RSS

பெரிய திருமொழி ஒண்ணாம் பத்து ஐந்தாம் திருமொழி அடுத்த ஆறு பாசுரங்கள்

21 Feb

ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீமத் வர வர முநயே நம:
ஸ்ரீ பாலதந்வி குரவே நம:

ஐந்தாம் பாசுரம்:

அடுத்தார்த் தெழுந்தாள் பிலவாய் விட்டு அலற
அவள் மூக்கு ஆயில் வாளால் விடுத்தான்*
விளங்கு சுடராழி
விண்ணோர் பெருமான் நண்ணார் முன்*
கடுத்தார்த் தெழுந்த பெருமழையைக்
கல் ஒன்று ஏந்தி இனநிரை காத்தடுத்தான்*
தடம் சூழ்ந்து அழகாய
சாளக்ராமம் அடை நெஞ்சே*

விளக்கம்:

கூர்மையான வாளால் சூர்பனகையின் மூக்கை அறுத்து வாய் விட்டு அலரும் படி செய்தவனும், திருவாழி ஆழ்வானைக் கையில் ஏந்தியவனும், நித்ய சூரிகளுக்குத் தலைவனும், பெருமழையைக் கையில் கோவர்த்தன மலையை ஏந்தித் தடுத்து பசுக்களை ரக்ஷித்தவனான எம்பெருமான் வாழும் இடமான சாளக்ராமத்தை மனமே நீ சென்றடைவாயாக என்று சொல்லும் படி அமைந்த பாசுரமாகும்.

ஆறாம் பாசுரம்:

தாயாய் வந்த பேருயிரும்
தயிரும் விழுதும் உடனுண்ட வாயான்*
தூய அரியுருவிர்
குறள் ஆய்ச் சென்று மாவலியை ஏயான் இறப்ப*
மூவடி மண்
இன்றே தாவென்று உலகேழும் தாயான்*
காயா மலர் வண்ணன்
சாளக்ராமம் அடை நெஞ்சே*

விளக்கம்:

தாயைப்போன்று வந்த பூதனையின் உயிர், தயிர் மற்றும் வெண்ணை ஆகியவற்றை அமுது செய்தவனும், குள்ள வடிவ வாமனனாகி மஹாபலியிடம் மூன்று அடி மண் கொடு என்று யாசித்தவனும், மஹாபலி நீர் வார்த்தவுடன், திரிவிக்ரம வடிவமாய் ஓங்கி உலகை அளந்தவனுமாகிய எம்பெருமான் எழுந்தருளி இருக்கும் இடமான சாளக்ராமத்தை மனமே நீ சென்றடைவாயாக என்று மங்களாசாசனம் பண்ணுகிறார்.

ஏழாம் பாசுரம்:

ஏனார் அஞ்ச வெஞ்சமத்துள்
அறியாய்ப் பரிய இரணியனை*
ஊனார் அகலம் பிளவெடுத்த
ஒருவன் தானே இருசுடராய்*
வானாய்த் தீயாய் மாருதமாய்
மலையாய் அலை நீர் உலகனைத்தும் தானாய்*
தானும் ஆனான் தன்
சாளக்ராமம் அடை நெஞ்சே*

விளக்கம்:

அசுரர்கள் அஞ்சுவதற்கு இணங்க ந்ருசிம்ம வடிவம் கொண்டு இரணியனின் மார்பை பிளந்தவனும், சந்திர சூர்யர்களாகவும், ஆகாசமாகவும், நெருப்பாகவும், காற்றாகவும், மலைகளாகவும், எல்லா உலகங்களாகவும் இருப்பவனும், ஈடு இணையற்ற ஒப்பற்ற திருமேனி உடையவனான எம்பெருமான் வசிக்கும் இடமாகிய சாளக்ராமத்தை நெஞ்சே நீ சென்றடை என்று மங்களாசாசனம் பண்ணுகிறார்.

எட்டாம் பாசுரம்:

வெந்தார் என்பும் சுடு நீரும்
மெய்யில் பூசிக் கையகத்து* ஓர்
சந்தார் தலைக்கொண்டு உலகேழும்
திரியும் பெரியோன் தான் சென்று* என்
எந்தாய்! சாபம் தீர் என்ன
இலங்கமுது நீர் திருமார்பில் தந்தான்*
சந்தார் பொழில் சூழ்ந்த
சாளக்ராமம் அடை நெஞ்சே*

விளக்கம்:

மனித உடலின் எலும்புகளையும், சாம்பலையும் அணிந்து கையில் மண்டை ஓட்டை ஏந்தி உலகம் முழுவதும் திரிந்து, கடைசியில் பகவானிடம் சென்று, எந்தையே என் சாபத்தை நீக்கி அருள வேணும் என்று பிரார்த்திக்க, பகவானும் தன் திருமார்பிலிருந்து அமுத நீரைப் பரமசிவனின் கபாலத்தில் படச்செய்து சாபத்தை நீக்கியவனான எம்பெருமான் எழுந்தருளி இருக்கும் இடம் சந்தனமரச் சோலைகள் சூழ்ந்த சாளக்ராமத்தை மனமே நீ சென்றடை என்று மங்களாசாசனம் பண்ணுகிறார்.

ஒன்பதாம் பாசுரம்:

தொண்டாம் இனமும் இமையோரும்
துணை நூல் மார்பின் அந்தணரும்*
அண்டா எமக்கே அருளாய் என்று
அணையும் கோயில் அருகெல்லாம்*
வண்டார் பொழிலின் பழனத்து
வயலின் அயலே கயல் பாய*
தண் தாமரைகள் முகமலர்த்தும்
சாளக்ராமம் அடை நெஞ்சே*

விளக்கம்:

பாகவத உத்தமர்களும், நித்யசூரிகளும், மார்பில் பூணூல் தரித்த அந்தணர்களும், எங்களுக்கு அருள் புரிய வேணும் என்று பிரார்த்தித்துக்கொண்டு நிற்கும் கோயிலானது, வண்டுகள், சோலைகள் மற்றும் தாமரை சூழ்ந்து இருக்கும் சாளக்ராமம் ஆகும், ஆகவே மனமே சாளக்ராமத்தை நீ சென்றடை என்று மங்களாசாசனம் பண்ணுகிறார்.

பத்தாம் பாசுரம்:

தாராவாரும் வயல் சூழ்ந்த
சாளக்ராமத்தடிகளை*
காரார் புறவின் மங்கை வேந்தன்
கலியன் ஒலி செய் தமிழ்மாலை*
ஆரார் உலகத்து அறிவுடையார்
அமரர் நன்னாட்டு அரசாள*
பேராயிரமும் ஒதுமின்கள்
அன்றி இவையே பிதற்றுமினே*

விளக்கம்:

இவ்வுலகில் உள்ளோர் ஸ்ரீ வைகுந்தம் செல்ல வேண்டுமெனில் பகவானின் ஆயிர நாமங்களைச் சொல்லுங்கள் அல்லது திருமங்கை ஆழ்வார் அருளிச்செய்த சாளக்ராம திவ்யதேச பாசுரங்களை அனுசந்தித்துக் கொண்டு இருங்கள் என்று உபதேசிக்கிறார்.

உரைகளில் குறை இருந்தால் அடியேனைத் திருத்திப் பணிகொள்ளப் பிரார்த்திக்கிறேன்.

அடியேன் ராமானுஜ தாசன்

Advertisements
 
 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

 
%d bloggers like this: