RSS

பெரிய திருமொழி ஒண்ணாம் பத்து ஆறாம் திருமொழி அடுத்த ஐந்து பாசுரங்கள்:

21 Feb

ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீமத் வர வர முநயே நம:
ஸ்ரீ பாலதந்வி குரவே நம:

ஆறாம் பாசுரம்:

கோடிய மனத்தால் சினத்தொழில் புரிந்து
திரிந்து நாயினத்தொடுந திளைத்திட்டு*
ஓடியும் உழன்றும் உயிர்களே கொன்றேன்
உணர்விலேன் அதனால்* நமனார்
பாடியைப் பெரிதும் பரிசழித்திட்டேன்
பரமனே! பாற்கடல் கிடந்தாய்*
நாடி நான் வந்துன் திருவடி அடைந்தேன்
நைமிசாரணியத்துள் எந்தாய் *

விளக்கம்:

கோணல் மனம் கொண்டும், பிறர்க்கு விரோதமான செயல்களைச் செய்து கொண்டும், நாய்களோடு சென்று வேட்டை ஆடியும் பொழுதைக் கழித்து, கழித்தோம் என்கிற உணர்வு ஒன்றும் இல்லாமல் இருந்த அடியேன், பரமனே பாற்கடலில் பள்ளி கொண்டிருப்பவனே, நைமிசாரநியத்து எம்பெருமானே, உன் திருவடியை அடைந்த பின்பு நரக நிலையை அழித்துவிட்டேன் என்று மங்களாசாசனம் பண்ணுகிறார்.

ஏழாம் பாசுரம்:

நெஞ்சினால் நினைந்தும் வாயினால் மொழிந்தும்
நீதியல்லாதன செய்தும்*
துஞ்சினார் செல்லும் தொல்நெறி கேட்டே
துளங்கினேன் விளங்கனி முனிந்தாய்*
வஞ்சனேன் அடியேன் நெஞ்சினிற் பிரியா
வானவா தானவர்க் கென்றும்
நஞ்சனே* வந்துன் திருவடி அடைந்தேன்
நைமிசாரணியத்துள் எந்தாய்*

விளக்கம்:

அசுரனை அழித்தவனே! வஞ்சனை நிறைந்த என் நெஞ்சில் நின்றவனே! அசுரர்களுக்கு நஞ்சாக இருப்பவனே! நைமிசாரநியத்து எம்பெருமானே! அநீதியான செயல்களை நெஞ்சினால் நினைந்தும் வாயினால் மொழிந்தும், செய்கையால் செய்தவர்கள் இறந்து போன பின்பு அடையும் நரகத்தைப் பற்றி பெரியோர்கள் சொல்லக் கேட்டு நடுங்கி உன் திருவடிகளை வந்து அடைந்தேன் என்று மங்களாசாசனம் பண்ணுகிறார்.

எட்டாம் பாசுரம்:

ஏவினார் கலியார் நலிக வென்று என் மேல்
எங்கனே வாழுமாறு?* ஐவர்
கோவினார் செய்யும் கொடுமையை மடித்தேன்
குறுங்குடி நெடுங்கடல் வண்ணா!
பாவினார் இன்சொல் பன்மலர் கொண்டு
உன் பாதமே பரவி நான் பணிந்து* என்
நாவினால் வந்துன் திருவடி அடைந்தேன்
நைமிசாரணியத்துள் எந்தாய்*

விளக்கம்:

நைமிசாரணியத்து எம்பெருமானே! குறுங்குடி நெடுங்கடல் வண்ணனே! கலி புருஷனோ என்னை துன்புறுத்த நினைத்து அவனுடைய ஆட்களான ஐம்புலன்களை என் மீது ஏவினான். ஆனால் அடியேனோ என் நாவினால் உன் திருவடியைத் துதி செய்து அதை அப்புறப்படுத்தி விட்டேன், அவனால் இனி என்ன செய்ய முடியும் என்று மங்களாசாசனம் பண்ணுகிறார்.

ஒன்பதாம் பாசுரம்:

ஊனிடைச் சுவர்வைத்து ஒன்பதூன் நாட்டி
உரோமம் வேய்ந்த ஒன்பது வாசல்*
தானுடைக் குரம்பைப் பிரியும் பொது உன் தன்
சரணமே சரணம் என்றிருந்தேன்*
தேனுடைக் கமலத் திருவினுக்கரசே!
திரைகொள் மாநெடுங்கடல் கிடந்தாய்*
நானுடைத் தவத்தால் திருவடி அடைந்தேன்
நைமிசாரணியத்துள் எந்தாய்*

விளக்கம்:

தேன் நிறைந்த கமலத்தில் தோன்றிய பெரிய பிராட்டியாரின் நாயகனே, அலைகள் நிறைந்த பாற்கடலில் பள்ளி கொண்டிருப்பவனே, நைமிசாரணியத்து எம்பெருமானே, மாமிசத்தை சுவராக வைத்தும், எலும்புகளைக் கம்பங்களாக நாட்டும், மயிர்களால் மூடியும், ஒன்பது வாசல்களைக் கொண்டும் காணப்படுகிற இந்தச் சரீரத்தை விட்டுப் பிரியும் காலத்தில் உன்னுடைய திருவடிகளே அடியேனுக்கு காப்பாக இருக்க வேணும் என்று நினைத்து இருந்தேன், உன்னுடைய திருவருளால் என் தவமாகிய உன் திருவடியை வந்தடைந்தேன் என்று மங்களாசாசனம் பண்ணுகிறார்.

பத்தாம் பாசுரம்:

ஏதம் வந்தணுகா வண்ணம் நாம் எண்ணி
எழுமினோ தொழுதுமென்று* இமையோர்
நாதன் வந்திறைஞ்சும் நைமிசாரணியத்
தெந்தையைச் சிந்தையுள் வைத்து*
காதலே மிகுத்த கலியன் வாயொலி செய்
மாலைதாம் கற்று வல்லார்கள்*
ஓத நீர் வையகம் ஆண்டு வெண்குடைக்கீழ்
உம்பரும் ஆகுவர் தாமே*

விளக்கம்:

துன்பங்கள் வராமல் இருக்க நைமிசாரணியத்து எம்பெருமானைத் தொழுவோம். மேலும் இமையோர் தலைவனான இந்திரன் தேவர்களுடன் வந்து இறைஞ்சும் நைமிசாரணியத்து எம்பெருமானை மனத்தினால் த்யானித்து திருமங்கை ஆழ்வாரின் இப்பத்து பாசுரங்களைக் கொண்டு அனுபவித்தோமானால் இப்பூமண்டலத்தை ஆண்ட பிறகு நித்யசூரிகளோடே சேர்வார்களாம்.

உரைகளில் குறை இருந்தால் அடியேனைத் திருத்திப் பணிகொள்ள பிரார்த்திகிறேன்.

Advertisements
 
 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

 
%d bloggers like this: