியனின் மார்பை நகங்களால் கிழித்தவனான எம்பெருமான் எழுந்தருளி இருக்கும் இடம், நிறைய மிருகங்களும், உடைந்த சிறு மலைகளும், தீயில் அறை குறையாக எறிந்த நிலையில் உள்ள சிங்கவேள்குன்றமாகும்.

நான்காம் பாசுரம்:
எவ்வம் வெவ்வேல் பொன்பெயரோன் ஏதலன் இன்னுயிரை வவ்வி*
ஆகம் வள்ளுகிரால் வகிர்ந்த அம்மானதிடம்*
கவ்வும் நாயும் கழுகும் உச்சிப்போ தொடுகால் சுழன்று*
தெய்வம் அல்லால் செல்ல வொண்ணாச் சிங்கவேள்குன்றமே*

விளக்கம்:
துன்பம் தரக்கூடிய வேலைக் கையில் கொண்டவனும், பாகவதாளுக்கு விரோதியுமான இரணியனின் உயிரைப் போக்கி அவன் உடலை கூறிய நகங்களால் கிழித்த ந்ருசிம்மப் பெருமான் எழுந்தருளியிருக்கும் இடம், நாய்களும், கழுகுகளும், சூரியனின் வெப்பக் காற்றும் நிறைந்தும், தேவதைகள் தவிர மற்ற யாராலும் அணுக முடியாத இடமான சிங்கவேள்குன்றமாகும்.

ஐந்தாம் பாசுரம்:
மென்ற பேழ்வாய் வாள் எயிற்றோர் கோளரியாய்* அவுணன்
போன்ற வாகம் வள்ளுகிரால் போழ்ந்த புனிதனிடம்*
நின்ற செந்தீ மொண்டு சூறை நீள் விசும்பூடிரிய*
சென்று காண்டர்க்கரிய கோயில் சிங்கவேள்குன்றமே*

விளக்கம்:
சீற்றத்தால் வாள் போன்ற பற்களைக் கொண்டு சிங்க உருவில் தோன்றி கூறிய நகங்களைக் கொண்டு இரணியனின் மார்பை இரு பிளவாகப் பிளந்த ந்ருசிம்மப் பெருமான் எழுந்தருளி இருக்கும் இடம், சுழல் காற்றானது நெருப்பை வாரிக்கொண்டு வான் முழுவதும் பரவுவதால் யாவராலும் எளிதில் சென்று முடியாத சிங்கவேள்குன்றம் ஆகும்.

ஆறாம் பாசுரம்:
எரிந்த பைங்கண் இலங்கு பேழ்வாய் எயிற்றோடு இது எவ்வுருவென்று*
இரிந்து வானோர் கலங்கியோட இருந்த அம்மானதிடம்*
நெரிந்த வேயின் முழையுள் நின்று நீள் நெறிவாய் உழுவை*
திரிந்த ஆனைச் சுவடு பார்க்கும் சிங்கவேள்குன்றமே*

விளக்கம்:
நெருப்புப் பொறி பறக்கும் கண்களும், பெரிய வாயும், கோரப் பற்களையும் கொண்ட இந்த ந்ருசிம்மம் பார்ப்பதற்கு பயமாக இருக்கிறதே என்று தேவர்களும் திசை தெரியாமல் அஞ்சி ஓடும் இடமானது, புலிகள் யானையின் காலடியை வைத்து அது இருக்கும் இடத்தை ஆராயும் இடமான சிங்கவேள்குன்றம் ஆகும்.

ஏழாம் பாசுரம்:
முனைத்த சீற்றம் வின்சுடப்போய் மூவுலகும் பிறவும்*
அனைத்தும் அஞ்ச ஆளரியாய் இருந்த அம்மானதிடம்*
கணைத்த தீயும் கல்லுமல்லா வில்லுடை வேடருமாய்*
திணைத்தனையும் செல்ல வொண்ணாச் சிங்கவேள்குன்றமே*

விளக்கம்:
இரணியன் மீது கொண்ட சீற்றமானது மேலோங்க மேலோங்க அந்த சீற்றத்தின் காரணத்தினால் மூவுலகங்களும் அஞ்சி நடுங்கச் செய்த ந்ருசிம்மப் பெருமான் எழுந்தருளி இருக்கும் இடம் நெருப்பினால் வேகின்ற கற்களும், வில்லும் கையுமாகத திரியும் வேடர்கள் நிறைந்து காணப்படுவதால் யாராலும் சென்று கிட்ட முடியாத இடமாகிய சிங்கவேள்குன்றம் ஆகும்.

எட்டாம் பாசுரம்:
நாத்தழும்ப நான்முகனும் ஈசனுமாய் முறையால் ஏத்த*
அங்கோர் ஆளரியாய் இருந்த அம்மானதிடம்*
காய்த்த வாகை நெற்று ஒலிப்பக் கல்லதர் வேயங்கழைபோய்*
தேய்ந்த தீயால் விண்சிவக்கும் சிங்கவேள்குன்றமே*

விளக்கம்:
பிரமனும், சிவனும் நாக்கில் தழும்பு தெரிய எம்பெருமானுக்கு தோத்திரம் பண்ணிய இடம், வாகை மரத்தின் கிளைகள் சல சல என்று காற்றின் மிகுதியினால் ஓசை ஏற்படுத்திக்கொண்டும், மூங்கில்கள் வானளவு வளர்ந்ததனால் ஒன்றோடு ஒன்று உரசுவதால் உண்டான நெருப்பினால் ஆகாசம் சிவந்திருக்கப் பெற்ற சிங்கவேள்குன்றம் ஆகும்.

ஒன்பதாம் பாசுரம்:
நல்லை நெஞ்சே நாம் தொழுதும் நம்முடை நம்பெருமான்*
அல்லிமாதர் புல்கநின்ற ஆயிரந் தோளன் இடம்*
நெல்லிமல்கிக் கல்லுடைப்பப் புல்லிலையார்த்து* அதர்வாய்ச்
சில்லி சில்லென்று ஒல்லராத சிங்கவேள்குன்றமே*

விளக்கம்:
மனமே! நீ ரொம்பவும் நல்லவன்! நமக்குத் தலைவனாய் பெரிய பிராட்டியாரை அணைத்துக் கொண்டிருப்பவனும், ஆயிரம் தோள்களையும் உடையவனான எம்பெருமான் எழுந்தருளி இருக்கும் இடம், நெல்லி மரங்கள் நிறைய வளர்ந்து பாறைகளை உடைத்துக்கொண்டும், பனை ஓலைகள் ஒளி செய்து கொண்டும், சில்லிகள் இடைவிடாமல் சில் சில் என்று ஒலித்துக் கொண்டிருக்கும் சிங்கவேள்குன்றம் ஆகும்.

பத்தாம் பாசுரம்:
செங்கணால் இட்டிறைஞ்சும் சிங்கவேள்குன்றுடைய*
எங்கள் ஈசன் எம்பிரானை இருந்தமிழ் நூற்புலவன்*
மங்கையாளன் மன்னுதொல்சீர் வண்டறை தார்கலியன்*
செங்கையாளன் செஞ்சொல்மாலை வல்லவர் தீதிலரே*

விளக்கம்:
இப்படி சிங்க உருவில் எழுந்தருளி இருக்கும் சிங்கவேள்குன்ற எம்பெருமானை திருமங்கை ஆழ்வாரின் இந்த பத்துப் பாசுரங்களைக் கொண்டு எம்பெருமானை பாடி வணங்கினோம் ஆனால் தீங்கின்றி வாழ்வோம் என்று மங்களாசாசனம் பண்ணுவதாக அமைந்த திவ்யப்ப்ரபாந்தமாகும்.

உரைகளில் குறை இருந்தால் அடியேனைத் திருத்திப் பணிகொள்ளுமாறு பிரார்த்திக்கிறேன்.

Advertisements
 
 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

 
%d bloggers like this: