RSS

பெரிய திருமொழி ஒண்ணாம் பத்து ஒன்பதாம் திருமொழி பாசுர விளக்கம்:

21 Feb

ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீமத் வர வர முநயே நம:
ஸ்ரீ பாலதந்வி மஹா குரவே நம:

முதல் பாசுரம்:

தாயே தந்தை என்றும்* தாரமே கிளை மக்கள் என்றும்*
நோயே பட்டொழிந்தேன்* உன்னைக் காண்பதோர் ஆசையினால்*
வேயேய் பூம்பொழில்சூழ்* விரையார் திருவேங்கடவா*
நாயேன் வந்தடைந்தேன்* நல்கி ஆளென்னைக் கொண்டருளே*

பாசுர விளக்கம்:

மூங்கில் புதர்களும், நறுமணம் வீசும் பூஞ் சோலைகளும் நிறைந்த திருமலையில் எழுந்தருளி இருக்கும் எம்பெருமானே சரீர சம்பந்தத்தால் ஏற்பட்ட உறவினர்களான தாய், தந்தை, மனைவி மற்றும் மக்கள், இவர்களையே வாய் வெருவிக்கொண்டு இருந்து விட்டேன் நீச்சனான அடியேன். இப்போது நீயே நிலையான உறவினன் என்பதை தெரிந்து கொண்டு உன்னிடம் சரணமடைகிறேன், உன்னுடைய கருணையினால் அடியேனை ஏற்றுக்கொள்ள வேணும் என்று பிரார்த்திக்கிறார் இப்பாசுரத்தில்.

இரண்டாம் பாசுரம்:

மானேய் கண் மடவார்* மயக்கில் பட்டு மாநிலத்து*
நானே நானாவித* நரகம் புகும் பாவம் செய்தேன்*
தேனேய் பூம்பொழில்சூழ்* திருவேங்கட மாமலை* என்
ஆனாய்! வந்தடைந்தேன்* அடியேனை ஆட்கொண்டருளே *

பாசுர விளக்கம்:

வண்டுகள் வாழும் தேன் நிறைந்த பூஞ்சோலைகள் நிறைந்து காணப்படும் திருவேங்கட மலையில் எழுந்தருளி இருக்கும் எம்பெருமானே, இத்தனை நாட்கள் கண்ணழகு படைத்த மாதர்களிடம் அகப்பட்டு நரக வாசம் அனுபவிக்கும் அளவுக்கு பல பாபங்களை செய்த்துள்ளேன். அதை நினைத்து வருந்தி தேவரீரை சரணடைகிறேன். அடியேனை ஆட்கொள்ளவேனும் என்று மங்களாசாசனம் பண்ணுகிறார் இப்பாசுரத்தில்.

மூன்றாம் பாசுரம்:

கொன்றேன் பல்லுயிரை* குறிக்கோள் ஒன்றிலாமையால்*
என்றேனும் இறந்தார்க்கு* இனிதாக உறைத்தறியேன்*
குன்றேய் மேகமதிர்* குளிர் மாமலை வேங்கடவா*
அன்றே வந்தடைந்தேன்* அடியேனை ஆட்கொண்டருளே*

பாசுர விளக்கம்:

மேகக் கூட்டங்களின் மிகுதியால் குளிர்ந்து இருக்கும் திருவேங்கட மலையில் எழுந்தருளி இருக்கும் எம்பெருமானே, அடியேன் குறிக்கோள் ஒன்று இல்லாமல் பல உயிர்களைக் கொன்று உள்ளேன். யாசகர்களுக்கு இனிதாக இனிமையாக வார்த்தை கூறியதும் இல்லை. இப்படி குற்றத்தை செய்து இருந்தாலும் அக்குற்றத்தோடே உன்னிடம் சரணடைகிறேன், ஆட்கொள்ளவேனும் என்று பிரார்த்திக்கிறார்.

நான்காம் பாசுரம்:

குலந்தான் எத்தனையும்* பிறந்தே இறந்து எய்த்தொழிந்தேன்*
நலந்தான் ஒன்றுமிலேன்* நல்லதோர் அறம் செய்துமிலேன்*
நிலம் தோய் நீள்முகில் சேர்* நெறியார் திருவேங்கடவா*
அலந்தேன் வந்தடைந்தேன்* அடியேனை ஆட்கொண்டருளே*

பாசுர விளக்கம்:

பெரிய மேகங்கள் படிந்து காணப்படும் திருவேங்கட மலையில் எழுந்தருளி இருக்கும் எம்பெருமானே, பல குளங்களில் பிறந்து இறந்து இளைத்தவனும், நல்ல செயல் எதையும் செய்யாதவனும், பல குற்றங்களுக்கு ஆளானவனுமான அடியேன் தேவரீரை சரணடைகிறேன், ஆட்கொள்ளவேனும் என்று பிரார்த்திக்கிறார் ஆழ்வார்.

ஐந்தாம் பாசுரம்:

எப்பாவம் பலவும்* இவையே செய்து இளைத்தொழிந்தேன்*
துப்பா! நின்னடியே* தொடர்ந்தேத்தவும் கிற்கின்றிலேன்*
செப்பார் திண்வரை சூழ்* திருவேங்கட மாமலை* என்
அப்பா வந்தடைந்தேன்* அடியேனை ஆட்கொண்டருளே*

பாசுர விளக்கம்:

செப்பைப் போன்ற பல மலைகளை அரணாகக் கொண்ட திருமலையில் எழுந்தருளி இருக்கும் எம்பெருமானே, பல பாபங்களைச் செய்து துன்புருவதனால் உன் திருவடிகளைப் பற்றுவதற்கும் சக்தி இல்லாதவனாக இருந்தும் உன்னை நாடி சரணடைய வந்திருக்கேன், அடியேனை ஆட்கொள்ளவேனும் என்று மங்களாசாசனம் பண்ணுகிறார்.

ஆறாம் பாசுரம்:

மண்ணாய் நீர் எரிகால்* மஞ்சுலாவும் ஆகாசுமாம்*
புண்ணார் ஆக்கை தன்னுள்* புலம்பித் தளர்ந்து எய்த்தொழிந்தேன்*
விண்ணார் நீள் சிகர* விரையார் திருவேங்கடவா*
அண்ணா! வந்தடைந்தேன்^ அடியேனை ஆட்கொண்டருளே*

பாசுர விளக்கம்:

வானளவு உயர்ந்த சிகரங்களைக் கொண்ட திருவேங்கடமலையில் எழுந்தருளி இருக்கும் எம்பெருமானே, பஞ்ச பூதங்களால் ஆன சரீரத்தில் அகப்பட்டு பல கஷ்டங்களை அனுபவித்த அடியேன் உன்னைச் சரணடைந்தேன், ஆட்கொள்ளவேனும் என்று பிரார்த்திக்கிறார்.

ஏழாம் பாசுரம்:

தெரியேன் பாலகனாய்* பல தீமைகள் செய்துமிட்டேன்*
பெரியேன் ஆயின பின்* பிறர்க்கே உழைத்து ஏழை ஆனேன்*
கரி சேர் பூம்பொழில் சூழ்* கனமாமலை வேங்கடவா*
அரியே! வந்தடைந்தேன்* அடியேனை ஆட்கொண்டருளே*

பாசுர விளக்கம்:

யானைகள் நிறைந்த பூஞ்சோலைகளால் சூழப்பட்ட திருவேங்கட மலையில் எழுந்தருளி இருப்பவனே, அறிவில்லாதவனான அடியேன் பல பாபங்களை செய்தேன், யொவ்வன பருவத்தில் மாதர்கள் மீது அன்பு கொண்டு கேட்டேன். அதை நினைத்து வருந்தி இப்போது உன் திருவடிகளை சரணடைகிறேன், ஹரியே என்னை ஆட்கொள்ளவேனும் என்று பிரார்த்திக்கிறார்.

எட்டாம் பாசுரம்:

நோற்றேன் பல் பிறவி* நுண்ணைக் காண்பதோர் ஆசையினால்*
ஏற்றேன் இப்பிறப்பே* இடர் உற்றனன் எம்பெருமான்*
கோல்தேன் பாய்ந்தொழுகும்* குளிர் சோலை சூழ் வேங்கடவா*
ஆற்றேன் வந்தடைந்தேன்* அடியேனை ஆட்கொண்டருளே*

பாசுர விளக்கம்:

கோல்தேன் பாய்ந்து ஒழுகும் அழகிய சோலைகளை உடைய திருவேங்கட மலையில் எழுந்தருளி இருப்பவனே, பல பிறப்புகள் ஏற்படுவதற்கு ஏற்ப பல பாபங்களைச் செய்தேன். இந்த பிறப்பில் தவறை உணர்ந்து உன்னைச் சரணடைகிறேன், இனிப் பிறப்புகள் ஏற்படாதவாறு அருள் புரிய வேணும் என்று பிரார்த்திக்கிறார்.

ஒன்பதாம் பாசுரம்:

பற்றேல் ஒன்று மிலேன்* பாவமே செய்து பாவி ஆனேன்*
மற்றேல் ஒன்றறியேன்* மாயனே! எங்கள் மாதவனே*
கல்தேன் பாய்ந்தொழுகும்* கமலச் சுனை வேங்கடவா*
அற்றேன் வந்தடைந்தேன்* அடியேனை ஆட்கொண்டருளே*

பாசுர விளக்கம்:

கல்தேன் பாய்ந்தொழுகும் திருவேங்கட மலையில் எழுந்தருளி இருப்பவனே, ஆச்சர்யமான குணங்களை உடையவனான எம்பெருமானே, எந்த ஆதாரமும் இல்லாமல் பல பாபங்களைச் செய்து பாவியானேன், வேறு பற்று இல்லாமல் உன்னைச் சரணடைகிறேன், அடியேனுக்கு அருள் புரிய வேணும் என்று பிரார்த்திக்கிறார்.

பத்தாம் பாசுரம்:

கண்ணாய் எழுலகுக்கு* உயிராய எங்கார் வண்ணனை*
விண்ணோர் தாம் பரவும்* பொழில் வேங்கட வேதியனை*
திண்ணார் மாடங்கள் சூழ்* திருமங்கையர் கோன் கலியன்*
பண்ணார் பாடல் பத்தும்* பயில்வார்க்கு இல்லை பாவங்களே*

பாசுர விளக்கம்:

எல்லா உலகங்களுக்கும் கண் போன்றவனும், உயிர் போன்றவனும், மேகங்கள் போன்ற கருத்த திருமேனி உடையவனும், நித்யசூரிகளால் வணங்கப் படுபவனும், வேதங்களால் அறியப் படுபவனுமான திருவேங்கட எம்பெருமானை திருமங்கை ஆழ்வார் அருளிச் செய்த இப்பத்து பாசுரங்களைக் கொண்டு ஆராதிப்பவர்கள் பாபங்களில் இருந்து நீங்கப் பெறுவார்களாம்.

உரைகளில் குறை இருந்தால் அடியேனைத் திருத்திப் பணிகொள்ள பிரார்த்திக்கிறேன். அடியேன் ராமானுஜ தாசன்

Advertisements
 
 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

 
%d bloggers like this: