திருநெடுந்தாண்டகம் – இரண்டாம் பாசுர அர்த்தம்:
ஸ்ரீ:
ஸ்ரீமதே இராமானுஜாய நம:
ஸ்ரீமத் வரவர முநயே நம:
ஸ்ரீ பாலதந்வி குரவே நம:
இரண்டாம் பாசுரம்:
பாருருவில் நீர் எரிகால் விசும்புமாகி*
பல் வேறு சமயுமமாய்ப் பறந்து நின்ற*
ஏருருவில் மூவருமே என நின்ற*
இமையவர் தம் திருவுருவேறேண்ணும் பொது*
ஓருருவம் பொன்னுருவம் ஒன்று செந்தீ*
ஒன்று மாகடல் உருவம் ஒத்து நின்ற*
மூவுருவம் கண்ட போது ஒன்றாம் சோதி*
முகில் உருவம் எம் அடிகள் உருவந்தானே*
பாசுர அர்த்தம்:
இந்த பாசுரத்திலே அரி அயன் அரன் என்கிற திருமூர்த்திகளும் சமம் என்று சொல்லப்படுகிற அனர்த்தத்தை தமக்கு போக்கி அருளியபடியை ஆழ்வார் தெரிவிக்கிறார். அதாவது இருவர் சரீரபூதராய் ஒருவன் சரீரியாய் இருக்கும் தன்மையை தமக்கு எடுத்துக்க் காட்டி அருளியபடியை இந்தப் பாசுரத்திலே மங்களாசாசனம் பண்ணுகிறார் ஆழ்வார். எத்தனையோ இந்த்ராதி தேவர்கள் இருந்தாலும் விஷ்ணு, நான்முகனான ப்ரஹ்மா மற்றும் சிவன் என்கிற மும்மூர்த்திகளே முக்கியமாக கொள்ளப்பட்டார்கள். நான்முகனின் வடிவம் பொன்னின் வடிவமாயும், பரமசிவனுடைய உருவம் சிவந்த நெருப்பைப் போன்றும், பரந்தாமனான ஸ்ரீமன் நாராயணின் திருவுருவம் கருங்கடலைப் போன்றும் உள்ளது. இதை நாம் சாத்திரம் கொண்டு ஆராயும்போது, பஞ்சபூதங்களை உண்டாக்கியும், ஜகத்தை ஸ்ருஷ்டித்தும், சிருஷ்டிக்கப்பட்ட சகத்திலே வ்யாபகனாய் நிற்கிற எம்பெருமானுடைய உருவம் காளமேக உருவாய் இருக்கும் என்று பிராமணங்கள் தெரிவிப்பதால் முகில் உருவம் உடையவனே எம்பெருமான் என்று தெரியவரும்.
பாருருவி நீரெரிகால் விசும்புமாகி பல்வேறு சமயமுமாய் என்றது சமஷ்டி சிருஷ்டியையும், வ்யஷ்டி சிருஷ்டியையும் குறிக்கும். அதாவது பலவகைப் பட்ட பாகுபாடுகளைக் கொண்ட ஜகத்தை உண்டாக்கியதை தெரிவிக்கிறது. உலகில் உள்ள பொருட்களுக்கெல்லாம் ஒரு ஏற்பாடு உண்டு. தேவதைகள் ஆராதிக்க உரியவராயும் அமுதம் உண்பவராயும், மனிதர்கள் ஆராதிப்பவர்களாயும் அன்னம் உண்பவர்களாயும், த்ரியக் தாவரங்கள் ஆராதனைக்குக் கருவியாயும் ஏற்பாடு ஆகும். சூக்ஷ்ம சேதன அசேதன விஷிஷ்டனாகிற படியை பறந்து நின்ற என்ற பதம் தெரிவிக்கும். அதாவது சிருஷ்டிக்கப் பட்ட சகல பதார்த்தங்களிலும் வியாபித்து இருக்கும் தன்மை(ஆத்மாவாய்).
சிருஷ்டி, ரக்ஷணம், சம்ஹாரம் என்பன மூன்று தொழில்கள். இந்த மூன்று எம்பெருமான் ஒருவனே நிர்வஹித்தாலும், பிரமனைக் கொண்டு சிருஷ்டியையும், உருத்திரனைக் கொண்டு சம்ஹாரத்தையும், தானே ரக்ஷணத்தையும் பண்ணுகிறான் என்பதை அறியாமையாலே சில சாமான்ய ஞானிகள் மூவரும் ஸ்வதந்திர நிர்வாகிகளாகக் கொள்வர்.
பொன் ஆனது அனைத்துவிதமான ஆபரணங்களையும் பண்ணுவதற்கு உரியதாய் இருப்பது போன்று, பதினான்கு லோகங்களையும் படைப்பதற்கு உரியதாய் அமைந்த உருவம் நான்முகனுடையது ஆகும். சம்ஹரிப்பதர்க்கு உரித்தாய் இருக்கும் உருத்திரனின் உருவம். எம்பெருமானுடைய ச்வபாவமோ தன்னிடம் ஆச்ரயித்தவர்களை தன அபிமானத்தாலே ரட்சிக்கும் தன்மையாய் இருக்கும்.
அதாவது சிருஷ்டிக்கு பொருத்தமாய் இருக்கும் பொன் உருவம், சம்ஹாரத்திக்கு பொருத்தமுடையதாய் இருக்கும் செந்தீ உருவம், ரக்ஷணம் பண்ணுவதற்கு பொருத்தமாய் இருக்கும் மாகடல் உருவம். மேலே சொல்லப்பட்ட மூவுருவையும் பிரமாணங்களைக் கொண்டு ஆராய்ந்து பார்த்தால் “பாருருவி நீரெரிகால் விசும்புமாகிப் பல்வேறு சமயமுமாய் பரந்துநின்ற ஒன்றே ஆம் சோதி ஆகும்.
அடியேனின் சிற்றறிவுக்கு எட்டின அளவிலே எம்பெருமான் சங்கல்பத்தாலும் ஆசார்ய கடாக்ஷத்தாலும் இந்தப் பதிப்பை அடியேனால் பதிவு செய்ய முடிந்தது.
குறை இருக்குமாயின் அடியேனைத் திருத்திப் பணிகொள்ள பிரார்த்திக்கிறேன்.
தாசானு தாசன்
இராமானுஜ சிஷ்யன்
திருநெடுந்தாண்டகம் – முதல் பாசுரம்:
ஸ்ரீ:
ஸ்ரீமதே இராமானுஜாய நம:
ஸ்ரீமத் வரவர முநயே நம:
ஸ்ரீ பாலதந்வி குரவே நம:
மின்னுருவாய் முன்னுருவில் வேதம் நான்காய்*
விளக்கொளியாய் முளைத்தெழுந்த திங்கள் தானாய்*
பின்னுருவாய் முன்னுருவில் பிணி மூப்பு இல்லாப்*
பிறப்பிலியாய் இறப்பதற்கே எண்ணாது* எண்ணும்
பொன்னுருவாய் மணி உருவில் பூதம் ஐந்தாய்ப்*
புனல் உருவாய் அனல் உருவில் திகழும் சோதி*
தன்னுருவாய் என்னுருவில் நின்ற எந்தை*
தளிர் புரையும் திருவடி என் தலை மேலவே*
முதல் பாசுர அர்த்தம்:
நம் கண்ணின் முன்னே தோன்றும் பொருள்களெல்லாம் நிலை நிற்காதவை என்பதை, “மின்னுருவாய் முன்னுருவில் வேத நான்காய்” என்கிற பாசுர வரிகளிலே தெரிவிக்கிறார். அதாவது ஆத்மாவிற் காட்டிலும் வேறுபட்ட அசேதனப் பொருள்களில் க்ஷனிகத்வ புத்தியைப் பிரப்பித்து – ஆத்ம வஸ்துவின் தன்மையை நன்கு அறிந்து கொள்வதற்கு சாத்திரத்தைக் கொடுத்தவன் எம்பெருமான். வேத நான்காய் என்றது நான்கு வேதங்களையும் உபகரித்து அருளினவன் என்பதை சொல்கிறது.
விளக்கு எப்படி தன்னுடைய பிரகாசத்தின் மூலம் இருளைப் போக்கி பொருட்களை அறிந்துகொள்ள உதவி புரிகிறதோ, அதே போலே எம்பெருமான் தானும் சாஸ்திர ஞானத்தை நமக்கு கொடுத்தருளி நம்முடைய அக இருளைப் போக்கி ஸ்வரூபத்தை நன்கு பிரகாசிப்பிக்கச் செய்கிறானாம் என்பதை விளக்கொளியாய் என்றே இடத்தே தெரிவிக்கிறார் ஆழ்வார். அதாவது எம்பெருமானுடைய அருள் இல்லையாகில் உண்மையான சாஸ்திர ஞானம் ஏற்படுவதற்கு வழியில்லை என்பதை நன்கு உணர்த்துகிறார்.
மலை நுனியிலே தோன்றி ஆகாயத்திலே காணப்படுகிற சந்திரனைப் போலே சந்தோஷகரமான ஞானத்தைக் கொடுத்தவன் எம்பெருமான் என்பதை “முளைத்தெழுந்த திங்கள் தானாய்” என்று ஆழ்வார் தானும் மங்களாசாசனம் பண்ணுகிறார்.
மேலே பாசுர இரண்டாம் வரியிலே இரண்டு வார்த்தைகளாலும் ஒரே அர்த்தமே தெரிவிக்கப் பட்டாலும் விளக்கொளியாய் என்றதனால் ஸ்ராவண ஞானத்தையும்(காதால் கேட்டு உணரும் ஞானம்), முளைத்தெழுந்த திங்கள் தானாய் என்றதனால் மற்ற ஞானங்களையும் தெரிவிக்கிறார் ஆழ்வார்(மனனம் செய்வது, உபாசனம் செய்து உணர்வது மற்றும் நம் கண்களால் கண்டு உணர்வது).
பாசுர மூன்றாம் வரியானது ஜீவாத்மாவுக்கு நியாமகன் எம்பெருமான் என்பதை தெரிவிக்கிறது. ப்ராக்ருத பதார்த்தங்களை முன்னுறு என்று காட்டி அந்தப் பொருள்களுக்கு இருப்பதான பிணி, மூப்பு மற்றும் பிறப்பு ஆகியவை இருபத்து ஐந்தாம் தத்வமான ஜீவாத்மாவை ஸ்பர்சிக்க மாட்டா, ஆகையாலே “முன்னுருவில் பிணிமூப்பில்லாப் பிறப்பிலி” என்றும், ஆய் என்பதாலே ஜீவாத்மாவை நியமிப்பவன் எம்பெருமான் என்பதை தெரிவிக்கிறார். இறப்பதற்கே என்னாது என்பதாலே ச்வரூபானுபந்தியான மரணமான கைவல்ய மோக்ஷத்தை எம்பெருமான் தன்னுடைய அந்தரங்கமான அடியார்களுக்குக் கொடுக்க தம் நெஞ்சாலும் நினைக்காதவன் என்கிறார்.
மேலும் எம்பெருமான் தன்னுடைய ஸ்வரூப ரூப குணங்களை பிரகாசிப்பித்து அருளி உபகரித்த மகா உபகாரம் செய்து அருளினார் என்பதை என்னும் பொன்னுருவாய் என்கிறார்.
அதாவது போக்யதையின் மிகுதியாலே பொன் போல் விரும்பத்தக்கதான திவ்ய ஸ்வரூபத்தை உடையவன் எம்பெருமான் என்கிறார். பாஞ்சராத்ர சாஸ்திரம் கூறியவாரே எம்பெருமானுடைய திருமேனிக்கு பஞ்ச உபநிஷத்துக்கள் உபாதானமாய் இருக்கும் என்பதை மணியுருவில் பூதமைந்தாய் என்று காட்டுகிறார் ஆழ்வார்.
புனலுருவாய் என்றது எம்பெருமானுடைய சொவ்லாப்யத்தைக் காட்டுகிறது. இப்படி எம்பெருமான் எளியனாய் இருக்கிறபடியால் எந்த பொழுதில் என்ன கேடு வருமோ என்று நினையாது இருக்கிறபடி பிரதிகூலருக்கு அக்னியை போலே கிட்டாதவனாய் இருக்கும் தன்மையை அனலுருவில் திகழும் என்கிறார். ஆக அனுகூலர்களுக்கு புனலுருவாய் இருப்பவன், பிரதிகூலர்களுக்கு அனலுருவாய் இருக்கும் தன்மையை காட்டுகிறார்.
இந்த உலகத்திலே சோதிப் பொருள் என்று விளங்குகின்ற அக்னி, சந்திரன் மற்றும் சூரியன் முதலியவர்கட்கும் எம்பெருமான் தன்னுடைய சம்பந்தத்தாலே ஜ்யோதிஸ் உண்டாகும்படி பரந்ஜோதியாய்இருக்கும் தன்மையை சோதி தன்னுருவாய்(ஸ்வயம் ஜ்யோதிஸ்வரூபனாய்) என்று மங்களாசாசனம் பண்ணுகிறார் ஆழ்வார். என்னுருவில் நின்ற என்பதாலே மிகவும் தாழ்மையே என்னுடைய சரீரத்திலே வந்து நின்றான் என்கிறார். இப்படிப்பட்ட(எந்தை – எனக்குத் தந்தை) எம்பெருமானுடைய தளிர் போன்ற திருவடிகள் என் தலைக்கு அலங்காரமாய் இருப்பதைப் பாரீர் என்று கூறி ஆச்சர்யத்துடன் மங்களாசாசனம் பண்ணுகிறார்.
அடியேனின் சிற்றறிவுக்கு எட்டின அளவிலே எம்பெருமான் சங்கல்பத்தாலும் ஆசார்ய கடாக்ஷத்தாலும் இந்தப் பதிப்பை அடியேனால் பதிவு செய்ய முடிந்தது.
குறை இருக்குமாயின் அடியேனைத் திருத்திப் பணிகொள்ள பிரார்த்திக்கிறேன்.
தாசானு தாசன்
இராமானுஜ சிஷ்யன்
2011 in review
The WordPress.com stats helper monkeys prepared a 2011 annual report for this blog.
Here’s an excerpt:
A San Francisco cable car holds 60 people. This blog was viewed about 1,900 times in 2011. If it were a cable car, it would take about 32 trips to carry that many people.
திருநெடுந்தாண்டகம்:
ஸ்ரீ:
ஸ்ரீமதே இராமானுஜாய நம:
ஸ்ரீமத் வரவர முநயே நம:
ஸ்ரீ பாலதந்வி குரவே நம:
இந்த பிரபந்தமானது இந்த உலகில் இருள் நீங்க திருவவதாரம் பண்ணின பன்னிரு ஆழ்வார்களுள் கடைக்குட்டி ஆழ்வாரான திருமங்கை ஆழ்வாரால் அருளிசெயப்பட்டது ஆகும். இந்த ஆழ்வார் அருளிச் செய்த திவ்யப்ரபந்தங்கள் ஆறு ஆகும். நான்கு வேதங்களையும், செந்தமிழ் வேதமாக தம்முடைய நான்கு பிரபந்தங்களின் மூலம் விவரித்து அருளினார் ஸ்ரீ நம்மாழ்வார் என்று ஸ்ரீ வைஷ்ணவ பெரியோர் பணிப்பர். “மாறன் பணித்த தமிழ் மறைக்கு மங்கையர்கோன் ஆரங்கம் கூற அவதரித்து” என்ற பெரிய ஜீயர் சுவாமியின் ஸ்ரீ சுக்தியின் படிக்கு, ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் அருளிச்செய்த ஆறு திவ்யப்ரபந்தங்களும் ஸ்ரீ நம்மாழ்வார் நான்கு வேதங்களின் சாரமாக அணுக்ருஹித்த பிரபந்தங்களுக்கு அங்கமாக அமைந்தது.
இந்த பிரபந்தம் கடைக்குட்டி ஆழ்வார் அருளிச் செய்த சரமப் பிரபந்தம் ஆகும்(கடைசிப் பிரபந்தம்).
விஷய சுகங்களாலே ஈர்க்கப்பட்டு திரிந்து கொண்டிருந்த திருமங்கை மன்னனை திருத்திப் பணிகொள்ள திருவுள்ளம் கொண்ட எம்பெருமான், இவரை சாஸ்திரம் கொண்டு திருத்த முடியாது என்று தீர்மானித்து, தம் அழகைக் காட்டி, ஆழ்வாரை எம்பெருமானின் அழகிலே ஈடுபடச்செய்து, திருமந்திரத்தையும் உபதேசித்தருளி, சௌசீல்யம் முதலான திருக்கல்யாண குணங்களையும், உகந்து அருளின திவ்யதேசங்களையும் காட்டிக் கொடுக்க ஆழ்வார் தானும் வாடினேன் வாடி வருந்தினேன் மனத்தால் என்று தொடங்கி எம்பெருமான் எழுந்தருளி இருக்கும் இடங்களே பரமப் ப்ராப்யம் என்று நினைத்து மங்களாசாசனம் பண்ணிக் கொண்டு வந்தார்.
ஆழ்வார் தானும் எம்பெருமானின் இயற்கையான இன்னருளால் பற்பல திவ்யதேசங்களை மங்களாசாசனம் பண்ணிக்கொண்டிருக்க, எம்பெருமான் இவரை திருநாட்டுக்கு அழைக்க திருவுள்ளம் கொண்டு, சம்சாரத்தின் உண்மையான தன்மையை ஆழ்வாருக்கு காட்டி கொடுத்தாராம். ஆழ்வாரும் சம்சாரத்தின் தன்மையை அறிந்து அஞ்சி நடுங்கி – “ஆற்றங்கரை வாழ் மரம் போல்” “காற்றத்திடைப்பட்ட கலவர் மனம் போல்” “பாம்போடு ஒரு கூரையில் பயின்றார் போல்” “இருபாடெரி கொள்ளியினுள்ளேரும்பே போல்”
என்று தம் அச்சத்தை பலவாறாக சொல்லி கதறுகின்றார்.
கடைசியாக அந்தோ அடியேற்கு அருளாய் உன் அருளே என்று விண்ணப்பித்த பிறகும், எம்பெருமானும் பசி பசி என்று அழுகிற குழந்தைக்கு சோரிடாத அன்னையைப் போல் இவருக்கு பரமபக்தி பிறக்கும் வரை நம்மைக் காட்டிக் கொடுப்பதில்லை என்று தீர்மானித்தான். ஆழ்வாரும் மிகுந்த தண்ணீர் தாகம் உள்ளவர்கள் தண்ணீரைக் கண்டதும் வாரி இறைத்துக் கொண்டு பருகுமாபோலே, திருமங்கை மன்னனும் திருக்குறுந்தாண்டகத்தில் எம்பெருமானை தலையால் வணங்கியும், வாயினால் மொழிந்தும், நெஞ்சினால் நினைத்தும் மங்களாசாசனம் பண்ணினார்.
ஆழ்வாரும் தம்மை காட்டிகொடுக்காத எம்பெருமான் மீது வருத்தமுற்று நம்முடைய அபேக்ஷிதத்தை பூர்த்திபண்ண முடியாத எம்பெருமான் எதற்கு, அவனுடைய குணங்கள் எதற்கு என்று வினவிக் கொண்டு இருக்கையில் எம்பெருமானும் இனி நாம் இவருக்கு முகம் காட்டாமல் இருந்தால் இந்த ஜகத்தானது ஈஸ்வரனற்றதாய்விடும் என்று திருவுள்ளம் கொண்டு காட்டிக் கொடுக்க அதனால் ஏற்பட்ட சந்தோஷத்தைப் பாசுரமாக மங்களாசாசனம் பண்ணுகிறார் இந்த திருநெடுந்தாண்டகத்திலே.
திருநெடுந்தாண்டக திவ்யப் பிரபந்தம் முப்பது பாசுரங்கள் கொண்டது ஆகும். முதல் பத்து பாசுரம் – ஆழ்வார் தானான தன்மையில் பாடியது, இராண்டாம் பத்து பாசுரங்கள் திருத்தாயாரின் வார்த்தையாக அருளிச் செய்யப்பட்டது, மூன்றாம் பத்து பாசுரங்கள் தலைமகள் பாசுரமாக அருளிச் செய்யப்பட்டது ஆகும். ஓராண் வழி ஆசார்ய குருபரம்பரையில் எழுந்தருளி இருந்த ஸ்ரீ பராசர பட்டர் இந்த திவ்யப்ரபந்தத்திலே மிகவும் ஈடுபாடு கொண்டவர்.
தாண்டகம் என்பது ஒரு வகை பிரபந்தம் என்றும், இஷ்ட தேவதையை இந்த பிரபந்தத்தைக் கொண்டு புகழ்ந்து பாடுவது என்றும், என் சீரில் அமைந்திருக்கும் என்றும், அடிதோறும் இருபத்தாறு எழுத்துக்கள் குறைவின்றி இருக்க வேணும் என்றும் மகாவித்வான் ஸ்ரீ பிரதிவாதி பயங்கரம் அண்ணா சுவாமியின் பாசுர வியாக்யான அவதாரிகையில் விளக்கம் அளித்துள்ளார்.
அடியேனது சிற்றறிவுக்கு எட்டின அளவிலே எம்பெருமானின் சங்கல்பத்தாலும் ஆசார்ய கடாக்ஷத்தாலும் திருநெடுந்தாண்டகம் என்னும் பிரபந்தத்தில் அமைந்த பாசுரங்களின் அர்த்தத்தை எல்லோருக்கும் புரியும் படியாக எழுத ஆரம்பித்துள்ளேன். அடியேனது பதிவுகளில் குறை இருக்குமாயின் இந்த சிறியனை திருத்திப் பணிகொள்ளப் பிரார்த்திக்கிறேன்.
தாசானு தாசன்
இராமானுஜ சிஷ்யன்
வாழி எதிராசன்!
திருப்பள்ளியெழுச்சி – ஐந்தாம் பாசுரம் முதல் பத்தாம் பாசுரம் வரை
ஸ்ரீ:
ஸ்ரீமதே இராமானுஜாய நம:
ஸ்ரீமத் வரவரமுநயே நம:
ஸ்ரீ பாலதந்வி குரவே நம:
ஐந்தாம் பாசுரம்:
புலம்பின புட்களும் பூம்பொழில்களின் வாய்*
போயிற்றுக் கங்குல் புகுந்தது புலரி*
கலந்தது குணதிசை கனைகடல் அரவம்*
களி வண்டு மிழற்றிய கலம்பகம் புனைந்த*
அலங்கலன் தொடையல் கொண்டு அடியிணை பணிவான்*
அமரர்கள் புகுந்தனர் ஆதலில் அம்மா*
இலங்கையர் கோன் வழிபாடு செய் கோயில்*
எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே*
ஐந்தாம் பாசுர அர்த்தம்:
முன் பாசுரத்தாலே வண்டுகள் உணர்ந்தமை கூறப்பட்டது. இந்த பாசுரத்திலே சோலைகளிலே பொழுது விடிந்தது கூட அறியாமல் மிகவும் சுகமாக உறங்கிக் கொண்டிருந்த பறவைகள் பொழுது விடிந்ததை கண்டு உணர்ந்தமை தெரிவிக்கப் படுகிறது.
(இங்கு பறவைகள் விஷயமாக சொன்னது சம்சாரிகளுக்கு ஒக்கும் என்று பெரியவாச்சான்பிள்ளை பணிப்பர் என்று ஸ்ரீ உ. வே. பிரதிவாதி பயங்கரம் அண்ணா சுவாமியின் உரைகளிலே கண்டு மகிழலாம்)
இரவு பொழுதானது கழிந்து, காலை பொழுது வந்தாயிற்று. கிழக்கு திசையிலே கடலினுடைய ஓசையானது கலந்தது. தேனைப் பருகும் வண்டுகள் சப்தியாநிற்கும் பல வகையான பூக்களாலே தொடுக்கப் பட்ட மாலைகளை தேவரீருடைய திருவடிகளிலே சமர்பிப்பதற்கு தேவர்களும் வந்து நிற்கின்றனர். அதனாலே இலங்கையர் கோன் என்ற விபீஷணன் வழிபாடு செய்த கோயிலிலே கண்வளர்ந்து அருளுகிற சுவாமியே! பள்ளி எழுந்தருளாய் என்று மங்களாசாசனம் பண்ணுகிறார்.
ஆறாம் பாசுரம்:
இரவியர் மணி நெடும் தேரொடும் இவரோ*
இறையவர் பதினொரு விடையரும் இவரோ*
மருவிய மயிலினன் அறுமுகன் இவனோ*
மருதரும் வசுக்களும் வந்து வந்தீண்டி*
புரவியோடு ஆடலும் பாடலும் தேரும்*
குமர தண்டம் புகுந்தீண்டிய வெள்ளம்*
அருவரை அனைய நின் கோயில் முன் இவரோ*
அரங்கத்தம்மா பள்ளி எழுந்தருளாயே*
ஆறாம் பாசுர அர்த்தம்:
பன்னிரண்டு ஆதித்யர்களும், ஏகாதச ருத்ரர்களும், தேவசேனாதிபதியான சுப்ரமணியனும், தேவதைகள் மற்றும் அஷ்ட வசுக்கள் ஆகிய எல்லோரும் தேவரீர் பள்ளி உணர்ந்தருளும் சமயத்தில் முதல் கடாக்ஷம் தம்மதாக இருக்க, மலை போன்று திரண்டு நிற்கிறார்கள், எம்பெருமான் பள்ளிஎழுந்தருளாயே என்று மங்களாசாசனம் பண்ணுகிறார்.
ஏழாம் பாசுரம்:
அந்தரத்தமரர்கள் கூட்டங்கள் இவையோ?*
அருந்தவ முனிவரும் மருதரும் இவரோ?*
இந்திரன் ஆனையும் தானும் வந்திவனோ?*
எம்பெருமான் உன கோயிலின் வாசல்*
சுந்தரர் நெருக்க விச்சாதரர் நூக்க*
இயக்கரும் மயங்கினர் திருவடித் தொழுவான்*
அந்தரம் பாரிடம் இல்லை மற்றிதுவோ*
அரங்கத்தம்மா! பள்ளி எழுந்தருளாயே*
ஏழாம் பாசுர அர்த்தம்:
அடியேனுக்கு ஸ்வாமியான தேவரீர் திருக்கோவிலின் வாயிலிலே தேவேந்திரனும், அவனுடைய வாகனமான ஐராவதமும், தேவர்களும் அவர்களுடைய பரிவாரங்களும், மகரிஷிகளும், யக்ஷர்களும், மற்றும் கந்தர்வர் நெருக்க சாதரர் தள்ளவும், தேவரீருடைய திருவடிகளை சேவிக்க வந்து நிற்கின்றனர், அரங்கத்தம்மா பள்ளிஎழுந்தருளாய் என்று மங்களாசாசனம் பண்ணுகிறார் ஆழ்வார்.
எட்டாம் பாசுரம்:
வம்பவிழ் வானவர் வாயுறை வழங்க*
மாநிதி கபிலை ஒண் கண்ணாடி முதலா*
எம்பெருமான் படிக்கமலம் காண்டற்கு*
ஏற்பன வாயின கொண்டு நன் முனிவர்*
தும்புரு நாரதர் புகுந்தனர் இவரோ*
தோன்றினன் இரவியும் துளங்கொளி பரப்பி*
அம்பர தலத்தில் நின்று அகல்கின்றது இருள் போய்*
அரங்கத்தம்மா! பள்ளி எழுந்தருளாயே*
எட்டாம் பாசுர அர்த்தம்:
தேவரீருக்கு சமர்பிப்பதற்காக சிறந்த மாநிதியான சங்கநிதி மற்றும் பத்மநிதிகளை கையிலே வைத்துக்கொண்டு தேவர்களும், காமதேனுவும், ஒளி பொருந்திய கண்ணாடி மற்றும் தேவரீருக்கு கண்டருள்வதர்க்கு உகக்கும் அனைத்து உபகாரங்களையும் எடுத்துக் கொண்டு மகரிஷிகளும், நாரதரும் வந்து நின்றார்கள். கதிரவனும் தன்னுடைய தேஜஸ்சை எங்கும் பரவச் செய்து உதயமாக, இருளானது ஆகாசத்திலிருந்து நீங்கியது. அரங்கத்தம்மா! பள்ளி எழுந்தருளாய் என்று மங்களாசாசனம் பண்ணுகிறார் இந்த பாசுரத்தில்.
ஒன்பதாம் பாசுரம்:
ஏதமில் தண்ணுமை ஏக்கம் மத்தளி*
யாழ் குழல் முழுவமோடு இசை திசை கெழுமி*
கீதங்கள் பாடினர் கின்னரர் கெருடர்கள்*
கந்தருவர் அவர் கங்குலுள் எல்லாம்*
மாதவர் வானவர் சாரணர் இயக்கர்*
சித்தரும் மயங்கினர் திருவடித் தொழுவான்*
ஆதலில் அவர்க்கு நாளோலக்கம் அருள*
அரங்கத்தம்மா! பள்ளி எழுந்தருளாயே*
ஒன்பதாம் பாசுர அர்த்தம்:
வாத்தியம், மத்தளம், வீணை, புல்லாங்குழல் ஆகியவற்றைக் கொண்டு திக்குகள் எங்கும் இசை கூட்டி பாட்டு பாடக் கூடியவர்களான கின்னரர்களும், கருடர்களும், கந்தர்வர்களும், மகரிஷிகளும், தேவர்களும், யக்ஷர்களும் மற்றும் சித்தர்களும் தேவரீருடைய திருவடித் தாமரைகளை சேவிப்பதற்காக இரவுப் பொழுது முழுவதும் மோஹித்துக் கிடந்தனர். அவர்களுக்கு பகல் ஓலக்கம் அருள எழுந்தருள வேணும் என்று மங்களாசாசனம் பண்ணுகிறார் ஆழ்வார்.
பத்தாம் பாசுரம்:
கடிமலர்க் கமலங்கள் மலர்ந்தன இவையோ?*
கதிரவன் கனைகடல் முளைத்தனன் இவனோ*
துடி இடையார் சுரி குழல் பிழிந்துதறி*
துகில் உடுத்தேறினர் சூழ் புனல் அரங்கா*
தொடை ஒத்த துளவமும் கூடையும் பொலிந்து*
தோன்றியதோள் தொண்டரடிப்பொடி என்னும் அடியனை*
அளியன் என்றருளி உன் அடியார்க்கு ஆட்படுத்தாய்*
பள்ளி எழுந்தருளாயே!
பத்தாம் பாசுர அர்த்தம்:
திருக்காவேரியாலே சூழப் பட்ட திருவரங்கத்திலே கண்வளர்ந்து அருளும் அரங்கனே! பரிமளம் மிக்க தாமரைப் பூக்கள் மலர்ந்துவிட்டன. தாமரையை மலரச் செய்யும் கதிரவனும் தோன்றிவிட்டான். மாதர்கள் தம் குழலைப் பிழிந்து உதறிவிட்டு அவரவர்களுடைய ஆடைகளை அணிந்து கொண்டு கரையேறிவிட்டார்கள். பூக்குடலையும் தோளுமாக வந்து நிற்கும் அடியனை(தாசனை) அங்கீகரித்தருளி அத்தாணிச் சேவகம் பண்ணிக் கொண்டிருக்கும் பாகவதர்களின் திருவடிகளில் ஆளாக்க தேவரீர் எழுந்தருள வேணும் என்று மங்களாசாசனம் பண்ணுகிறார்.
அடியேனது சிற்றறிவுக்கு எட்டின அளவிலே எழுதியுள்ளேன். உரையில் குறை இருக்குமாயின் அடியேனைத் திருத்திப் பணிகொள்ளுமாறு பெரியோர்களைப் பிரார்த்திக்கிறேன்.
தாசானு தாசன்
இராமானுஜ சிஷ்யன்
வாழி யதிராஜன்!
திருப்பள்ளியெழுச்சி:
ஸ்ரீமதே இராமானுஜாய நம:
ஸ்ரீமத் வரவர முநயே நம:
ஸ்ரீ பாலதந்வி குரவே நம:
மூன்றாம் பாசுரம்:
சுடரொளி பரந்தன சூழ் திசையெல்லாம்*
துன்னிய தாரகை மின்னொளி சுருங்கி*
படரொளி பசுத்தனன் பனி மதி இவனோ*
பாயிறுள் அகன்றது பைம்பொழிற் கமுகின்*
மடலிடைக் கீறி வண் பாளைகள் நாற*
வைகறை கூர்ந்தது மாருதம் இதுவோ*
அடலொளி திகழ் தரு திகிரியந்தடக்கை*
அரங்கத்தம்மா! பள்ளி எழுந்தருளாயே*
பாசுர அர்த்தம்:
கண்ட இடமெங்கும் சூரிய ஒளி பரவ, நக்ஷத்ரங்களினுடைய ஒளியும் குளிர்ந்த சந்திரனுடைய ஒளியும், இருளும் நீங்கியது. விடியற் காலையில் வீழும் காற்றானது, பசுமையோடு காணப்படும் பாக்குமரங்களினுடைய மடலைக் கீற, அதனாலே பாக்குமரத்தினுடைய அழகிய பாளைகள் பரிமளித்து வீசா நின்றது. தேஜசு மிக நிறைந்த திருவாழி ஆழ்வானை அழகிய திருக்கையிலே உடைய அரங்கத்தம்மா பள்ளி எழுந்தருளாய் என்று மங்களாசாசனம் பண்ணுகிறார்.
நான்காம் பாசுரம்:
மேட்டிள மேதிகள் தளை விடும் ஆயர்கள்*
வேய்ங்குழல் ஓசையும் விடை மணிக் குரலும்*
ஈட்டிய இசை திசை பரந்தன வயலுள்*
இரிந்தின சுரும்பினம் இலங்கையர் குலத்தை*
வாட்டிய வரிசிலை வானவரேறே*
மாமுனி வேள்வியைக் காத்து* அவபிரதம்
ஆட்டிய அடுதிறல் அயோத்தி எம் அரசே*
அரங்கத்தம்மா! பள்ளி எழுந்தருளாயே*
பாசுர அர்த்தம்:
எருதுகளை மேய்ச்சலுக்கு கட்டவிழ்த்து விடும் இடையர்கள் ஊதுகிற புல்லாங்குழலின் நாதமும், எருதுகளின் கழுத்தில் கட்டப் பட்டுள்ள மணிகளின் ஓசையும், இவை இரண்டின் ஓசையால் ஏற்பட்ட அழகான இசையும் அனைத்து திசைகளிலும் பரவி ஆயிற்று. வண்டுகளும் திரள் திரளாக ஆரவாரித்து கிளம்பிவட்டன. ராக்ஷச குலத்தை அழித்த அழகிய சார்ங்கத்தை உடைய வானவர் தலைவனே, விஷ்வாமித்ரரின் யாகத்தை நிறைவேற்றுவித்து, விரோதிகளை அழித்தவனே, அயோத்திக்கு அரசனே, எமக்குத் தலைவனே! அரங்கத்தம்மா பள்ளி எழுந்தருளாய்.
தாசானு தாசன்
இராமானுஜ சிஷ்யன்
திருப்பள்ளியெழுச்சி:
ஸ்ரீ:
ஸ்ரீமதே இராமானுஜாய நம:
ஸ்ரீமத் வரவர முநயே நம:
முதல் பாசுரம்:
கதிரவன் குணதிசைச் சிகரம் வந்தணைந்தான்*
கன இருள் அகன்றது காலைஅம் பொழுதாய்*
மதுவிருந்தொழுகின மாமலர் எல்லாம்*
வானவர் அரசர்கள் வந்து வந்தீண்டி*
எதிர் திசை நிறைந்தனர் இவரொடும் புகுந்த*
இருங்களிற்றீட்டமும் பிடியொடு முரசும்*
அதிர்தலில் அலைகடல் போன்று உளதெங்கும்*
அரங்கத்தம்மா பள்ளி எழுந்தருளாயே!
பாசுர அர்த்தம்:
திருவரங்கத்தில் பள்ளிகொண்டு இருக்கும் பெருமானே, கிழக்கு திசையிலே சூரியன் உதிக்க, இருளானது நீங்கியது. அழகிய காலைப் பொழுது வந்தவுடன், மலர்கள் எல்லாம் விகாசம் அடைந்து தேன் நிறைந்து காணப்பட்டன. தேவர்களும் அரசர்களும் தெற்கு பக்கத்திலே திரண்டனர். அவர்களோடு வந்த யானை கூட்டங்களும், பெரிய வாத்தியங்களும் சப்திக்கும் போது எழும் ஒளியானது கடலோசையை ஒத்து இருந்தது. ஆதலால் தேவரீர் திருப்பள்ளியை விட்டு எழ வேணும் என்று மங்களாசாசனம் பண்ணுகிறார்.
இரண்டாம் பாசுரம்:
கொழுங்கொடி முல்லையின் கொழு மலர் அணவிக்*
கூர்ந்தது குணதிசை மாருதம் இதுவோ*
எழுந்தன மலரணைப் பள்ளிகொள் அன்னம்*
ஈன் பனி நனைந்த தம் இருஞ்சிறகுதறி*
விழுங்கிய முதலையின் பிலம்புரை பேழ் வாய்*
வெள்ளையிறுற அதன் விடத்தினுக்கு அனுங்கி*
அழுங்கிய ஆனையின் அருந்துயர் கெடுத்த*
அரங்கத்தம்மா! பள்ளி எழுந்தருளாயே*
பாசுர அர்த்தம்:
காற்றானது முல்லைச் செடியில் உள்ள மலர்களைச் சூழ்ந்து கொண்டு வீசா நின்றது. புஷ்பங்களிலே சயனிக்கும் பறவைகளானது பனி நிறைந்த தங்களுடைய அழகிய சிறகுகளை உதறிக் கொண்டு உறக்கம் களைந்து எழுந்து ஆயிற்று. முதலையின் பெரிய வாயிலுள்ள பற்களாலே கடிபட்டு, அம்முதலையின் பல்விஷத்தாலே மிகவும் நோவுபட்ட கஜேந்திர ஆழ்வானுடைய துக்கத்தை போக்கி அருளிய அரங்கத்தம்மா பள்ளி எழுந்தருளாய் என்று மங்களாசாசனம் பண்ணுகிறார் இப்பாசுரத்தில் ஆழ்வார்.
அடியேனது பதிவில் குறை இருக்குமாயின் அடியேனைத் திருத்திப் பணிகொள்ளுமாறு பிரார்த்திக்கிறேன்.
தாசானு தாசன்
இராமானுஜ சிஷ்யன்
2010 in review
The stats helper monkeys at WordPress.com mulled over how this blog did in 2010, and here’s a high level summary of its overall blog health:

The Blog-Health-o-Meter™ reads Fresher than ever.
Crunchy numbers

A helper monkey made this abstract painting, inspired by your stats.
A Boeing 747-400 passenger jet can hold 416 passengers. This blog was viewed about 2,900 times in 2010. That’s about 7 full 747s.
In 2010, there were 17 new posts, growing the total archive of this blog to 72 posts.
The busiest day of the year was July 15th with 73 views. The most popular post that day was About.
Where did they come from?
The top referring sites in 2010 were maransdog.com, maransdog.org, mail.yahoo.com, geetham.net, and thakkudupandi.blogspot.com.
Some visitors came searching, mostly for vainavam, வைஷ்ணவர்கள், ஸ்ரீவைஷ்ணவ, கர்ம யோகம், and திருப்பாணாழ்வார்.
Attractions in 2010
These are the posts and pages that got the most views in 2010.
About January 2009
ஸ்ரீவைஷ்ணவ சமயாசார நிஷ்கர்ஷம் January 2010
ஸ்ரீ வைஷ்ணவர்கள் அவஸ்யம் தெரிந்து கொள்ள வேண்டிய சில விஷயங்கள்: May 2009
5 comments
அமலனாதிபிரான் பாசுர விளக்கம் (முதல் ஐந்து பாசுரங்கள் மட்டும்) April 2010
பெரிய திருமொழி ஒண்ணாம் பத்து எட்டாம் திருமொழி September 2010
10 comments
திருப்பள்ளியெழுச்சி:
ஸ்ரீ:
ஸ்ரீமதே இராமானுஜாய நம:
ஸ்ரீமத் வரவர முநயே நம:
திருப்பள்ளியெழுச்சி என்னும் திவ்யப்ப்ரபந்தத்தை அருளிச் செய்தவர் ஸ்ரீ தொண்டரடிப்பொடி ஆழ்வார் ஆகும். பத்து பாசுரங்களை அருளிச் செய்துள்ளார். ஸ்ரீ வைணவர்கள் அனுதினமும் அனுசந்திக்க வேண்டிய நித்யானுசந்தானத்திலே இப்ப்ரபந்தமும் அடங்கும். எம்பெருமான் உகந்து எழுந்தருளி இருக்கும் திவ்யதேசங்களிலும் ஸ்ரீ வைணவப் பெரியோர்களின் திருமாளிகைகளிலும் எம்பெருமானுக்கு நித்ய ஆராதனம் நடைபெறும்போது அனுசந்திப்பது வழக்கம். இந்த பிரபந்தத்திலே ஆழ்வார் நிறைவான அர்த்தங்களை மிகவும் எளிமையாக பிரசாதித்துள்ளார். நாமும் ஆழ்வார் காட்டின வழியிலே இந்த பாசுரங்களைக் கொண்டு எம்பெருமானுக்கு கைங்கர்யம் பண்ணுவோம்.
திருவரங்க நாதனைத் துயிலெழுப்பும் பாசுரங்கள்:
ஸ்ரீ திருமாலை ஆண்டான் அருளிச் செய்த தனியன்:
தமேவ மத்வா பரவாசுதேவம்
ரங்கேஷயம் ராஜவதர்ஹநீயம்
ப்ராபோதிகீம் யோக்ருத சுக்திமாலாம்
பக்தாங்க்ரிரேணும் பகவந்தமீடே
தனியன் விளக்கம்:
அரசனைப் போல் பூஜிக்கத் தகுந்தவரும், திருவரங்கத்திலே பள்ளி கொண்டிருக்கும் எம்பெருமானை பரவாசுதேவனாக பிரதிபத்தி பண்ணி, திருப்பள்ளி உணர்த்துமதான திவ்யப்ரபந்தத்தை(திருப்பள்ளிஎழுச்சியை) அருளிச் செய்தவருமான தொண்டரடிப்பொடி ஆழ்வாரை துதிக்கிறேன்.
ஸ்ரீ திருவரங்கப் பெருமாள் அரையர் ஸ்வாமி அருளிச் செய்த தனியன்:
மண்டங்குடி என்பர் மாமறையோர் மன்னிய சீர்*
தொண்டரடிப்பொடி தொன்னகரம்* வண்டு
திணர்த்த வயல் தென்னரங்கத்தம்மானைப்*
பள்ளி உணர்த்தும் பிரான் உதித்த ஊர்*
தனியன் விளக்கம்:
இந்தத் தனியனில் ஆழ்வார் திருவவதரித்த நகரம் திருமண்டங்குடி என்று அருளிச் செய்கிறார். வண்டுகள் நிறைந்து இருக்கும் கழனிகள் சூழ்ந்த அழகிய திருவரங்கத்தில் எழுந்தருளி இருக்கும் எம்பெருமானுக்கு திருப்பள்ளி உணர்த்துபவரரும், தொண்டரடிப்பொடி என்னும் திருநாமம் கொண்ட இந்த ஆழ்வார் திருவவதரித்த இடமாவது – மாமறையோர்கள்(சிறந்த வைதிகர்கள்) வாழ்வதற்கு ஏற்ற இடமான திருமண்டங்குடி என்னும் நகரம் என்று பெரியோர்கள் பகர்வர்.
பாசுர அர்த்தம் அடுத்த பதிப்பிலே கொடுக்கப் படும்.
அடியேன் தாசானு தாசன்
இராமானுஜ சிஷ்யன்
ஸப்தகாதை
முகவுரை:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீமத் வரவர முநயே நம:
ஸ்ரீ பாலதந்வி மஹா குரவே நம:
முகவுரை:
மாதங்களிலே முதல் மாதம் எது என்று யாரையேனும் கேட்டால் – சித்திரை மாதம் என்று கூறுவார்கள். அதே போன்று நமது பரம வைதிக மதமான ஸ்ரீவைஷ்ணவ சம்ப்ரதாயத்திலே முதலாவது மாதமாக பூருவர்களால் கொண்டாடப்பட்டது ஐப்பசி மாதமாகும்.
ஸ்ரீவைஷ்ணவ மதத்திற்கு புத்துயிர் ஊட்டிய முதல் ஆழ்வார்களில் முதல் ஆழ்வாரான ஸ்ரீ பொய்கை ஆழ்வார் அவதரித்த தினம் ஐப்பசித் திருவோணம். அதே போன்று சத்சம்ப்ரதாய இரகசிய அர்த்தங்களை சம்சாரி சேதனர்களுக்கு அனுக்ருஹிக்க திருவவதாரம் பண்ணின சுவாமி பிள்ளை உலகாரியனின் திருநக்ஷத்திரமும் ஐப்பசித் திருவோணம் ஆகும்.
ஸ்ரீ வசனபூஷன அர்த்தத்தை எளிமையாக பிரசாதித்த ஸ்ரீ விளாஞ்சோலைப்பிள்ளையின் திருவவதாரம் நிகழ்ந்ததும் ஐப்பசித் திங்களிலே ஆகும்(ஐப்பசி உத்திரட்டாதி). மேலும் பெரிய ஜீயர் சுவாமி உட்பட பலஸ்ரீவைஷ்ணவ வித்வான்கள் இந்தத் திங்களிலே அவதரித்திருக்கிறார்கள்.
சர்வேச்வரனான எம்பெருமான் பல திருவவதாரங்கள் செய்யுமாபோலே அவனுடைய அடியார்களும் பல அவதாரங்களைச் செய்வது என்பது உலகம் அறிந்த விஷயமே. அப்படி அவதரித்த மகான்களில் பிள்ளை உறங்காவில்லி தாசர் சுவாமி எம்பெருமானாருக்கு அந்தரங்கறாய் இருந்தது போல், சுவாமி பிள்ளை உலகாரியனுக்கு அந்தரங்க சிஷ்யராய் இருந்து அவர் திருவடியில் ஆச்ரயித்து சகல சாஸ்த்ரார்தங்களையும் கேட்டு உஜ்ஜீவிக்கப் பெற்றவர் சுவாமி விளாஞ்சோலைப்பிள்ளை.
பெரிய ஜீயர் அருளிச் செய்த உபதேசரத்தினமாலை என்னும் ஆசார்ய ரத்ன ஹார பிரபந்தத்திலே ஸ்ரீ பிள்ளை உலகாரியன் அருளிச் செய்த ஸ்ரீ வசனபூஷனம் என்னும் சம்பிரதாய இரகசிய பிரபந்தத்தின் பெருமையை எடுத்துக் காட்டியபோது, அதிலே சுவாமி சாதித்த விஷயங்களை ஒருவர் அனுஷ்டித்தாலும் ஜகத்தே வாழ்ந்து போகும் என்ற மேன்மையையும் தெளிவாக அனுக்ருஹிக்கிறார்.
சுவாமி விளாஞ்சோலைப்பிள்ளையும் ஆசார்யன் இட்ட வழக்காக வாழ்ந்து, ஆசார்யன் சுவாமி உலகாரியன் அருளிச் செய்த ரத்தினம் போன்ற ஸ்ரீ வசன பூஷணம் என்னும் ரகச்யத்திலே ஊன்றினவராயும், அதில் உள்ள அர்த்தவிஷேங்களை அனுபவிப்பதைத் தவிர வேறு ஒன்று அறியாதவராகவும் வாழ்ந்து வந்தார் என்பதும் பிரசித்தம் ஆகும்.
பகவத் கீதைக்குள் சரமச் சுலோகம் சிறப்பெய்தினது போல, ஸ்ரீ வசனபூஷணத்திற்குள் சரமபர்வநிஷ்டாப் பிரகரணம் சிறப்புற்றது. ஆகையால் அந்த பிரகரணத்தில் உள்ள அர்த்த விசேஷங்களை எல்லாம் திரட்டி லகுவான ஒரு பிரபந்தம் அருளிச்செய்ய திருவுள்ளம் கொண்டு திருவாசிரியம் போலே ஏழு பாசுரங்களாக ஸப்தகாதை என்னும் பிரபந்தத்தை அருளிச் செய்தார்.
ஸ்ரீ மதுரகவிகளும், சுவாமி வடுகநம்பியும் தங்கள் சரமபர்வநிஷ்டையை அனுஷ்டானத்தாலே காட்டியது போல இந்த சுவாமியும் காட்டினர் என்பதும் ஸ்ரீவைஷ்ணவ பெரியோர்கள் அறிந்ததே.
முதல் பாசுரம்:
அம்பொன் அரங்கர்க்கும் ஆவிக்கும் அந்தரங்க
சம்பந்தங் காட்டித் தடைகாட்டி – உம்பர்
திவமென்னும் வாழ்வுக்குச் சேர்ந்தநெறி காட்டும்
அவனன்றோ ஆசாரியன்.
விளக்கம்:
இந்த பாசுரத்தால் ஆசாரியன் படியைப் பேசுகிறார். ஜீவாத்மாவுக்கு பரமாத்மாவோடே நவவிதசம்பந்தம் உள்ளன. பிதாபுத்திர பாவம், ரக்ஷ்ய ரக்ஷக பாவம், சேஷ சேஷி பாவம், பர்த்ரு பார்யா பாவம், ஜ்ஞாத்ரு ஜஞேய பாவம், ஸ்வத்ஸ்வாமி பாவம், ஆதார ஆதேய பாவம், சரீர ஆத்ம பாவம், போக்த்ரு போக்ய பாவம் என்கிற ஒன்பது விதமான சம்பந்தங்கள் திருமந்திரமானது காட்டும். அது மட்டும் இல்லாமல் நம: என்கிற பதத்தாலே மூன்று விரோதிகளான ஸ்வரூப விரோதி, உபாய விரோதி மற்றும் ப்ராப்யவிரோதி ஆகியவற்றையும், ப்ராப்யமான புருஷார்தத்தையும், ப்ராபகமான உபாயத்தையும் காட்டும். இதை நமக்குக் காட்டி உணர்த்துபவனே ஆசார்யன் என்று அருளிச்செய்கிறார்.
இரண்டாம் பாசுரம்:
அஞ்சு பொருளும் அளித்தவன் பால் அன்பிலார்
நஞ்சில் மிகக்கொடியர் நாம் சொன்னோம் – நஞ்சுதான்
ஊனை முடிக்கும் துயிர் முடிக்கும் என்று
ஈனமிலார் சொன்னார் இவை
பாசுர விளக்கம்:
அஞ்சு பொருள் என்ற சொல் அர்த்த பஞ்சகத்தைக் குறிக்கும். அர்த்த பஞ்சகமானது ச்வஸ்வரூபம், பரஸ்வரூபம், உபாயஸ்வரூபம், விரோதிஸ்வரூபம் மற்றும் உபேயஸ்வரூபம் ஆகியவை ஆகும். “மிக்க இறை நிலையும் மொய்யாம் உயிர்நிலையும் தக்கநெறியும் தடையாகித் தொக்கியலும் ஊழ்வினையும் வாழ்வினையும் ஓதும்” என்னும் திருவாய்மொழித்தனியனில் அர்த்தபஞ்சகம் இன்னவை என்று நிரூபிக்கப்பட்டிருகின்றமையை உணர வேணும் இங்கே. இப்படிப் பட்ட அஞ்சு பொருள்களை அளித்தவனான ஆசார்யன் பக்கலிலே அன்பு இல்லாதவர்கள் நஞ்சை விட மிககொடியவர்கள் என்கிறார். நஞ்சானது வெறும் தேக நாசத்தையே விளைவிக்கும், ஆனால் ஆசார்யன் பக்கல் அன்பில்லாமை ஆனது ஆத்மனாசத்தையே விளைவிக்கும் என்றது ஸ்ரீவசனபூஷணம். இதனையே இந்த பாசுரத்தால் உறுதி படுத்துகிறார்.
குறிப்பு: ஸ்ரீ வசனபூஷண சூத்ரம்: ” இவனுக்கு சரீராவசானத்தளவும் ஆச்சார்ய விஷயத்தில், ” என்னைத் தீ மனம் கெடுத்தாய்”, “மருவித் தொழும் மனமே தந்தாய்” என்று உபகார ஸ்ம்ருதி நடக்க வேணும்.
மூன்றாம் பாசுரம்:
பார்த்த குருவின் அளவில் பரிவின்றிச்
சீர்த்தமிகு ஞானம் எல்லாம் சேர்ந்தாலும் – கார்த்தகடல்
மண்ணின்மேல் துன்புற்றும் அங்குமே தேங்காமல்
நண்ணுமே கீழா நரகு.
பாசுர விளக்கம்:
எத்தனை ஞான விகாசம் உடையவனாய் இருந்தாலும், விசேஷ கடாக்ஷம் செய்து அருளினவனான ஆசார்யன் இடத்தில் பரிவு இல்லையாகில் அதோகதியே என்று ச்திரமாகச் சொல்கிறார் இப்பாசுரத்தில். அதாவது சம்ஸ்க்ருத வேதாந்த ஞானம், திராவிட வேதாந்த ஞானம் மற்றும் ரஹஸ்யார்த்த ஞானம் இவற்றை அறிந்தவனாயினும், பார்த்த குருவின் அளவில் பரிவில்லையாகில் இந்த கடல் சூழ்ந்த மண்ணுலகில் அனுபவிக்கக்கூடிய க்லேசங்களை எல்லாம் அனுபவித்துக்கொண்டு நித்ய சம்சாரியாய்க் கிடந்து உழல நேரிடும் என்பதை” தேங்காமல் நண்ணுமே கீழா நரகு” என்பதனால் தெளிவு படுத்துகிறார் சுவாமி.
நான்காம் பாசுரம்:
தன்னை இறையைத் தடையைச் சரநெறியை
மன்னு பெருவாழ்வை ஒரு மந்திரத்தின் – இன்னருளால்
அஞ்சிலுங் கேடோட வளித்தவன் பாலன்பிலார்
நஞ்சிலும் கேடு என்றிருப்பன் நான்*
பாசுர விளக்கம்:
பிராப்யஸ்ய பிரம்மனோ ரூபம், ப்ராப்துச்ச்ச ப்ரத்யகாத்மந:, ப்ராப்த்யுபாயம் பலம் ப்ராப்தேஸ் ததா, ப்ராப்தி விரோதிச என்கிற ஸ்லோகத்தில் சொல்லப்பட்ட அர்த்தபஞ்சகக் கிராமமே இங்கு விரிவாகக் கூறுகிறார். இந்த அர்த்தபஞ்சகமும் திரு அஷ்டாக்ஷர மகாமந்திரத்திலிருந்து ஆசார்யானாலே உபதேசிக்கப்படும். அதாவது பிரணவத்தில் மகாரத்தாலும், லுப்தசதுர்த்தியாலும், உகாரத்தாலும் ஸ்வஸ்வரூபம், அகாரத்தாலே பரஸ்வரூபம், நமஸ்சில் ம: என்பதாலே விரோதிஸ் ஸ்வரூபமும், நம: என்பதால் உபாயஸ் ஸ்வரூபமும், நாராயணாய என்பதனாலே உபேயஸ் ஸ்வரூபமும் ஆகும். ஆக அச்சர்யன் பக்கலிலே அன்பிலாதார் நஞ்சிலும் கேடு என்கிறார் இந்த பாசுரத்தில்.
ஐந்தாம் பாசுரம்:
என் பக்கல் ஓதினார் இன்னார் எனும் இயல்வும்
என்பக்கல் நன்மை எனும் இயல்வும் – மன்பக்கல்
சேவிப்பார்க் கன்புடையோர் சன்ம நிருபனமும்
ஆவிக்கு நேரே அழுக்கு.
பாசுர விளக்கம்:
கீழ் பாசுரத்தால் சிஷ்யனுக்குண்டான குறைகளைப் பேசினார். இந்த பாசுரத்தில் ஆசாரியனுக்கு நேரக்கூடிய அவத்யத்தைப் பேசுகிறார். உபதேசிக்கும் ஆசார்யன் ஆனவன் உபதேச சமயத்திலே தன்னுடைய ஆசார்யனே இவனுக்கும் உபதேசகர்த்தா என்றும், தான் அவ்வாசார்யனுக்கு கரண பூதனாகவும் பிரதிபத்திப் பண்ணிக்கொண்டும் உபதேசிக்க வேண்டுமாம், அப்படிச் செய்யாது தன்னை இவனுக்கு ஆசார்யன் என்று நினைப்பது தவறு என்று முதல் அடியில் தெரிவிக்கிறார். மேலும் உபதேச பாத்ரபூதனானவனையும் தன்னைப் போல தன்னுடைய ஆசாரியனுக்கு சிஷ்யனாக பிரதிபத்திப் பண்ணிக்கொண்டு உபதேசிக்க வேண்டுமாம். அதைச் செய்யாமல் இவன் தனக்கு சிஷ்யன் என்று நினைப்பதும் தன்னிடத்தில் ஆசார்யத்வம் உள்ளது என்று நினைப்பதும் தவறு என்கிறார் அடுத்த அடியாலே. மகா பாகவதர்களிடத்தில் பகவத் சம்பந்த பிரயுக்தமான சிறப்பைப் பாராதே அவரவர்களுடைய ஜன்மங்களை நிரூபிக்கையாவது மகா அபசாரம் என்பதை அடுத்த அடியில் தெரிவிக்கிறார். இவை எல்லாம் ஆவிக்கு நேரே அழுக்கு என்றும் உறுதிபடுத்துகிறார் அடுத்த அடியில்.
ஆறாம் பாசுரம்:
அழுக்கென்று இவை அறிந்தேன் எம்பொன் அரங்கா
ஒழித்தருளாய் உள்ளில் வினையைப் – பழிப்பிலா
என்னாரியர்காக எம்பெருமானார்க்காக
உன்னா ரருட்க்காக உற்று.
பாசுர விளக்கம்:
ஆவிக்கு அழுக்காகத் தெரிவிக்கப்பட்ட விஷயங்களைப் பலர் அழுக்கென்று அறிந்திருந்தும், பிரகிருதி வாசனையாலே இவ்வழுக்குகளில் சிக்கி நசிக்கிரார்களே என்று நினைத்து, அது தமக்கு நேராது இருக்க வேணும் என்று எம்பெருமான் திருவடிகளில் பிரார்த்தனை செய்கிறார் இப்பாட்டில். மேலும் அச்மதாசார்யரான பிள்ளை உலகாரியனுக்காகவும், உலகுக்கு ஓர் உயிரான சுவாமி எம்பெருமானாருக்காகவும் இத்திருவருளை அடியேனுக்கு அளிக்க வேணும் என்றும் பிரார்த்திக்கிறார்.
ஏழாம் பாசுரம்:
தீங்கேது மில்லாத தேசிகன் தன் சிந்தைக்குப்
பாங்காக நேரே பரிவுடையோர் – ஓங்காரத்
தேரின்மேல் ஏறிச் செழுங்கதிரின் ஊடுபோய்
சாருவரே அந்தாமந் தான்.
பாசுர விளக்கம்:
தீங்கு ஏதும் இல்லாதவனும், மகா உபகாரகனுமான ஆசார்யனுடைய திருவுள்ளத்திற்கு அனுகூலமாகவும், அவருடைய திருமேனியைப் பேணிக்கொண்டு உண்மையான அன்புடையவர்களாகவும் இருப்பவர்களான சத்சிஷ்யர்கள் பெரும் பேற்றை இந்த பாசுரத்தால் விவரிக்கிறார்.
வையம் மன்னி வீற்றிருந்து என்று சொல்லும் படி, இருக்கும் நாட்களிலே உபயவேதாந்த காலக்ஷேப கோஷ்டியோடும், ததியாராதன ஸ்ரீயோடும், உகந்தருளின நிலங்களில் மங்களாசாசன ஸ்ரீயோடும், தத் கைங்கர்ய ஸ்ரீயோடும் சுவாமி எம்பெருமானாரைப் போல நெடும் காலம் வாழ்ந்திருந்து சரீராவசானத்தில் பரமபக்தி தலையெடுத்து, பிரணவமாகிற தேரின் மேல் ஏறி சாச்வதச்தானமாகிய திருநாடே கிடைக்கப் பெறுவார்களாம்.
முடிவுரை:
ஸ்ரீ வசனபூஷனம் என்பது ஸ்ரீ பிள்ளை உலகாரியன் அருளிச்செய்த அஷ்டாதச இரகசிய அர்த்தங்களில் சம்பிரதாய விஷயமாக அருளிச் செய்த ஐந்து ரகச்யங்களுள் ஒன்று ஆகும். இரகசிய கிரந்தங்களை சதாசார்யன் உபதேசிக்க சத்சிஷ்யன் உள்ளபடி அறிய வேணும் என்பது க்ரமம் ஆகும். அதுவும் தொடர்ச்சியாக ஒருவருட காலம் கூட ஆகலாம். ஆனால் இந்தக் க்ரந்தத்திலே ஸ்வாமி மிகவும் தெளிவாக எளிமையாக அடியேன் போன்ற பரம சம்சாரிகளுக்கும் புரியும் படியாக ஒப்பு உயர்வற்ற க்ரந்தமான ஸ்ரீ வசனபூஷன இரகசிய அர்த்தங்களை எடுத்துரைக்கிறார். அமைந்தது ஏழே பாசுரம், விஷயமோ ஒப்பு உயர்வற்ற ஸ்ரீ வசனபூஷன அர்த்தம். நாமும் பரம பாக்யசாலி ஆனோம்.
அடியேனுடைய சிற்றறிவுக்கு எட்டின அளவிலே எழுதியுள்ளேன். ஸ்ரீவைஷ்ணவ பெரியோர்கள் உரைகளில் குறை இருந்தால் அடியேனைத் திருத்திப் பணிகொள்ளப் பிரார்த்திக்கிறேன்.
இராமானுஜ சிஷ்யன்